பண்பாட்டு ஆக்கிரமிப்பின் இன்னோர் அத்தியாயம்: குருந்தூர் மலையமர்ந்த கௌதமர்

எமது வாழ்விடங்களைச் சிறுகச் சிறுக இழந்துவிட்டு, தீர்வை மேற்குலகத் தலைநகரங்களிலோ, புதுடெல்லியிலோ தேடுவதில் பலனில்லை. எமக்கான ஆபத்துகள் விரிவடைந்து கொண்டே போகின்றன. ஆனால், இதைக் கையாளுவதற்கான வேலைத்திட்டமோ, தூரநோக்கோ எம்மிடம் இருக்கிறா என்ற கேள்வி, தவிர்க்க இயலாமல் மேலெழுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், குமுளமுனையில் உள்ள குருந்தூர் மலையில், புதிதாக புத்தர் வந்தமர்ந்தார். இன்னும் சரியாகச் சொல்வதானால் அமர்விக்கப்பட்டார்.

இப்போது அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. நாளை என்ன நடக்கும் என்பதை ஊகிப்பதில் சிரமங்கள் இரா. ‘அவன் பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்த போது, கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்டது’ என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர், நீராவியடிப் பிள்ளையார் கோவில், பின்னர், கிழக்கில் ஜனாதிபதி செயலணி என நடந்தேறிய பல அத்தியாயங்களின் புதிய அத்தியாயமே, குமுளமுனையில் அரங்கேறி இருக்கிறது. இது முடிவல்ல என்பதை நாம் அறிவோம்.

இந்த நெருக்கடிகளை, நாம் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு ஒரு தொடக்கமாக, மூன்று விடயங்களை முன்வைக்க நினைக்கிறேன்.

முதலாவது, பண்பாடு தொடர்பானது; அதிலும் குறிப்பாக, பண்பாட்டு உளவியல் தொடர்பானது. ஓர் இனக்குழுவிடமோ, சமூகத்திடமோ போரிட்டு அல்லது, துன்பம் விளைவித்து, ஏற்படுத்தும் தாக்கத்தை விட, பண்பாட்டு ரீதியாக ஏற்படுத்தும் தாக்கம் வலியது மட்டுமன்றி, நீண்டகாலத்துக்குப் பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது.

தத்துவஞானி கார்ல் மார்க்ஸ், “உணர்வு, சமூகத்தை உருவாக்கும் காரணியல்ல; சமூகம்தான் அதற்கான உணர்வை உருவாக்குகிறது” என்றார். எனவே, பண்பாடும் அதுசார் உளவியலும் அடிப்படையில் உணர்வு சார்ந்து இயங்குபவை. பண்பாடு என்பது, முக்கியமான போராட்டக் களமாக உள்ளது. ஈழத் தமிழ்ச் சூழலில், இது மூன்று விதமான சவால்களை இன்று எதிர்நோக்குகின்றது.

முதலாவது, ஒற்றைப் பண்பாட்டை நோக்கிய நகர்வுக்கு முகங்கொடுத்தல் ஆகும். ‘அனைவரையும் இலங்கையராகக் கொள்ளுதல்’ இதன் தாரக மந்திரமாக இருக்கிறது. இனக்குழுமம் சார் அடையாளங்களை மறுத்து, ஒற்றைப் பரிமாணப் பண்பாட்டை நிறுவும் முயற்சி நடந்தேறுகிறது. இது பெருந்தேசியவாத அகங்காரம் உடைய, அனைத்துத் தேசியவாதங்களும் செய்வதுதான்.

ஹிட்லரின் ஜேர்மனி முதல், மோடியின் இந்தியா வரை இதற்கான பல உதாரணங்களை, வரலாறு நெடுகிலும் காணலாம். இந்த நிகழ்ச்சி நிரலின்படியே, புத்தர் எல்லா இடங்களிலும் வந்து அமர்கின்றார். மதம்-தொல்லியல்-இராணுவம் என்பது மிகவும் ஆபத்தான ஒரு கூட்டணி.

