பஞ்சாபில் ஆம் ஆத்மி தோற்றது ஏன்?

(சேகர் குப்தா)

‘தோல்வி என்பது அனாதைக் குழந்தை அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட மாட்டார்கள்’ என்பது முதுமொழி. பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மைரா மெக்டொனால்ட் இதே தலைப்பில் எழுதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பதால் எனக்கும் இது தோன்றியது. பஞ்சாபிலும் கோவாவிலும் ஆம் ஆத்மி கட்சி அடைந்த தோல்வியின் பின்னணியில் இதையே சிந்தித்தேன். வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னதாகவே அந்த கட்சி வெற்றி விழா கூட கொண்டாடியது.

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி வளர முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டது வெளிப்படை. பஞ்சாபில் அக்கட்சி 40 இடங்களுக்கு மேல் பெறும் என்று நம்பினேன். பஞ்சாபியர் அல்லாத வெளியாட்களின் கட்சி பேரவையில் 20 இடங்களைப் பிடித்திருப்பதே பெரிய சாதனை. ஆனால் இது அவமானகர தோல்வி என்றே படுகிறது. கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய நட்சத்திரமாக உருவாவார் என்று நம்பிக்கையூட்டி பிரகாசமாக மின்னி, பிறகு அடையாளம் இல்லாமல் மறைந்துபோன வினோத் காம்ப்ளியைப் போல, அர்விந்த் கேஜ்ரிவாலும் அரசியல் உலகில் ஆகிவிடுவாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

பஞ்சாபின் வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சாபியர் இழந்த சுய கவுரவம் போன்ற அம்சங்களைச் சுட்டிக்காட்டித்தான் ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம் செய்தது. பஞ்சாபின் பிரச்சினைகளுக்குக் காரணம் அகாலிதளம் – அதிலும் குறிப்பாக பிரகாஷ் சிங் பாதலின் தனிக் குடும்பம் – என்று சரியாகவே அடையாளம் காட்டியது. பிரச்சாரத்தை ஆம் ஆத்மிதான் முதலில் தொடங்கியது. இளைஞர்களைத் திரட்டி சமூக வலைதளங்கள் மூலம் சிறப்பாக மக்களை அணுகியது.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் (33.4%) தலித்துகள் வசிப்பது பஞ்சாபில்தான். ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சீக்கியர்களை அவர்கள், தங்களை அச்சுறுத்துபவர்களாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சி தான் சரியான மாற்று. கான்சி ராம் பஞ்சாபியர்தான் என்றாலும் மாநில தலித்துகள் பகுஜன் சமாஜ் கட்சியைப் பெரிதாக ஆதரித்தது கிடையாது. 2014 மக்களவை பொதுத் தேர்தலில் மோடி அலையிலும் பஞ்சாபில் 4 தொகுதிகளைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. சட்டப் பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அர்விந்த் கேஜ்ரிவாலின் கூட்டத்துக்கு ஏராளமான மக்கள் தாங்களாகவே குவிந்தனர். இருப்பினும் தோல்விக்குக் காரணம் என்ன என்பதை ஆம் ஆத்மி கட்சி தலைமை ஆராய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்தான் என்று கட்சியின் மூத்தத் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்த சமாதானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

பஞ்சாபின் பிரச்சினைகள் என்னவென்று சரியாக ஊகித்தவர்கள், மக்களுடைய மன நிலையைக் கணிக்கத் தவறிவிட்டனர். மதம் சார்ந்த அரசியல் எடுபடும் என்று நம்பிவிட்டனர். பஞ்சாப் முழுக்கவும் சீக்கியர்களின் மாநிலம் அல்ல. அங்கே 40% இந்துக்களும் வாழ்கின்றனர். அவர்களும் அதே கலாச்சாரத்தை, அதே உணவை, அதே உடையை பின்பற்றுகின்றனர். குருத்வாராக்களிலும் வழிபடுவர். வெளிக்கலாச் சாரத்தைச் சேர்ந்தவர்களை அரவணைப்பதில் பஞ்சாபியர்கள் சமர்த்தர்கள். தங்களுடைய கலாச்சாரம் குறித்தும் பெருமைப்படுகிறவர்கள். அதே சமயம், தலைக்கே பொருந்தாத தலைப் பாகை போன்ற சீக்கிய அடையாளங்களோடு மற்றவர்கள் தங்கள் முன் வருவதைச் சகித்துக் கொள்ளமாட்டார்கள். அதுவும் வாக்கு கேட்கப் போகும்போது இந்தக் காமெடி அவர்களைச் சிரிக்க வைக்காது. உள்ளுக்குள் எரிச்சல் அடைவர்.

