பற்குணம் A.F.C ( பகுதி 73 )

மன்னாரில் பற்குணத்தின் அலுவலகத்தில் ஒரு இளைஞர் வேலை செய்தார்.மிக சுறுசுறுப்பானவர்.இதன் காரணமாக பற்குணம் கொஞ்சம் அவர்மீது அக்கறை கொண்டிருந்தார்.ஆனால் அவர் கொஞ்சம் குடிப்பழக்கம் உள்ளவர்.எனக்கும் அவர் நல்ல அறிமுகம்.நான் மன்னார் செல்லும்போது அவருடனேயே உணவருந்த செல்வேன்.

அந்த இளைஞர் ஒரு நாள் குடித்துவிட்டு மிதமிஞ்சிய போதையில் மன்னார் கச்சேரியை அண்மித்த பிரதான இடத்தில் இரவு வேளையில் வீழ்ந்து கிடந்தார்.இந்த தகவலை யாரோ பற்குணத்திடம் சொன்னார்கள்.அப்போது பற்குணம் கொஞ்சம் கோபப்பட்டு அவனை அப்படியே அங்கே விட்டுவிட்டீர்களா எனக் கேட்டார்.அவன் குடித்துவிட்டு கிடக்கிறான் அதற்கு நாங்கள் என்ன பண்ணமுடியும் என பதிலளித்தார்கள்.

இதனால் வருத்த்ப்பட்ட பற்குணம் அவனுக்கு பாம்பு பூச்சிகள் கடித்து ஏதாவது நடந்தால் நாளைக்கு நாங்கள்தான் வருத்தப்பட வேண்டிவரும் .நாளைக்கு நீங்களும் இப்படி எங்காவது வீழ்ந்து கிடந்தால் நான் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன் ,எனக் கூறி சிலரை அழைத்துக்கொண்டு அவன் வீழ்ந்து ்கிடக்கும் இடம் நோக்கிப் போனார்.

அவன் மரத்தின் கீழே வீழ்ந்து கிடந்தான்.இரவுவேளையானதால் அம்மரத்தின் மீது பறவைகள் இருந்து அவன்மீது எச்சங்களைக் கொட்டி இருந்தன.ஆனாலும் பற்குணம் அருவருக்காமல் வந்தவர்கள் துணையுடன் கைத் தாங்கலாக கொண்டுவந்து அவனை கழுவி தன் கட்டிலில் படுக்க வைத்தார்.அவன் போதை காலையிலேயே தெளிந்தது.

எழும்பிப் பார்த்தான்.அவனுக்கு இடம் புதிதாக இருந்தது.கீழே தரையில் பற்குணம் படுத்திருந்தார்.அவன் திகைத்துவிட்டான்.பற்குணம் உறக்கம் கலைந்து எழுந்த பின் விபரத்தைக் கேட்டான்.அவனுக்கே வெட்கமும் கவலையும் வந்தது.

அவனிடம் பற்குணம் நீ குடிப்பதை நான் ஒன்றும் சொல்லவில்லை.ஆனால் குடிக்கும்போது உன் அளவு உனக்கு தெரியவேண்டும்.இப்படி ரோட்டில் வீழந்துகிடக்கும் அளவுக்கு குடிக்காதே எனச் சொல்லி அனுப்பி வைத்தார்
(இந்தக் கதை அந்த இளைஞனே எனக்கு சொன்னது)

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)