நோயைக் குணப்படுத்துவதா? அறிகுறியை மறைப்பதா?

இந்த விஜயத்தைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக வௌியிட்டிருந்த ஊடக அறிக்கையில், ‘சர்வதேச நாணய நிதிய குழு (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் ஆதரிக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து, அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியது. குறித்த கலந்துரையாடல்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பாக, உத்தியோகத்தர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டுவதற்கான கலந்துரையாடல் தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

‘கலந்துரையாடல் தொடரும்’ என்ற குறிப்பு, இந்த விஜயத்தை தொடர்ந்து இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலிருந்த இலங்கையர்களைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் கவலைக்கு முக்கிய காரணம், சர்வதேச நாணய நிதியத்தினுடனான ஒப்பந்தமொன்று இன்றி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பெருமளவு உதவி எதையும் இலங்கைக்கு வழங்கத் தயாராக இல்லை என்ற நிலைமையாகும்.

ஆகவே, பொருளாதார ரீதியில் இலங்கை மீண்டெழுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தினுடனான ஒப்பந்தம், இன்றியமையாததொரு தேவையாக உருவெடுத்திருக்கிறது.

இது பற்றி இன்னும் பேசுவதற்கு முன்பதாக, இலங்கையர்கள் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகும். சர்வதேச நாணய நிதியம் என்பது, தர்ம ஸ்தாபனம் அல்ல. அதன் நோக்கம் தர்மம் செய்வதல்ல; அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையுள்ள நாடுகளுக்கு, கடன் வசதி வழங்குவதன் மூலம், கடன் பெறும் நாடுகளுக்கு ஆலோசனை, தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம், அந்நாடுகள் நிதி நெருக்கடி நிலையைச் சமாளிக்கவும், அதிலிருந்து மீளவும் உதவி செய்வதாகும்.

ஆனால், அது வழங்குவது கடன். அந்தக் கடன் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். ஆகவே, கடனைத் திருப்பிச் செலுத்தத் தக்கதாகவும், பொருளாதார நிலையை மீட்டெடுக்கக் கூடியதாகவுமான குறுங்கால, நீண்டகாலக் கொள்கைகளும் திட்டங்களும் இல்லாத அரசொன்றுக்கு சர்வதேச நாணய நிதியம், தர்மம் செய்வதுபோல கடன்வழங்காது. அதற்காகத்தான், அது நீண்ட கலந்துரையாடல்களின் மூலம், பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பிலான பல விடயங்களை உள்ளடக்கிய விரிவான ஒப்பந்தமொன்றை மேற்கொள்கிறது.

அந்தத் திட்டத்தின்படி அரசாங்கம் நடக்கும் போது மட்டும்தான், அது தொடர்ந்து கடனுதவியை அளிக்கிறது. ஒரு வகையில், இது இலங்கை போன்ற, முறையான பொருளாதார திட்டம் எதுவுமில்லாத, ஆட்சியிலுள்ளவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு பொருளாதாரம், நாணயக் கொள்கை என்பவற்றை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் ‘வாழைப்பழக் குடியரசு’களுக்கு நல்ல விடயம்தான். ஆனால், இதில் குறைகள் இல்லாமலும் இல்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் என்பதும், இதுவரை இலங்கை வௌிநாடுகளிடம், வௌிநபர்களிடம் வாங்கிய கடன்கள் எல்லாமே, மீளச் செலுத்தப்பட வேண்டும். அப்படியானால், அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்; அரச செலவினம் குறைய வேண்டும்.

அரச வருமானம் அதிகரிப்பதற்கு, வரி விதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இந்த வரிச் சுமை மக்களால்தான் சுமக்கப்படப் போகிறது. அதுபோலவே அரச செலவு குறையும் போது, அரசாங்கத்தின் பொதுநலச் செயற்றிட்டங்களும் குறையலாம். ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தினுடனான ஒப்பந்தத்தின்படியான, பொருளாதார மறுசீரமைப்பு ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் போது, அது இலகுவாக இருக்கப்போவதில்லை. இது ஒரு கடினமான பாதையாக இருக்கும்.

ஒரு பெருநோயிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை இது. சிகிச்சை இலகுவானதாக இருக்கப்போவதில்லை. அது கடுமையானது. ஆனால், கட்டுப்பாட்டுடன், பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் நீண்ட காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் போது, இந்த நோயிலிருந்து நாடு ஒரு பத்து வருடங்களில் மீளமுடியும்.

இந்தக் கடினமான பொருளாதார மீட்புச் சிகிச்சையை முன்னெடுக்கும் எந்த அரசாங்கமும், மக்களிடம் பிரபல்யம் பெறப்போவதில்லை. அவை கெட்டபெயரையே பெறும். கசப்பான மருந்தை, வலிந்தூட்டும் கடுமையான வைத்தியரை வெறுக்கும் குழந்தையைப் போல, மக்கள் இந்தத் திட்டங்களை அமல்படுத்தும் அரசாங்கத்தை வெறுக்கத் தொடங்குவர்.

