பற்குணம் டி.ஆர்.ஓ(பகுதி 36)

பற்குணம் பதவியேற்றபோது அவருக்கு சாரதியாக அப்புஹாமி என்பவர் இருந்தார்.இவர் பிறப்பால் இஸ்லாமியர். சிங்கள குடும்பம் ஒன்று வளர்த்ததால் பௌத்தரானார்.அவரை சாம்பசிவ ஐயர் விரும்பியதால் கருணதாஸ என்கிற பெரியவர் சாரதியாக வந்தார்.அவர் சில காலங்களில் ஓய்வு பெற விமலசேன என்பவர் வந்தார்.இவர் கொஞ்சம் முரட்டு சுபாவம் உடையவர்.இதனால் எந்த அதிகாரிகளுக்கும் பிடிப்பதில்லை.பலர் இவருக்குப் பயந்தனர்.ஆனால் பற்குணத்துடன் மிகவும் மரியாதையாகவே நடந்தார்.

பற்குணம் எந்த டிரைவர்களையும் தேவைக்கு அதிகமாக வேலை வாங்குவதில்லை.தூக்கம் அல்லது களைப்பு என்றால் ஓய்வு கொடுப்பார்.ஓட விடவே மாட்டார்.தன் தேவைகளுக்கு மட்டுமே வேலை வாங்குவார்.குடும்பத்தினர் பயன்படுத்த அனுமதிப்பதில்லை.சிசில் லியனகே குடும்பம் கடுமையாக விமலசேனவை வேலை வாங்கியது.இதுவே முரண்படக் காரணம்.இவர் பின்னாளில் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக காமினி திஸநாயக்காவுடன் பணியாற்றினார் .என்னுடன் டாம் விளையாடுவது அவருக்குப் பிடிக்கும்.இந்த விளையாட்டில் தோற்கடிக்க முடியாத சிறுவனாக என்னைப் பலருக்குத் தெரியும்.

இவர் சில காலம் தலைமைச் செயலக டி.ஆர்.ஓ சிசில் லியனகே இருந்தார்.சிசில் லியனகே தமிழர்களைப் பொறுத்தவரை சர்ச்சைக்குரிய அதிகாரியாக கருதப்பட்டார்.1977 இல் இவருக்கு எதிராக பல தமிழர்கள் சன்சோனிக் கமிஷனில் சாட்சி சொன்னார்கள்.ஆனால் பற்குணத்தோடு நல்ல உறவு உண்டு.என்னையும் நன்கு தெரியும்.இவரிடம் விமலசேன பணியாற்றினார்.அவரோ பயத்தால் இவரை வேண்டாம் என ஒதுக்கிவிட்டார்.

1971இல் ஜே.வி.பி கிளரச்சிக்காலங்களில் அரசாங்க வாகனங்கள்,சாரதிகள் இராணுவம் தன் தேவைகளுக்கு எடுத்தது.இதனால் பற்குணத்தின் வாகனம் இராணுவ வசமானது.விமலசேனவும் இராணுவ டிரைவர் ஆனார்.ஒரு தடவை இராணுவம் இவரின் முதுகில் துப்பாக்கியால் இடித்து வேகமாக ஓட்டும்படி விரட்டியது.கோபம் கொண்ட இவர் அவர்களின் துப்பாக்கியை பறித்து அவர்களை மிரட்டி கந்தளாய் காட்டுக்குள் விட்டு ஜீப்பில் தப்பி பற்குணத்திடம் அடைக்கலமானார்.பற்குணம் ஜீப்பை நகரத்தில் எங்காவது விட்டு வரும்படி கூறினார்.

அவரும் அப்படியே செய்துவிட்டு எங்கள் பங்களாவின் பின்பகுதியில் கலகம் முடியும்வரை ஒழிந்து வாழ்ந்தார்.கலகம் முடிந்த பின் அரச அதிபரிடம் உண்மையைக் கூறி மீண்டும் வேலையில் சேர்த்தார்.அப்புகாமி குடிகாரனாக நடித்தே இராணுவத்தை ்பலதடவை ஏமாற்றினார்.

இந்தக் காலங்களில் விமானப்படைத் தளபதியே அரச அதிபர் நிர்வாகத்தை பொறுப்பேற்று நடத்தினார்.இந்தகலங்களில் விமானப்படை வாகனங்களே வந்து பற்குணத்தை அழைத்துச் செல்லும்.
பற்குணம் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவராக இருந்ததால் கொஞ்சம் சந்தேகத்துடன் இருந்தார்.அன்றைய அரச அதிபர் திஸ்ஸ தேவேந்திரா இவரில் நல்ல அபிப்பிராயம் கொண்டதால் ஆபத்து எதுவும் நிகழவில்லை.

இராணுவத்தின் அடாவடித்தனங்களை டிரைவர்கள் பற்குணத்திடம் கூறுவார்கள்.தனக்குத் தெரிந்த சில ஜே.வி.பி உறுப்பினர்கள் சிலரை சிறைக்கு சென்று பார்வையிட்டார்.

விமலசேன கடைசிவரை நல்ல விசுவாசியாக இருந்தார்.இந்தக் காலங்களில் பற்குணத்தின் திருமண ஏற்பாடுகளும் நடந்தன.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)