பற்குணம் (பதிவு 12)

எமது பெரிய அண்ணன் அப்போது றத்தோட்டையில் ஆசிரியராக பணிபுரிந்தார்.எனவே அண்ணன் கண்டிப்பாக வருவார் என நம்பினார்.அவர் வரவே இல்லை.இதனிடையே பற்குணத்தின் சங்கடமான நிலைமையைப் புரிந்த சக மாணவ நண்பர்கள் தங்களிடமுள்ள மீதிப் பணங்களைச் சேர்த்து அவருக்குரிய பதிவுகளை செய்ய உதவினார்கள் .அன்றைய கால மாணவர்களின் புரிந்துணர்வு அப்படி இருந்தது.

பற்குணம் எந்த சூழ்நிலையிலும் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதில்லை.முடிவுக்கு வருவதும் இல்லை.இதனால் அண்ணனைப் பற்றி தவறாகவோ கோபமாகவோ கருதவில்லை .அவருக்கு என்ன நடந்திருக்கும் என்ற சிறிய பயமே இருந்தது.எனவே வீட்டிற்கு கடிதம் போட்டார்.இதை அறிந்த அய்யா அவரின் வீட்டிற்கு சென்றார்.அவரின் வீடு அச்சுவேலியில் இருந்தது.அண்ணியும் உறவினர்களும் அவர் கொண்டு போய் கொடுத்துவிட்டு போனதாக கூறினர்.

ஆனால் பெரிய அண்ணன் பணத்தை தன் தேவைக்கு எடுத்துவிட்டார்.தம்பியின் படிப்பைப் பற்றி கொஞ்சமும் உணரவில்லை.அய்யா அடிக்கடி அவர் வீடு போய் வந்தும் இரண்டு மாதங்களாக அவர் எந்த தகவலும் தரவில்லை .வரவும் இல்லை.கடினமாக நடந்துகொள்ளவும் முடியவில்லை .ஏனெனில் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதால்.

இரண்டு மாதம் கழித்து பெரிய அண்ணன் பற்குணத்தை சந்திக்கப் போனார்.ஏனெனில் ஊருக்கு திரும்பிவர வேண்டும்.அய்யா அம்மாவை சமாளிக்க வேண்டும்.பற்குணத்திடம் அவர் 40 ரூபா கொடுத்தார்.அதைப் பற்குணம் வாங்கவில்லை .திருப்பிக் கொடுத்து அனுப்பிவிட்டார்.பெரிய அண்ணன் எடுத்துச் சென்ற 500 ரூபா கடைசிவரை கொடுக்கவில்லை .பதிலும் சொல்லவில்லை.எந்த கூச்சம்,வெட்கம் இன்றி வந்துபோனார்.அவருடைய மகளின் (பேரப்பிள்ளை) அன்பு காரணமாக அம்மா அய்யாவால் கோபம் காட்ட முடியவில்லை .

பற்குணம் பல்கலைக்கழகம் சென்றுவிட்டார்.ஆனால் தொடர்ந்துவரும் செலவுகளை எப்படி சமாளிப்பது என்ற கேள்வி எழுந்தது.அய்யாவின் தொழிலான மரம் ஏறும் தொழிலை யாழ்ப்பாணத்தில் செய்ய முடியாது.சீவல் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் உயர்சாதி மதுவரி உத்தியோகத்தர்கள் தொல்லை அதிகம்.

எனவே அய்யா குடும்பத்தை விட்டுப் பிரிந்து கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தார்.அங்கிருந்து ஓரளவு உழைக்கூடியதாக இருந்தது.ஆனாலும, கடன்,வாங்காமல் வாழ முடியவில்லை .உறவுனர்களைத் தவிர வெளி மனிதர்கள் பலர் தேவைகளுக்கு கை கொடுத்தனர்.

(விஜய் பாஸ்கரன்)
(தொடரும்…..)