பல்தேசியக் கம்பனிகளால் பறிபோகும் விவசாயம்

”ராஜராஜசோழன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய போது அமெரிக்கா என்றொரு நாடே
இருக்கவில்லை. ஏன் அப்படி ஒரு நிலப் பரப்பே நவீன மனிதர்களால்
கண்டறியப்படவில்லை.”
வவுனியாவில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் தமிழருவி சிவகுமாரன்
ஐயா ஆற்றிய உரையில் ஒரு கீற்று இது.
தமிழன் உயர் நிலைகளைக் கண்ட பொற் காலத்தின் போது ஐரோப்பியர்கள்
உன்னதங்களைத் தொடவில்லை.ஆனால் இன்று அப்படியாகவா இருக்கிறோம்.அமெரிக்காவின் பல்தேசியக் கம்பனிகள் எமது பாரம்பரிய விவசாயத்தை நாசம்
செய்வதை நாமும் விரும்பி ஏற்றுக் கொள்கின்றோமே.
உன்னதங்களைக் கண்ட தமிழன் உலக வல்லரசுகளிடம் அடிமையாகவல்லவா இருக்கிறான்.
றெட் லேடி என்றொரு பப்பாசி இனம் எமது பிரதேசங்களில் அறிமுகம் செய்த போது
மூத்த கிராம சேவகர்கள் (G.S ) ,மூத்த விவசாயிகள் அதை எதிர்த்தார்கள்.
இந்த இனம் எமது பாரம்பரியமான பப்பாசி இனத்தை முற்றாக அழிவடையச் செய்து விடும்.
எமக்கு இந்த றெட்லேடி இனம் வேண்டாமென்றார்கள்.
எமது ஊர்ப் பப்பாசியே போதுமென்றார்கள்.
இல்லையில்லை. இலவசமாகத் தருகின்றார்கள். நல்ல விளைச்சலைத் தரும் இனம்
வாங்குங்கள். பொது மக்களுக்கும் கொடுங்கள் என அரச அதிகாரிகள்
கூறினார்கள்.
இலவசம் என்பது எம்மைப் பிடிப்பதற்கான தூண்டில் அல்லவா.
அவர்கள் முதலில் இப்படித் தான் தருவார்கள் . பின்னர் காசு கொடுத்துத்
தான் வாங்க வேண்டுமென்று கூறுவார்கள்.
வெள்ளைக்காரன் பிளேன் ரீ குடிக்கப் பழக்கியும் மணிக்கூடு பார்க்கவும்
பழக்கியது போலத் தான் இந்த றெட் லேடி பப்பாசி இனமும் எமது பாரம்பரியங்களை
அழிக்கத் தான் தருகின்றார்கள்.
இது வேண்டாமென மூத்த கிராம சேவகர்கள், மூத்த விவசாயிகள் எதிர்த்தார்கள்.
ஆனால் பல்தேசியக் கம்பனிகளது இலவச வலைக்குள் ஏற்கனவே உயர் மட்டங்கள்
வெற்றிகரமாக வீழ்த்தப்பட்டு விட்டதால் கீழ் மட்ட அதிகாரிகளால் ஒன்றுமே
செய்ய முடியாத நிலை.
அவர்களுக்கு யாரை எப்படி எங்கே வீழ்த்த வேண்டுமென்று தெரியும்.
ஒரு சில ஆயிரம் பேர் படையெடுத்து வந்து பலகோடி மக்களை 400 வருடங்கள் வரை
அடிமையாக வைத்திருந்த வித்தை தெரிந்தவர்கள் அல்லவா.

அரச அதிகாரிகளோ தமக்கு இடப்பட்ட உத்தரவுகளை அச்சொட்டாக நிறைவேற்றினார்கள்.
இலவசமாக வந்த றெட்லேடி சுவை காரணமாகப் புகழப்பட்டது. ஆனால் எமது
பாரம்பரிய பப்பாசிப் பழத்தில் இயற்கையாகவே அமைந்த மருத்துவக் குணங்கள்
றெட்லேடியில் இருக்கவில்லை.

