பற்குணம் டி.ஆர்.ஓ ( பதிவு 35)

நான் அம்மாவோடு படுப்பவன்.நித்திரை வரும்வரை பற்குணத்தோடு படுப்பேன்.அப்போது அவர் அறையில் ஒரு பெண்ணின் படம் இருந்தது. அது யார் எனக் கேட்டேன். இதுதான் பெரிய அண்ணி மாதிரி உனக்கு சின்ன அண்ணி என்றார்.எனக்குப் புரியவே இல்லை. மறுநாள் அம்மாவிடம் சொன்னேன்.அம்மா எதுவும் சொல்லவில்லை .

அடுத்த நாள் உனக்கு கண்டி பார்க்க விருப்பமா எனக் கேட்டார்.எனக்கு கண்டி பற்றி எதுவும் தெரியாது.ஆனால் ஓம் என்றேன்.அம்மாவிடம் கேள் நாங்கள் கண்டி பார்க்க போகலாம் என்றார்.நான் அம்மாவிடம் கேட்டேன். அவர் மறுத்துவிட்டார்.எனக்கு விசயம் விளங்கவில்லை.முன் வீட்டில் கௌரி என்னும் அக்கா இருந்தார்.அவரிடம் அம்மா இந்தக் கண்டிப் பயணத்தைப் பற்றி சொன்னார்.அவன் என்னை மடைச்சி என நினைக்கிறான் என்றார்.நான் வளர்ந்த பின் அம்மா இந்தக் கதையைச் சொல்லி சிரித்தார்.அண்ணி அப்போது கண்டியில் படித்துக்கொண்டிருந்தார்.அவரைக் காட்டவே என் மூலம் அம்மாவை இழுக்க நினைத்தார்.

எல்லோரையும் போலவே பற்குணத்துக்கும் சின்ன சின்ன ஆசைகள் இருந்தன.அம்மா அய்யாவை விமானத்தில் பயணிக்க வைக்க ஆசைப்பட்டார்.முதலில் நானும் அம்மாவும் விமானத்தில் யாழ்ப்பாணம் பயணம் செய்தோம்.எனக்குத் தெரிய விமானத்தில் என்னைத் தவிர அன்று பயணம் செய்த சிறுவர்கள் யாரும் இல்லை.அம்மாவின் தனிப் பயணங்கள் அநேகமாக விமானமூலமாகவே போய் வந்தார்.

பின்பு அய்யா அம்மா இருவருமாக பயணம் செய்தார்கள்.சாதாரண ஓலைக்குடிசைக்குள் பிறந்த எங்களை விமானத்தில் ஏற்றி அழகை ரசித்தார்.பணம் எதையும் தேடாதபோதும் சகல இடங்களையும் காண்பித்தார்.குறிப்பாக அய்யா அம்மா இருவருக்கும்.

பற்குணம் சீதனம் வாங்கி திருமணம் பண்ணுவதை நிராகரித்தார் .அண்ணியின் சகோதரன் சின்னத்துரை அவரோடு படித்தபோதும் பற்குணத்தின் தோழி இராஜேஸ்வரி என்பவர் மூலமாகவே அண்ணி அறிமுகம் ஆனார்.

எங்கள் பெரிய அண்ணன் திருமண சந்தையில் பேரங்களை எதிர்பார்த்தார்.பலர் தாமாகவே பேரங்களுடன் தேடி வந்தனர்.ஆனால் அய்யா அம்மா பற்குணத்தின் சந்தோசத்தையே விரும்பினர் .இதனால் அண்ணி மனோன்மணிக்கும் பற்குணத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

(எழுதப்படும் விசயங்கள் யாவும் என்மனதில் உள்ளவை.நான் எதையும் ஒழுங்கமைத்து எழுதவில்லை .அண்ணன் தன்னைப் பற்றி எதையும் விளம்பரப்படுத்தியது இல்லை.மேலும் அதை வெறுத்தார்.நானும் சராசரி மனிதன் என்ற அடிப்படையில் பதிவு செய்யவிரும்புகிறேன்)