பயிரை மேய்ந்த வேலிகள்–(13)

(அலுமாரியில் ஒழிந்து இடம்பெயர்ந்த இளைஞன்.)

இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்களினால் மக்களை விரைவாக மேலும் தமது கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயருமாறு புலிகள் நிர்பந்திக்க தொடங்கியிருந்தனர். இடம்பெயர்வுகளின் போது அதுவரை புலிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் மறைந்திருந்த இளம் ஆண்களும் பெண்களும் இப்போது தமது குடும்பங்களுடன் சேர்ந்து இடம்பெயர வேண்டி இருந்தது. வெளியே வந்தவர்களை வேட்டையாடுவதில் புலிகள் மிகுந்த உட்சாகத்துடன் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியிருந்தனர். புலிகளின் வேட்டையும் எதிபார்த்தைவிட அதிகமாகவே இருந்தது.

அந்த மக்களுக்கு வீட்டை இழப்பதே மோசமானதாக இருந்தது. அத்துடன் தங்கள் சொந்த இளம் மகனையோ மகளையோ இழப்பது இன்னும் மோசமாகவே இருந்தது. பொறுக்க முடியாதாகவும் இருந்தது. வீட்டை விட்டு வெளியேறி வெட்ட வெளிகளிலும், மரங்களுக்கு கீழும், வீதியோரங்களிலும் தஞ்சமடைந்த நிலையில் தங்கள் பிள்ளைகளையும் புலிகளிடம் பறிகொடுத்து விட்டு அவர்கள் எங்கு இருக்கின்றனர் எனபது கூட தெரியாமல் ஏக்கதுடன் ஒவ்வொரு நாளும் இடப் பெயர்வை சந்தித்த மக்களின் உணர்வுகளையும் வாழ்க்கையையும் விபரிக்க வார்த்தைகளே இல்லை. அதை அனுபவித்தவர்களால் மாத்திரமே அந்த வலியை இந்த தொடரை வாசிப்பதன் மூலம் உணர முடியும்.

வீடுகளை விட்டு இடம்பெயரும் போது பிடிக்கப்பட்ட அந்த இளம் ஆண்களினதும் பெண்களினதும் நிலைமை மிக மோசமாகவே இருந்தது. புலிகளிடம் பிடிபடும் ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் எப்படியாவது தப்பித்து மீண்டும் தங்கள் பெற்றோரிடமே சேர்ந்துவிட நினைத்தார்கள். ஆனால் அவ்வாறு அவர்கள் தப்பி வந்த போது அவர்களது குடும்பத்தினரை அவர்கள் பிடிபட்ட இடங்களில் காணவும் முடியாமல் இருந்தது. ஒன்று அங்கிருந்து அவர்களின் குடும்பத்தினர் இடம்பெயர்ந்து வேறு ஒரு இடத்துக்கு சென்றிருப்பார்கள் அல்லது அங்கு இல்லாமல் இருப்பார்கள். தப்பி வந்த அவர்களால் அருகில் இருப்பவரிடம் விசாரிக்கவும் இயலாமல் இருந்தது.

ஒருவரை பிடித்த உடனேயே புலிகள் செய்யும் முதல் வேலை தலைமயிரை கத்தரித்து விடுவது அல்லது மொட்டை அடித்து விடுவதுதான். அப்போதுதான் தப்பி சென்றவர்களை இலகுவாக அடையாளம் கண்டு மீளவும் பிடிக்க முடியும் அல்லது தங்கள் விசுவாசிகளால் காட்டிக் கொடுக்க வசதியாக இருக்கும் என்று எண்ணினார்கள்.
நறுக்கப்பட்ட தலைமயிருடன் தங்கள் பெற்றோரை தேடுவது பிடிபட்டு தப்பிவரும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் மிக சவாலான ஒன்றாகவே இருந்தது. அவர்கள் மீளவும் பிடித்து செல்லப்படுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாகிக்கொண்டிருந்த. இப்படி இரண்டாம் முறை பிடிபடுபவர்களுக்கு மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகி இருந்தது.

தப்பி ஓடிவருபவர்களின் நிலை இதுவென்றால் பிடிபட்டு பத்து பதினைந்து நாட்களில் இறந்து போகும் பிள்ளைகளின் உடல்களை அவர்களின் பெற்றோரை தேடி கண்டுபிடித்து கொடுப்பதும் புலிகளுக்கும் கடினமானதாகவே இருந்தது. இவர்கள் இன்றும் காணாமல் போனவர்களாகவே ஆகி விட்டனர்.

