பந்தாடப்படும் கேப்பாப்புலவு

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு, சூரியபுரம், சீனியாமோட்டை மற்றும் பிரம்படி ஆகிய பகுதியில் வசித்த மக்கள், யுத்தம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெயர்ந்த நிலையில், 2009 ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதிகளில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினர். இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள், வவுனியா, செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், நலன்புரி நிலையங்களை மூட அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அம்மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

அதன்போது, கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவின் கீழான மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றாது, சீனியாமோட்டைப் பகுதிக்கு அருகில் இருந்த தனியாருக்குச் சொந்தமான காணிகள் மற்றும் அருகில் இருந்த காட்டுப் பகுதிகளைத் துப்பரவு செய்து, 2012 ஒக்டோபர் மாதக் காலப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டனர்.

அதற்கு அந்த மக்கள் சம்மதிக்காத போது, “உங்களின் சொந்த காணிகளில் வெடிபொருட்கள் உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். அதுவரையில் இந்த இடத்தில் குடியேறுங்கள்” என, எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காத நிலையில், தகரக் கொட்டைகைகளுக்குள் குடியேற்றப்பட்டனர்.

2013ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சானது, இலங்கை இராணுவத்தின் 59ஆம் படைபிரிவினரைக் கொண்டு, 165 வீடுகளை நிர்மாணித்து, அப்பகுதிக்கு ‘கேப்பாப்புலவு மாதிரிக் கிராமம்’ எனப் பெயர்சூட்டி, பெயர் பலகையும் நாட்டப்பட்டது. பின்னர், கடந்த வருடம் அந்தப் பெயர்ப் பலகையில், ‘கேப்பாப்புலவு கிராமம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வாறு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு வீடும், 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஆனால், அதன்பெறுமதி 2 இலட்சமும் இல்லை என, வீட்டைப் பெற்றுக்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், அங்கு வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாதிரிக் கிராமம் தேவையில்லை என்றும் தங்களது சொந்த இடமே தேவை எனவும் கூறி, கடந்த 5 வருடகாலமாகப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் பயனாக, சீனியாமோட்டை மற்றும் பிரம்படி பகுதிகளில், மீள்குடியேற்றம் இடம்பெற்றதுடன், சூரியபுரத்தின் ஒரு பகுதியிலும் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும், பிலக்குடியிருப்பில் 84 குடும்பங்களும் கேப்பாப்புலவில் 145 குடும்பங்களும், இன்னமும் மீளக்குடியேற்றப்படவில்லை. அவர்களுக்குச் சொந்தமான 525 ஏக்கர் காணியினை, விமானபடையினரும் இராணுவத்தினர் கையகப்படுத்தி, பாரிய படைமுகாமை அமைத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபுலவு ஊடாக முல்லைத்தீவு செல்லும் வீதியில் தமது படைத்தளத்தின் முன்பாகச் செல்லும் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரமான வீதியினை பொதுமக்களின் பாவனைக்குத் தடைசெய்துள்ள படையினர், அதனை தமது பாவனைக்குப் பயன்படுத்துகின்றனர். இதனால், அந்தப் பகுதியால் செல்லும் மக்கள், ஒரு கிலோமீற்றர் தூரத்தைக் கடப்பதற்கு, சுமார் 4 கிலோமீற்றர் தூரம் காட்டுப் பாதையால் செல்ல வேண்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், தமது சொந்தக் காணிகளைக் கையளிக்குமாறு கோரி, கேப்பாபுலவு மற்றும் பிலக்குடியிருப்பு மக்கள், கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கிராமம் இருந்த இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள புதிய மாதிரிக் கிராமத்துக்குள், 165 வீடுகள், பாடசாலை, கிராம சேவையாளர் அலுவலகம், பொதுநோக்கு மண்டபங்கள், வீதிகள், மதகுகள் என அனைத்தும் இடமாற்றப்பட்டுள்ளன.

“இவை எவையுமே எமக்குத் தேவையில்லை. எமக்கு தேவை, எமது சொந்த நிலமே. அங்கே எமக்கு எந்த வசதியும் செய்து தரத் தேவையுமில்லை. எம்மை எமது சொந்த இடத்துக்குச் செல்ல அனுமதித்தால், எமக்குத் தேவையானவற்றை நாமே தேடிக்கொள்வோம். எமக்கு எமது நிலமே வேண்டும்” எனக் கோரியே, அப்பகுதி மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விமானப்படைப் பேச்சாளர்
– குரூப் கெப்டன் சந்திம அல்விஸ்

”ஆரம்பத்தில், இந்தக் காணி வனஇலாகா திணைக்களத்துக்குரியது என்றே தெரிவிக்கப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்குச் சொந்தமான காணியும் அதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து. அது குறித்துத் தேடிப் பார்த்ததில், மக்களுக்குச் சொந்தமான காணிகளும் அதில் அடங்குவதாக அறியக்கிடைத்தது.

இது தொடர்பில், அரசாங்க அதிகாரிகளினால் ஆய்வொன்று ​மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முகாம் அமைந்துள்ள பகுதியில், மக்களுக்குச் சொந்தமாக எவ்வளவு காணிகள் உள்ளன? அவை எத்தனை பேருக்குரியவை என்பது தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த ஆய்வின் இறுதியில், அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமையவே, காணி விடுவிப்பு தொடர்பான முடிவு எட்டப்படும். முகாம் பகுதியிலிருந்து, மக்களுக்குச் சொந்தமான பகுதியை மாத்திரம் விடுவிப்பதாயின், முகாமின் பாதுகாப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

அல்லது, முழு முகாமும் அமைந்துள்ள மொத்தக் காணியை​யும் விடுவிப்பதாயின், ஜனாதிபதி, பாதுகாப்புத் தரப்பு, என மேலிடங்களே, அது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும். அங்கிருந்து முகாமை அகற்ற வேண்டுமென அவர்கள் உத்தரவிட்டால், விமானப்படை அதற்கான நடவடிக்கையை எடுக்கும்”.