இது சந்தர்ப்பவாத சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். “பத்தே நாளில் நாம் குணப்படுத்துகிறோம்” என்று வாய்ஜாலம் பேசுவோர்பால், மக்கள் ஈர்ப்புக்கொள்வதற்கான வாய்ப்புகள் பல. ஆனால், அவர்களால் குறுங்காலத்தில் இனிப்புகளை வழங்கமுடியுமேயன்றி, நோயைக் குணப்படுத்த முடியாது. இதுபோன்று இனிப்பு வழங்குனர்களால்தான், இலங்கை இந்த நிலைக்கே வந்தது.

முறையான பொருளாதாரக் கொள்கை, வளர்ச்சித் திட்டம் என எதுவுமில்லாமல், பொருளாதாரத்துக்குப் பயன்தராத திட்டங்களை, பெரும் கடனெடுத்து நடைமுறைப்படுத்தி, கடனடைக்கும் வழிகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காத, தூரநோக்கற்ற, மக்களுக்கு ‘இனிப்பு’ வழங்கி அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டவர்களால், இலங்கைக்கு வந்த நிலை இது. ஆகவேதான், கசப்பான வைத்தியத்தை வழங்கும் எந்த அரசாங்கமும், அதற்கான தேவை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவது இன்றியமையாத ஒன்றாகும்.

வறுமையை ஒழிக்க, அரசாங்கம் பணத்தை அச்சிட்டு மக்களுக்கு வழங்கவேண்டும் என்று நினைக்கிறளவில் பொருளாதார அறிவுடையவர்கள் பலர் வாழும் நாட்டில், பொருளாதாரம், பொருளியல் பற்றிய விழிப்புணர்வை அரசாங்கம் வழங்கத் தவறினால், கசப்பு மருந்து வழங்கும் அரசாங்கத்தை, மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இனிப்பு வழங்குவோரை ஆட்சிக்குக் கொண்டுவந்துவிடுவர்.

மறுபுறத்தில், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை விரைவில் எட்டுவதில் அக்கறை காட்டுவதை விட்டுவிட்டு கோட்டாபய ராஜபக்‌ஷ, ரஷ்யாவிடம் எண்ணெய் கடன் வாங்குவது, மத்திய கிழக்கு நாடுகளிடம் எண்ணெய் கடன் வாங்குவது, அவ்வப்போது அத்தியாவசியத் தேவைக்குக் கடன் வாங்குவது என, எஞ்சியிருக்கும் தனது இரண்டரை வருட காலத்தை ஓட்டிவிடலாம் என யோசிப்பது, இலங்கையை மிகப் பெரிய மீளமுடியாத பள்ளத்துக்குள் தள்ளிவிடும்.

எரிபொருள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள்  போன்றவற்றின் தட்டுப்பாடு நோய் அல்ல; அவை நோயின் அறிகுறிகள்தான். இலங்கையில் பொருளாதாரம் நலமாக இருந்தால், இலங்கைக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு தேவையானளவு இருக்குமானால், எரிபொருள், எரிவாயு வரிசைகள் மறைந்து போய்விடும்.

ஆகவே, உலகின் அநேக நாடுகள், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்களிப்பு நாடுகள், இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள ரஷ்யாவுடன், இலங்கை புதியதொரு பொருளாதார உறவை உருவாக்குவது என்பது, எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது என்பதை கோட்டாபய சிந்திக்க வேண்டும்.

நோயின் அறிகுறியைத் தீர்க்க வைத்தியம் தேடி, நோயைத் தீர்க்கும் வைத்தியத்தை தொலைத்துவிடக்கூடாது. அதுபோலவே, கோட்டாபய பதவி விலகினால்த்தான், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட, சர்வதேச நாடுகளின் உதவிகள் கிடைக்குமென்றால், கோட்டா, ‘கோ ஹோம் கோட்டா’ என்ற மக்களின் குரலை ஏற்று, பதவி விலகுவதுதான் இலங்கைக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.

மாறாக, தனது எஞ்சியிருக்கும் இரண்டரை வருடகால பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கோட்டா, இலங்கையின் எதிர்காலத்தை பகடையாக்குவது நியாயமல்ல. கோட்டாவால், இலங்கையின் நோய்க்கு இரண்டரை வருடங்களில் வைத்தியம் செய்ய முடியாது. அவராலோ, ஞானாக்காவாலோ அது முடியாது.

அதற்கு முயற்சிப்பது என்பது, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ‘தம்மிக்க பாணி’யால் தீர்வுகாண முயன்றதற்குச் சமனானதாக அமையும். ஆகவே, நோய் தீரும் வைத்தியத்தைப் பெறுவதற்கு கோட்டா தடைக்கல்லாக நிற்பதை விட, விலகி வழிவிடுவதே அவர் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் ஆற்றக்கூடிய ஒரே நல்ல சேவையாக அமையும்.