காட்டினுள் தஞ்சமடைந்து பலமாதங்களாக மறைந்திருந்த அக்கராயன் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞன் அவர்களது ஊரைவிட்டு இடம்பெயர வேண்டியிருந்தது. புலிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு அந்த இளைஞனை உடைகள் வைக்கும் அலுமாரிக்குள் வைத்து அவர்களது பெற்றோர் பாதுகாப்பாக இடம் பெயர்ந்து அழைத்துச்சென்றனர். கடைசிவரை 14 மாதங்களாக அந்த இளைஞன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள அந்த அலுமாரியினுள்ளேயே வாழ வேண்டியிருந்தது.

இறுதியாக 2009 ஏப்பிரல் 11 பொழுது விடிந்தது. அந்த இளைஞனுக்கும் அது விடுதலையை அளித்த பொழுதாக இருந்தது. அலுமாரியைவிட்டு வெளியேறி புதுமாத்தளன் பிரதேசத்துக்குள் நுழைந்த இராணுவத்திடம் ஓடிச்சென்று தப்பித்திருந்தான்.

அந்த இளைஞன் விபரிக்க முடியாத சிரமங்களை அனுபவித்தாலும் அதிஸ்டசாலியாகவே இருந்தான். அதனால்தான் அவன் கடைசிவரை புலிகளிடம் அகப்படாமல் தப்பிக்கொண்டான். தனது அண்ணனை எப்படி பாதுகாத்தோம் என்று அவனின் சகோதரி கூறும்போது..

இப்படியொரு சூழலில் நான் திருமணம் முடித்துவிட்டேன். அவர்களின் பிள்ளை பிடி தொடங்கும் போது நான் கர்ப்பினியாக இருந்தேன். அவர்கள் என்னுடைய அண்ணாவை குறிவைத்து விட்டார்கள். அவரை கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்கும் படி எங்களை கட்டாயப்படுத்த தொடங்கினார்கள். நாங்களோ அண்ணாவை காட்டுக்குள் ஒழித்து வத்திருந்தோம்.

2006 அக்டோபரில் இருந்து இரண்டு வருடங்களாக அவர் ஒழிந்தே இருந்தார். என்னுடைய இன்னும் ஒரு மூத்த அண்ணா கடவுளை கும்பிட்டு விட்டு மூன்று நேர சாப்பாட்டையும் பின்னேரத்தில் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வந்து விடுவார். தலைமயிர் வெட்டியதே கிடையாது. புலிகளும் அவரை பிடிப்பதற்கு எல்லாவகையிலும் முயன்றனர்.

2007டிசம்பர் மாதமும் பிறந்துவிட்டது. எனக்கும் பெண் குழந்தை பிறந்து ஐந்து நாட்களாகியிருந்தது. அண்ணாவை பிடிக்க முடியாமல் ஏமாற்றமடைந்த புலிகள் அன்று இரவு 12.00 மணிக்கு எமது வீட்டை சுற்றி வளைத்து விட்டனர். வீட்டினுள் புகுந்த என்னுடைய கணவரை பிடித்து இழுத்துக்கொண்டு போய் வாகனத்தில் ஏற்றிவிட்டிருந்தார்கள். நான் ஐந்து நாள் குழந்தையை கொண்டு சென்று வாகனத்தின் முன் போட்டு கத்தி குளறி கெஞ்சி மன்றாடிக் கொண்டிருந்தேன், நீண்ட நேர இழுபறியின் பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை என்னுடடைய கணவரை விட்டுச்சென்றனர். அவர்கள் எங்கள் வீட்டை விட்டு அகலும் போது நேரம் அதிகாலை 2.00 மணியாகியிருந்தது.

பல மாதங்களாக காட்டில் இருந்த அண்ணாவை கூட்டிக்கொண்டு நாங்கள் இடபெயர வேண்டியிருந்தது. உடைகள் வைக்கும் அலுமாரியில் வைத்து அவரை நாங்கள் காப்பாற்றி அழைத்துச் சென்றோம், எங்களிடம் சொந்தமாக உழவு இயந்திரம் (ட்ரெகடர்) இருந்ததால் அண்ணாவை கடைசிவரை காப்பாற்ற அது உதவியது. இல்லாவிட்டால் பொருட்களை ஏற்ற வரும் ட்ரெக்டர்காரன் புலிகளுக்கு காட்டிக்கொடுத்திருப்பான்.”
தொடர்ந்து கூறுவதை நிறுத்திவிட்டு அந்த பெண் அழத்தொடங்கிவிட்டார்.

மக்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ள புதிய வழிகளை கண்டிபிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள் இப்போது புலிகளும் ஆட்கடத்தலில் மேலும் மேலும் பல தந்திரங்களை கடைப் பிடிப்பதில் இறங்கியிருந்தனர்.

மக்களுக்கு இரவுகள் மட்டுமல்ல பகல் பொழுதுகளும் கூட பயங்கரமாக மாறத்தொடங்கியது.

தொடரும்..

(Rajh Selvapathi)