பற்குணம் A.F.C (பகுதி 66 )

பற்குணம் வவனியாவுக்கு வருவதை உணவுத்திணைக்களம் உறுதி செய்தது.பற்குணத்தின் இக்கட்டான நிலை தெரிந்தும் பல தமிழர்கள் பற்குணத்தின் வரவை விரும்பவில்லை .அதனால் அவர்கள் சாதி என்ற வகையில் அக்கியப்பட்டு அவரின் வரவை எதிர்த்தனர்.

உண்மையில் அவர்களின் எதிர்ப்பின் அர்த்தம் சாதி அல்ல.பற்குணம் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக வருவதால் உணவு மற்றும் கூட்டுறவுத் துறையில் பணியாற்றுபவர்களின் வருமானம் பாதிக்கப்படும்.இதுவே அவரகளின் எதிர்ப்பின் பிரதான காரணம்.பற்குணம் திருகோணமலையில் பணியாற்றும்போதே இவர்கள் அவரைப் பற்றி அறிந்திருந்தார்கள்.அதைத் தடுக்க அன்றைய யு.என.பி அமைப்பாளர் புலேந்திரனைக் கூட அணுகியிருந்தார்கள்.

பற்குணம் பொறுப்பேற்க வரும்போது அவருக்கான ஒழுங்குகளை செயலக நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.இதை உணவுத்துறை மட்டுமல்ல பலர் அதைத் தடுத்தனர்.அப்போது அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த பற்குணத்தின் நண்பரான லங்காநேசன் அறிந்து அவற்றை சரி செய்தார்.

இதைக் கண்ட சில அதிகாரிகள் அவன் உன் நண்பன் என்பதால் இதை செய்கிறாயா.ஏன் பற்குணத்தை தூக்கிப்பிடித்து செய்கிறாய் என சாதியை இழுத்து ஏளனமாக கேட்டார்கள்.அதற்கு லங்கா நேசன்

இதை நான் பற்குணத்துக்காகவோ அல்லது அவன் என் நண்பன் என்பதற்காகவோ செய்யவில்லை .உங்களுக்காகவே செய்கிறேன்.உங்களை பற்குணத்திடமிருந்து பாதுகாக்கவே செய்கிறேன்.எனக்கு பற்குணத்தை பல்கலைக்கழகத்திலிருந்து தெரியும்.அவனைப் பற்றி முழுமையாக உங்களுக்குத் தெரியாது.இனிமேலாவது அவனோடு கவனமாக நடவுங்கள் என எச்சரித்தார்.
(இந்த தகவலை லங்காநேசனின் மைத்துனர் கனகமனோகரன் கூட என்னுடன் ஒருநாள் அவராகவே பகிர்ந்து கொண்டார்.தமிழர்களின் இன அக்கியத்தின் யோக்கியதையை புரிந்துகொள்ள முடிகிறது)

பற்குணம் முதல்முதலாக வடமாகாணத்தில் காலடி எடுத்து வைத்தார்.இவ்வளவு பிரச்சினைகளை தமிழ் சமூகம் எதிர்நோக்கியபோதும் பற்குணம் பல்வேறு தடைகளை தாண்டி வந்தபோதும் அவரை தமிழனாக இந்த தமிழ் சமூகம் வரவேற்க தயாராக இருக்கவில்லை.

ஆனால் பற்குணம் இவர்களை எதிர்கொள்ள தயாராகவே வவனியாவுக்குள் நுழைந்தார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)