இரண்டாவது, பௌத்த பேரினவாதத்துக்கு மாற்றாக, இந்துத்துவ சக்திகளை அரவணைப்பதானது, ‘அடுப்பில் இருந்து நெருப்பில் விழுந்த கதை’ போன்றதாகும். இரண்டு மத அடிப்படைவாதங்களும், தமக்குள்யே முரண்பாடின்றித் தேச அரசுகளால் ஊட்டம் பெற்று வளர்கின்றன. இவை ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கின்றன.

மூன்றாவது, பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் என்று தொடங்கி, காலப்போக்கில் பொய்யான பெருமைகளிலும் பழைமைகளிலும் திளைத்திருப்பதன் ஊடு, சமூகத்துக்கு உள்ளேயே ஏற்றத்தாழ்வுகளையும் வேறுபாடுகளையும் உருவாக்கும் கைங்கரியம்.

மறுபுறம், மொழியின் தொன்மை; இனத்தின் பெருமை என்று பொய்யான வரலாறுகளைக் கட்டமைத்தல் ஆகும். இவை, பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதற்குப் பதிலாக, அதை வலுவிழக்கச் செய்துவிடும்.

இந்த மூன்று சவால்களையும், ஈழத்தமிழர் எதிர்கொள்வதற்கு, எமது சமூகம்எத்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை நோக்குவது பிரதானமானது.ஒருபுறம் சாதிப் பாகுபாடுகள், பெண் அடிமைத்தனம், மரபு என்ற பெயரில் குடும்பங்களில் நிலவும் ஜனநாயகமின்மை, மூடநம்பிக்கைகள் என்பவை, எமது சமூகத்தில் நீக்கமற நிறைந்துள்ளன.

மறுபுறம், மதம் எமது வாழ்வியலின் தவிர்க்கவியலாத பகுதியாக உள்ளது. இவை, இரண்டையும் சரிவரக் கையாளுவதன் ஊடே, பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக, வலுவான போராட்டத்தை முன்னெடுக்க இயலும்.

இன்று, இலங்கை அரசாங்கம், மதத்தின் பெயராலும் தொல்லியலின் பெயராலுமே ஆக்கிரமிப்புகளை முன்னெடுக்கிறது. இவ்வாக்கிரமிப்பு நில ஆக்கிரமிப்பாக, பண்பாட்டு ஆக்கிரமிப்பாக, அடையாள அழிப்பாக, உரிமை மறுப்பாகப் பல வழிகளில் முன்னெடுக்கப்படுகிறது.

இதை இன்று, இந்தியா எங்கும் இந்துத்துவா சக்திகள் முன்னெடுக்கும் செயல்களோடு ஒப்புநோக்க முடியும். இவற்றை, எவ்வாறு மதத்தின் பேரால், தேசியவாதத்தை முன்னிறுத்திச் செய்ய முடிகிறது என்பதை நோக்குவது பிரதானமானது.

மதங்கள் யாவும் தனிமனித உய்வைப் பற்றிப் பேசினாலும், சமூக நிகழ்வுகள் மதங்களின் போக்கைத் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு மதமும், அதனதன் சமூகச் சூழலினதும் காலத்தினதும் குழந்தையாகும்.

மக்கள், மதங்களை நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றுகின்றனர். நிம்மதியற்ற சமூகச் சூழலில், மதங்கள் மனிதருக்குத் தற்காலிக ஆறுதல் அளிப்பன என்பதை மறுப்பதற்கில்லை.

மதங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டன அல்ல. ஒவ்வொரு மதமும் கூறும் அரச விசுவாசம், பொறுமை, தலைவிதி பற்றிய நம்பிக்கைள் போன்றவை, அரசாங்கங்களுக்குப் பாதுகாப்பானவை.

இலங்கையில், கடந்த இரண்டு தசாப்த காலமாக வளர்ச்சியடைந்துள்ள மதச்சகிப்பின்மையும் சிறுபான்மையினருக்கு எதிரான பெருந்தேசியவாத அகங்காரமும் அரசின் ஆசியுடனேயே நடந்தன. இப்போது அரசே நேரடியாக அதைச் செய்கிறது.