சீக்கியர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்று முடிவெடுத்த ஆம் ஆத்மி கட்சி , அரசியல் கோரிக்கைகளை அதற்கேற்ப வடிவமைத்தது. ஆனால் அதற்குப் பிறகுதான் பெரிய தவறுகளைச் செய்யத் தொடங்கியது. 1980-களின் பிற்பகுதியில் சீக்கியர்களின் மனம் புண்படும்படி நடந்த சம்பவங்களை அது மீண்டும் நினைவூட்டிக் கிளறியது. பொற்கோவிலில் ராணுவம் நுழைந்ததையும், டெல்லியிலும் பிற ஊர்களிலும் சீக்கியர்கள் கொல்லப்பட்டதையும் பேசியது. 1984 படுகொலைகள் தொடர்பாக வாதாடிய சீக்கிய வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்காவை பஞ்சாபுக்கு வரவழைத்து தேர்தல் கூட்டங்களில் பேசவைத்தது. பத்திரிகைகளில்தான் அவர் பிரபலம். சாதாரண சீக்கியர்கள் அவரைப் பார்த்தது கூட கிடையாது. பஞ்சாப் தேர்தலுக்கு கனடா நாட்டில் இருந்து பணமும் உதவிகளும் பெறப்பட்டன. அங்கிருப் பவர்கள் சீக்கியர்களுக்குத் தனி நாடு (காலிஸ் தான்) வேண்டும் என்று இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மால்வா பகுதியில் உள்ள இடதுசாரி ஆதரவாளர்களையும் ஆம் ஆத்மி கட்சி நாடியது. பழைய புண்களைக் கீறுவதன் மூலம் சீக்கியர்களின் வாக்குகளையும், முற்போக்கு என்று காட்டிக் கொள்வதன் மூலம் மால்வா பிரதேச இடதுசாரிகளின் வாக்குகளையும் ஒருங்கே அறு வடை செய்யலாம் என்று கருதினார் கேஜ்ரிவால்.

தங்களுடைய செயல்களை ஒடுக்கிக்கொண்டு அமைதியாக இருந்த தீவிரவாதிகளுடன் ஆம் ஆத்மி கட்சி உறவாடுவதை 2014 மக்களவை பொதுத் தேர்தலின்போது கவனித்து எச்சரித்தேன். குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் வினோத் கன்னாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி நிறுத்திய சுச்சா சிங் சோட்டேபூர், ஒரு காலத்தில் காலிஸ்தான் தீவிரவாதி. நீல நட்சத்திர நடவடிக்கையைக் கண்டித்து நார்வே தூதரகப் பதவியை ராஜினாமா செய்து அரசியல் அடைக்கலம் தேடிய ஹரீந்தர் சிங் கால்சா, ஃபதேகர் சாஹிப் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிந்தரன்வாலே கூடவே இருந்த மொக்கம் சிங், ஆம் ஆத்மி கட்சி பத்திரிகைத் தொடர்பாளர் ஆனார். தனது காரின் பதிவு எண்ணை பி.பி.-2-ஏ-1984 என்று வைத்துக் கொண்டிருக்கிறார். பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த ஆண்டையும் பிந்தரன்வாலே சுட்டுக் கொல்லப்பட்டதையும் மறக்க விரும்பாதவர்கள் இவர்கள். இப்படி முன்னாள் காலிஸ்தான்வாதிகளுடன் ஆம் ஆத்மி கட்சி கூடிக் குலாவுவதைப் பார்த்து பஞ்சாப் இந்துக்கள் வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக அளித்தார்கள்.

2014-ல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்த யோகேந்திர யாதவ், காலிஸ்தான்களை ஆம் ஆத்மி கட்சியில் சேர்த்துக் கொள்வதை நியாயப் படுத்தினார். இப்படித்தான் தீவிரவாதிகளை ஜனநாயகத்துக்குள் இழுக்க வேண்டும் என்றார். ஆம் ஆத்மி கட்சி மூலம் அகாலிகளை ஒழித்துவிட்டு, சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் கட்டுப்பாட்டை கைப்பற்ற வேண்டும் என்று கனடா நாட்டு காலிஸ்தானிகள் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளனர். இதை அனுமதிக்க பஞ்சாபின் சீக்கியர்களும் தயாரில்லை.

ஆம் ஆத்மி கட்சி கடந்த காலத்தைப் பற்றிப் பேசாமல், எதிர்காலத்தில் பஞ்சாபின் வளர்ச்சிக்கு என்ன செய்யப் போகிறோம் என்று கூறி வாக்கு கேட்டிருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கக்கூடும்.

 

(தமிழில் சுருக்கமாக: ஜூரி)