நாடாளுமன்ற உறுப்பினர் –
செல்வ​ம் அடைக்கலநாதன்

“கேப்பாப்புலவு விவகாரம் தொடர்பில், உடன் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இவ்வாரத்தில், நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை முன்வைக்கவும் எதிர்ப்பார்த்துள்ளோம். ஏற்கெனவே, கவனயீர்ப்பு முறையிலான ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை, நாடாளுமன்றத்தில் முன்வைத்தோம்.

இவ்விகாரம் தொடர்பில், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடமும் முறையிட்டுள்ளோம். மேலும், அனைத்து உயர்ஸ்தானிகர் அலுவலகங்களிலும் முறைப்பாடுகளைச் செய்து, இப்பிரச்சினை தொடர்பில், அவர்களின் அவதானத்தையும் ஈர்த்துள்ளோம்.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கையை முன்வைக்கவுள்ளோம். இது சம்பந்தமான நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தை நாளை (இன்று) நடத்தத் தீர்மானித்துள்ளோம்.
இந்தக் காணி மீட்புப் போராட்டம், பாடசாலை ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் நடத்தப்பட்ட வேண்டும்.

நாங்கள் அனைவரும் சேர்ந்தே முடிவெடுத்தோம். இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை சொல்வதினால், எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. மேலும், இந்தக் காணி விடுவிப்பு சம்பந்தமாக, எல்லா விதத்திலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம்“.

இராணுவப் பேச்சாளர் –
பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன

முல்லைத்தீவு மாவட்டத்தில், இராணுவத்தினர் வசமிருந்த 243 ஏக்கர் காணிகள், இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னமும், இராணுவத்தினர் வசம் எத்தனை ஏக்கர் பொதுமக்களின் காணிகள் உள்ளன என்பது தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக்கூடிய வசதிகள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இராணுவத் தளபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தவிர, கேப்பாப்பிலவு காணி விவகாரம் தொடர்பில் மாத்திரம், இராணுவத் தளபதியுடன், ஜனாதிபதி பேசவில்லை.

இப்பேச்சுவார்த்தையின் போது, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து, விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிப்பதாகவே, இராணுவத் தளபதி உறுதியளித்தார்.

வெகு விரைவில், விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பான விவரங்களும், இராணுவத்தினர் வசம், பொதுமக்களுக்குச் சொந்தமான எத்தனை காணிகள் உள்ளன என்பது தொடர்பான விவரங்களும் வெளியிடப்படும்”.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
– சுரேஸ் பிரேமசந்திரன்

“ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி என்ற அடிப்படையில், கேப்பாபிலவு- பிலக்குடியிருப்பு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பிலான ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிக்தி ஆனந்தன், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு அடிக்கடி சென்று வருகிறார். அதேபோல், எமது கட்சிப் பிரதிநிதிகளான வரிகரன் உள்ளிட்டோரும் அங்கு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

ஆகவே, எங்களைப் பொறுத்தமட்டில், அந்த மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென, ஊடகங்கள் வாயிலாக சம்பந்தப்பட்டோருரிடம், தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். இந்தப் போராட்டம், மக்கள் போராட்டமாக மாற்றமடைவதற்கு, எங்களாலான களப் பணிகளைச் செய்து வருகின்றோம்”.

மீள்குடியேற்ற அமைச்சர்
– டீ.எம்.சுவாமிநாதன்

“பாதுகாப்புத் தரப்பினரால், குறித்த காணி விடுவிக்கப்படும் பட்சத்தில், அக்காணிகளுக்கு உரித்துடைய மக்களை, அங்கு மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை, மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொள்ளும். தவிர, காணியை விடுவிப்பது தொடர்பான முடிவை, அமைச்சினால் எடுக்க முடியாது.

மனிதாபிமான அடிப்படையிலேயே, கேப்பாப்புலவு மக்களின் ​காணி விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பேசினோம். முகாம் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரினோம். தவிர, இது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சினால் வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியாது.

காணியை விடுவிக்கும் பொறுப்பு, பாதுகாப்புத் தரப்பிடம் உள்ளது. அதற்கான உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்குரியது. இவை இடம்பெற்று, காணி விடுவிக்கப்பட்டால், மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள், அமைச்சினால் உடன் முன்னெடுக்கப்படும்”.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்
– ரூபவதி கேதீஸ்வரன்

“மக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கத்தால் இதுவரை எவ்விதத் தகவல்களும் அறிவுறுத்தல்களும் மாவட்டச் செயலகத்துக்குக் கிடைக்கவில்லை.
குறித்த மக்களைச் சந்தித்துக் கால அவகாசம் கோரியிருந்தேன். அதற்கு அவர்களும் சம்மதிக்கவில்லை.

இப்பிரச்சினை, தேசியப் பாதுகாப்புத் தொடர்பானது என்பதால், அரசாங்கத்தின் அறிவுறுத்தல் இன்றி என்னால் எதுவும் செய்ய முடியாது”.