ஆக்கிரமிப்பின் கருவியாகத் தொல்லியலும் அதைப் புனிதப்படுத்தி உணர்வுபூர்வமானதாக மாற்றும் கருவியாக மதமும் செயற்படுகின்றன. இவை இரண்டும் இணைந்து, பண்பாட்டு ஆக்கிரமிப்பைச் செய்கின்றன.

இதற்கெதிராகப் போராடுவதற்கு, எம்மிடம் இரண்டு கருவிகள் உள்ளன. முதலாவது, நாம் ஒருங்கிணைந்து போராடுவது. இந்த அச்சுறுத்தல் இலங்கையின் சிறுபான்மையினர் அனைவருக்கும் உரியது. அனைவரையும் ஒரு பொதுத்தளத்தில் ஒன்றுதிரட்டுவதும் பொதுத்தளத்தில் இணைப்பதும் அவசியமானது.

இரண்டாவது, உளவியல் ரீதியாக நாம் எம்மைத் தயார்படுத்த வேண்டும். இது தனிமனித நிலையிலும் கூட்டாகவும் நிகழ வேண்டும். திறந்த கலந்துரையாடலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். புதிய சாத்தியங்களை நோக்கி நகர வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில், சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த போராட்டங்களுக்கு குழிபறிக்கப்பட்டு உள்ளன. நீட்டப்பட்ட நேசக்கரங்களை நாம், பற்றிப்பிடிக்காமல் விட்டிருக்கிறோம். சிறுபான்மையினரின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கப்பட்டுள்ளது.

கல்முனையில் தமிழ்ப் பிரதேச சபை ஏற்படுத்தப்படுவது தொடர்பான சிக்கலில், தமிழர்கள் சார்பாகப் போரிடப் போவதாக ஞானசார தேரர் வருகை தந்தார். அவரைப் பார்க்கக் கூடிய கூட்டமும் அதில் அவருக்குக் கிடைத்த கரவொலியும் சொல்லிய செய்தி என்ன?

அதேபோல, அங்கு பேசிய அத்துரலியே ரத்தின தேரர், “விகாரையில் இந்துக் கடவுள்கள் இருக்கின்றன. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரச்சினை இல்லை; ஆனால், நாம் முஸ்லிம்களை அனுமதிக்கக் கூடாது” என்றார். இது பல தமிழர்களால் சிலாகிக்கப்பட்டது. இவை, எம்மைப் பிரித்து வைத்திருப்பதற்கான செயல்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா. இவை அனைத்தும் நமது பண்பாட்டு உளவியலின் தவறுகள். இதை நாம் சரிசெய்தாக வேண்டும்.

இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடியை எதிர்கொள்ள முற்போக்கு நேசசக்திகளோடு கைகோர்க்க வேண்டும்; இந்த நெருக்கடி மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். இந்த நெருக்கடி பாராளுமன்றத்திலோ, மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, வெளிநாடுகளிலோ, சர்வதேச மன்றுகளிலோ தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல.

இவ்வாறான செயல்களை நாம் வரலாறெங்கும் காண்கிறோம். இரண்டாம் உலகப் போரின், முதல் மூன்று ஆண்டுகளின் பின்னர், “முழு உலகையும் நானே ஆள்வேன்; எனது பண்பாடும் அடையாளமுமே உலகப் பொதுவானது” என்றுதான் ஹிட்லர் நினைத்தார்.

ஹிட்லர், தான் கைப்பற்றிய தேசமெங்கும் பண்பாட்டு வன்முறையை நிகழ்த்தினார். அது என்றென்றைக்குமானது என்று அவர் நம்பினார்.

ஸ்டாலின்கிராட்டை உருத்தெரியாமல் அழித்தார். ஆனால், அதுவே அவர் புதைகுழியானது.

இன்று ஸ்டாலின்கிராட் நிமிர்ந்து நிற்கிறது. ரஷ்ய மக்களின் போராடும் குணத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தி நிற்கிறது.

ஹிட்லர் ஆக்கிரமித்த நிலப்பரப்பெதிலும் அவர் வெற்றிகொண்டமைக்கான சுவடுகளே இல்லை. அவர் தோற்கடிக்கப்பட்டமைக்கான சுவடுகள் எங்கும் நிறைந்துள்ளன.

வரலாறு சொல்லும் செய்தியும் அதுவே!