பற்குணம் (பகுதி 112 )

நான் 1989 புரட்டாசி மாதம் கனடா வந்துவிட்டேன்.அதன்பின்பாக இலங்கை இந்திய அரசியலில் முறுகல் நிலை தொடங்கியது.புலிகளும் பிரேமதாசாவும் தேன்நிலவு கொண்டாட மாகாண சபை நிலைமை கேள்விக்குறியானது.இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய படைகள் வாபஸ் உறுதியானது.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சில மாகாண சபை அதிகாரிகள், பற்குணத்துக்கு எதிரான சதிவலைகளை பின்னியிருந்தார்கள்.நான் கனடா வந்தபோது என்மனைவி குடும்பத்தின் நண்பர் ஒருவர் என்னைக் காண வந்தார்.அவருக்கு பற்குணத்தை தெரியாது.அவரின் சகோதரி ஒருவர் பற்குணம் பற்றியும் அவரின் நேர்மை மற்றும் அவருக்கு எதிரான சதிகளை பற்றியும் கூறியிருந்தாராம்.

இதுபற்றி பற்குணத்திடம் கேட்ட போது அதை அவர் மறுத்தார்.தான் பல ரசீதுகளை தவறவிட்டதால் கொஞ்சம் கணக்கில் தவறு காணப்படுகிறது.என் தவறுக்கு மற்றவர்களை காரணம் கூற முடியாது என்றார்.அவரின் கூற்றுப்படி கொஞ்சம் அவரின் சக்திக்கு மீறிய பணம் நிலுவையில் இருந்தது என்றே நினைக்கிறேன்.

அப்போது மாகாண சபை மிகவும் நெருக்கடியில் இருந்தது.இந்திய இராணுவத்தின் வெளியேற்றம் பெரும் பதட்டமான சூழ்நிலை உருவாக்கியது.அப்போது பற்குணத்துடன் தொடர்பு கொண்டேன்.அவரின் நிதி பிரச்சினை தொடர்பாக கேட்க எல்லாம் சரியாகிவிட்டது என்றார்.

பற்குணத்தை நம்பி பொறுப்பை ஒப்படைத்த வரதராஜ பெருமாள் தன் கணக்கிலும் சரி மற்றவர்கள் கணக்கிலும் கவனமாகவே இருந்திருக்கிறார்.இதன் காரணமாக கணக்கில் எந்த தவறுகளும் ஏற்படவில்லை.அவரின் பொருளாதார படிப்பு ,நிர்வாக திறமை, பற்குணத்தையும் காப்பாற்றியது

.சில மனிதர்கள் சதி செய்தபோதும் வரதரின் கவனத்தால் ஈடேறவில்லை.இது சதி என தெரிந்தும் பற்குணம் யாரையும் குற்றம் கூறவில்லை.அந்த இக்கட்டான நிலையிலும் தன்னை நம்பி மாகாண சபையில் சேர்ந்த பற்குணத்தை அவப் பழியில் இருந்து காப்பாற்றிய வரதாஜ பெருமாள் நன்றிக்கு உரியவரே.

.அவர்கள் மாகாண சபையைவிட்டு நெருக்கடியில் வெளியேறியபோதும் கணக்கு வழக்கை சரியாகவே விட்டு வெளியேறியதாக பற்குணம் கூறினார்.வரதர் தான் ஒரு பொருளாதார பட்டதாரி என்பதை நிரூபித்தே சென்றார்.

இந்திய படைகள் வெளியேறியதால் மாகாண சபை அதிகாரிகளும் விலகிவிட்டனர்.பற்குணம் நிலமையை கருத்தில் கொண்டு கண்டியில் வந்து இருந்தார்.இவர்களை பாதுகாக்க வேண்டிய பிரேமதாசா அரசும் கைவிட்டது.

அன்று மாகாண ஆளுனராக இருந்தவர ( நளின் செனவிரத்னா ) பற்குணத்துடன் தொடர்பு கொண்டு பதவியை மீண்டும் பொறுப்பேற்கும்படி அழைத்தார்.இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி புலி ஆதரவாளர்கள் தாங்களே எதிர்த்த மாகாண சபைக்குள் வரத் தயாரானார்கள்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)