பற்குணம் A.F.C (பகுதி 65 )

பற்குணம் இருந்த வீட்டில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதன் காரணமாக பற்குணம் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும்.அதற்கு முதலில் பொலிஸில் சரண்டைய வேண்டும் .இது மிக ஆபத்தான ஒன்றாக இருந்தது.

இது தொடர்பாக பற்குணத்தின் நண்பரான தங்காலை பொலிஸ் அதிபர் ரி.ஈ.ஆனந்தராசா கவனமெடுத்தார்.வழக்கு பிரபல வழக்கறிஞ்ஞரான தயா பெரேராவிடம் கையளிக்கப்பட்டது .அவரும் விபரங்கள் அறிந்து அந்த வழக்கை மிக சுலபமாக வென்று தருவதாக உறுதியளித்தார்.அந்த வழக்கை இரண்டு அல்லது மூன்று தவணைக்குள் முடித்து தருவதாகவும் உறுதியளித்தார்.

இதன் பின் பற்குணத்தை நீதிமன்றத்தில் ஆஜராக்கும் நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனந்தராசா பற்குணத்தை பொலிஸ் விதிப்படி கூண்டில் அடைத்து பின் ஆஜராக்க வேண்டும். எனவே மற்ற கைதிகளுடன் அடைத்தால் பற்குணத்தை இனம் கண்டால் ஆபத்தாகிவிடும. எனவே தனிக் கூண்டில் அடைக்கப்பட்டார்.

பற்குணத்தின் வழக்கை ஆங்கிலத்தில் வாசிக்க தயாபெரேரா ஏற்பாடு செய்தார்.பற்குணத்தின் வழக்கு தொடர்பாக அறிவிக்கப்பட்டபோது அடுத்த கூண்டில் உள்ள சிங்கள கைதிகள் விளங்கி ஏதோ வகையில் அந்தக் கூண்டில் இருந்து இந்தக் கூண்டிலில் உள்ள பற்குணத்தின் சட்டையைப் பிடித்து இழுத்தனர். இதை எதிர்பார்த்த ஆனந்தராசா உடனே அதை தடுக்க ஏற்பாடுகள் பண்ணினார்(இவர்தான் பின்னாளில் பொலிஸ் மா அதிபராக இருந்தவர்).

பற்குணம் ஒருவாறாக நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையில் வெளியே வந்தார். வாக்குறுதி அளித்தபடியே தயா பெரேரா வழக்கை இரண்டு தவணைகளில் சுலபமாக முடித்துக்கொடுத்தார்.பற்குணத்துக்கு எதிரான வழக்கு தோல்வி கண்டது. இது ஊரடங்கு நேரத்தில் நடந்த சம்பவம் என்பதால் சாட்சிகளால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. எனவே வழக்கு தோல்வி கண்டது. ஒரு வழக்கறிஞரின் நேர்மையை திறமையை பாராட்டியே ஆகவேண்டும்.

பற்குணம் ஒருநாள் கொழும்பு தலைமை காரியாலயம் சென்றபோது தலைமை ஆணையாளர் பற்குணத்திடம் உங்களை ஒருவர் காணவிரும்புகிறார்.அவரை சந்திக்க விருப்பமா எனக் கேட்டார். அதற்குப் பற்குணம் சரி என்றார். பின்னர் அவர் சந்திக்க விரும்புபவர் யார் எனக் கேட்டார். அவர்தான் கொல்லப்பட்ட இளைஞனின் அண்ணன் என்றார். சில நிமிட மௌனத்தின் பின் சம்மதித்தார்.

பின்னர் அந்த நபரை சந்தித்தபோது மிகவும் கவலைப்பட்டார். தன் சகோதரனின் நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்தார். அதவரைக்கும் அந்தக் கொலை தொடர்பாக வருந்ததாத பற்குணம் மிக வருந்தினார். இந்தக் கதையை அம்மாவிடம் சொன்னார். அவரின் முகத்தில் வழக்கை வென்றபோதும் வருத்தம் தெரிந்தது.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)