பற்குணம் ( பதிவு 16)

பற்குணத்துக்கும் நடராசா குடும்பத்துக்கும் கடித மூலமான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.நடராசாவின் தம்பி தங்கராசா,இராசதுரை ஆகியோரும் பண்பற்ற முறையில் கடிதங்களை எழுத பற்குணம் தன் கௌரவம் கருதி பதிலளிப்பதை நிறுத்திவிட்டார்.இதில் இராசதுரை நாகரீகமற்ற வார்த்தைகளைப் பாவித்தார்.இதன் காரணமாக இந்தக் குடும்பத்துடனான தொடர்புகள் விடுபட்டன. பற்குணம் விரிவுரையாளர்.

திருச்சியில் வசிக்கும் சுப்பிரமணியம் என்பவர் பற்குணத்தின் நண்பர்.லாலாபேட்டை என்னும் இடத்தில் இந்தியன் வங்கியின் முகாமையாளர்.பற்குணத்துக்கு ஒரு வருடம் பின்பாக பல்கலைக்கழகத்தில் படித்தவர்.அவர் சொன்னவை இது.

பற்குணம் முதலாவது தரத்தில் பாஸ் பண்ணுவார் என எதிர்பாரத்தோம்.ஆனால் அவர் இரண்டாவது தரத்திலேயே பாஸ் பண்ணினார்.அவர் விரிவுரையாளர் ஆனபோது நாங்கள் சந்தோசப்பட்டோம்.விரிவுரையாளர் ஆனவுடன் கோட்டுடன் வருவார் என பலரும் எதிர்பார்த்தனர்.அவர் வழமைபோலவே சாதாரணமாகவே வந்தார்.இவரே அப்படி வந்த விரிவுரையாளர்.

நாங்கள் படிக்கும் காலத்தில் யாழ்ப்பாண மாணவர்களே அதிகம்.அவரகள் மற்ற இடங்களிலுள்ள தமிழ் மாணவர்களின் தமிழ் உச்சரிப்பை கிண்டலடிப்பார்கள்.குறிப்பாக மலையக மாணவரகளையே அதிகம் கிண்டல் பண்ணுவார்கள்.இதனால் நாங்கள் அதிகம் மேடைகளில் ஏறி பேச விரும்புவதில்லை.இதற்கு பற்குணம் விதிவிலக்கானவர்.எங்களை உற்சாகப் படுத்தியவர்.அவரினோ முதல் விரிவுரை எங்களுக்கே நடாத்தினார்.என்னை எழுப்பி வாசிக்க செய்தார்.
இவர் விரிவுரையாளர் ஆன பின்பு பல ஏழை மாணவரகளுக்கு அதுவும் தாழ்த்தப்பட்ட சமுக மாணவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தார்.எங்கள் குடும்ப நிலை அறிந்த பலர் இதை பற்குணத்திடம் அவரின் நலன்கருதி கூறியபோதும் அதை தொடர்ந்து செய்தார் .

1969 இல் நிர்வாக சேவை பரீட்சையில் வெற்றிபெற்று மூன்றாவது நபராக தேர்வானார் .இவருக்கான பயிற்சி மட்டக்களப்பு வாழைச்சேனை காரியாலயத்தில் (டி.ஆர. ஓ) ஆரம்பமானது.இவரோடு இவருடைய நண்பர்கள் சிலரும் தெரிவானார்கள்.

அய்யா அன்று வேடிக்கையாக என் மகன் சிலவேளை மணியகாரனாக வருவான் என்ற வார்த்தை நிஜமானது.இலங்கையில் தாழ்தப்பட்ட அதுவும் ்பொருளாதார ரீதியாகவும் வறுமையான குடும்பத்தில் இருந்து நிர்வாக சேவைக்கு மிக இளம் வயதில் தெரிவானவர் பற்குணம்.அப்போது அவருக்கு வயது 25.

இவர், நிர்வாக சேவைக்கு தெரிவானது அறிந்த நடராசா வாழ்த்து தெரிவித்தார். மறுபுறம் இந்த வேலை எனக்கு எம்.பி.நவரத்தினம் மூலமாக கிடைத்தது. நான் தான் எனக்கு வேண்டாம் பற்குணத்துக்கு கொடுங்கள் என நவரத்தினத்திடம் சொன்னேன் என சில அறியாத பாமர மக்கள் மூலம் கதை பரப்பினார்.ஆனால் இது முதல் கதை அல்ல.அன்றைய காலத்தில் யாராவது எஸ.எஸ.சி பாஸ் பண்ணினால் தானே பாஸ் பண்ண வைத்ததாக கதைகள் உலாவ விட்டவர்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்…..)