பற்குணம் A.F.C (பகுதி 70 )

1978 ம் ஆண்டு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கி ,விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் சர்வ அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி ஆட்சி முறை உருவானது.இதில் பேசிய ஜே.ஆர் இந்த ஜனாதிபதி ஆட்சி முறையில் ஆணை பெண்ணாகவோ அல்லது பெண்ணை ஆணாகவோ மட்டும் மாற்றமுடியாது.மற்ற சகல விசயங்களையும் செய்ய முடியும் என்றார்.பிரதமர் பதவியைக்கூட கேவலமாக விமரச்சித்தார்.

1978 இல் மட்டக்களப்பில் பெரும் சூறாவெளி வீசி பலத்த சேதத்தை உண்டு பண்ணியது.எனவே இந்த பகுதி மக்களின் அவசர தேவை கருதி ஜனாதிபதி நிதி ஒன்றை ஏற்படுத்தி அரச ஊழியர்களிடம் சம்பளத்தின் ஒரு பகுதியை கோரினார்.

இது சம்பந்தமான சகல அறிவித்தல்களும் அரசாங்க அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன.இதுசம்பந்தமாக ஒரு படிவத்தில் அரசாங்க ஊழியர்கள் கையெழுத்து இடுமாறு கோரப்பட்டனர்.இது சம்பந்தமான படிவத்தில் பற்குணம் மட்டும் கையெழுத்து இடவில்லை.இதை அறிந்த அரச அதிபர் பற்குணத்துக்கு ஞாபகம் ஊட்டினார்.ஆனால் பற்குணம் மறுத்துவிட்டார்.ஆனால் காரணம் சொல்லவில்லை .வேறு வழியின்றி அரச அதிபர் சகல படிவங்களையும் அனுப்பிவிட்டார்.பற்குணத்தின் முடிவையும் தெளிவு படுத்தி அனுப்பினார்.

சில நாட்களின் பின்பாக ஜனாதிபதியின் செயலாளரிடம் இருந்து விளக்கம் கோரி கடிதம் வந்தது.அதற்கும் பற்குணம் எனக்கு விருப்பம் இல்லை என விளக்கம் எதுவுமின்றி பதில் அனுப்பினார்.அதற்குப் பதிலாக திகதி,நேரம் என்பன குறிப்பிட்டு ஜனாதிபதி அலுவலகம் வந்து விளக்கம் அளிக்குமாறு பதில் வந்தது.

பற்குணம் குறித்த திகதியில் ஐனாதிபதி செயலகத்துக்கு சென்றார்.ஜனாதிபதியின் செயலாளரைக் சந்தித்தார்.அப்போது அவர் ஜனாதிபதி பார்க்க விரும்புகிறார் என சொல்லி காத்திருக்கச் சொன்னார்.பற்குணத்துக்கு கொஞ்சம் அதிரச்சியாகப் போய்விட்டது.தனது நடவடிக்கையால் தன்னை பதவியைவிட்டு தூக்குவார்கள் என்றே எதிர்பார்த்தார்.

ஜே.ஆர் வந்து மிகவும் பக்குவமாகவே பேசினார்.பின்னர் அமைதியாக விளக்கம் கேட்டார்.அப்போது பற்குணம் இனக்கலவரத்தில் நடந்தவை தொடர்பாக விளக்கி,அதன் பின்னால் தனக்கு வருடாந்திர சம்பள உயர்வு,மற்றும் தரம் உயர்வு வழங்கப்படவில்லை எனவும் எனவே தன்னால் கையெழுத்திட முடியாது எனவும் கூறினார்.அதற்கு ஜே.ஆர். பதவி உயர்வு தருவதாகவும் ,எனவே கையெழுத்து இடும்படி கூறினார்.அதற்குப் பற்குணம் அது தேவை இல்லை எனக்கு கிடைக்க வேண்டியவை கிடைத்தால் தான் கையெழுத்திடுவேன் என்றார்.

ஜே.ஆர். மௌனமாக அதற்கான ஏற்பாட்டை செய்துகொடுக்கும்படி தனது செயலாளரிடம் பணித்தார்.ஜே.ஆர்.சொன்னதுபோல பற்குணத்தின் கோரிக்கையை நிறைவேற்றினார்.தனக்கு கிடைத்த சம்பள உயர்வுப்பணம் அனைத்தையும் ஜனாதிபதி நிதிக்கு கொடுத்தார்.

அந்த சந்தர்பத்தை பயன்படுத்தியிருந்தால் அவர் குறுகியகாலத்தில் பெரிய பதவியில் இருந்திருப்பார்.சலுகைகள் பெற்று அடிமையாக சேவை செய்வதை விரும்பவில்லை.

(தொடரும்….)

(Vijay Baskaran)