றெட்லேடி நாளடைவில் அழுக்கணவன் போன்ற நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகியது.
மண்ணை நாசமாக்கும் மருந்துக்காகப் பெருமளவு பணமும் செலவாகுகிறது.
சிறுநீரகப் பாதிப்பு எனும் புதுநோயை எமக்குக் கூடவே இலவசமாகத்
தந்தார்கள். இந்தியாவில் ஆடித் தள்ளுபடிக்கு ஒன்று எடுத்தால் ஒன்று
இலவசம் என்பது போல நோய்களைத் தந்தார்கள்.
அதற்கு மருந்துகளைக் கொள்ளை விலையில் விற்று அதிலும் பணம் உழைத்தார்கள்.
மரபணு நீக்கப்பட்ட றெட்லேடி பப்பாசிப் பழத்திலிருந்து எடுக்கும் விதைகள்
முளைக்க மாட்டாது.
சும்மா கொடுத்த றெட்லேடி விதைக்கும் பெருமளவு பணம் செலவாகிறது.
றெட்லேடி எமது பாரம்பரிய பப்பாசி இனங்களை மலட்டுத் தன்மை உடையதாக்கி
விட்டது என வேளாண் விஞ்ஞானிகள் ஆதாரங்களுடன் கூறுகின்றனர்.
இன்று எமது பாரம்பரிய பப்பாசி இனம் இல்லையென்று சொல்லுமளவுக்கு நிலைமை
போய் விட்டது.
எமக்கென்று பாரம்பரியம் மிக்க பூசணிக்காய் இனமொன்று பரம்பரை பரம்பரையாக இருந்தது.
ஹைபிறிட் எனப்படும் மரபணு நீக்கப்பட்ட பூசணி விதையை ஆரம்பத்தில்
இலவசமாகக் கொடுத்தார்கள்.
மருந்து மாத்திரை சகலதும் இலவசமாகக் கொடுத்து வெள்ளைக்காரன் பிளேன் ரீ
குடிக்கப் பழக்கியது போல பூசணிக்காயையும் பழக்கி விட்டார்கள்.
எங்கட சனமும் அதற்குத் தம்புள்ளைப் பூசணிக்காய் எனப் பெயர் வைத்தார்கள்.
தம்புள்ளைச் சந்தையிலிருந்து தான் முதன்முதலில் இந்தப் பூசணிக்காய்
யாழ்ப்பாணத்திற்கு வந்தது. அதனால் அந்தப் பெயர் வந்தது.
இலவசமாகக் கொடுத்துப் பழக்கியது நாளடைவில் காசு வாங்கி விதை
விற்குமளவுக்கு வளர்ந்தது.
இன்று 1000, 2000 , 3000 ,4000 ரூபாக்களுக்கு மரபணு நீக்கப்பட்ட விதைகள்
விற்கப்படுகிறது. ஏன் 10 000 ரூபா என்றாலும் வாங்கத் தானே வேண்டும்.
அதை முளைக்க வைப்பதற்கு ஒரு வகை இரசாயனப் பசளையிட வேண்டும். பின்பு வளர
வைப்பதற்கு இன்னொரு வகை இரசாயனப் பசளையிட வேண்டும்.
15 நாளுக்கு ஒரு முறை மருந்து அடிக்க வேண்டும்.
இவற்றுக்குப் பல்லாயிரக் கணக்கில் இறைக்கும் காசு யாவும் அமெரிக்காவின்
பல்தேசியக் கம்பனிக்குச் சென்று விடும்.
தம்புள்ளைப் பப்பாசி தான் ருசி ருசியென எங்கட சனமும் வாங்குவதால்
கடைகளில் ஊர்ப் பூசணிக்கு மாக்கெற் இல்லை.
தம்புள்ளைப் பூசணி கட்டியாக இருக்கும். சிறிய அளவு சைஸ். அதனால் அழுகாது.
ஆனால் ஊர்ப் பூசணி பெரிய சைஸ். வெட்டினால் சனம் உடனே வாங்கி முடிக்காது.
அதனால் அழுகி விடுமென்று கடைக்காரர்களும் வாங்குவதில்லை.
பாரம்பரியத்தைக் காப்பாற்ற விரும்பும் விவாயி, ஹைபிறிட் இனத்தைக் காசு
கொடுத்து வாங்க முடியாத ஏழை விவசாயி ஊர்ப் பூசணிக்காய் விதையை நட்டு
விளைவித்து பூசணிக்காய்களை விற்க முடியாது.
விவசாயத்துறை அதிகாரிகளை கேட்டால் சந்தை வாய்ப்பு இல்லாதவற்றைச் செய்ய
விவசாயிகளை நாம் என்னென்று ஊக்குவிக்க முடியும் என்கிறார்கள்.
சந்தை எம்மைத் தேடி வராது .சந்தையை நாம் தான் தேடிப் போக வேண்டும்.
ஊரெங்கும் குச்சு ஒழுங்கை எங்கும் கோயில்கள்.
திருவிழாக் காலங்களில் தினந்தோறும் அன்னதானம் நடத்துகின்றார்கள்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலில் தினந்தோறும் அன்னதானம். முதியோர்
இல்லங்கள், சிறுவர், மாற்றுத் திறனாளிகள் இல்லங்கள், பாடசாலைகளின் மாணவர்
விடுதிகள் என ஏராளம் சந்தை வாய்ப்புகள் உள்ளன.
மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்திற்கும், பிரதேச செயலகப் பிரிவுகளின்
விவசாயக் குழுக் கூட்டங்களுக்கும் அவர்களை வரவழைத்து அல்லது தனியாக
அழைத்து எமது பாரம்பரிய விவசாய விதை இனங்களின் உற்பத்திகளை கொள்வனவு
செய்ய ஊக்குவிக்கலாம் அல்லவா.
கடைகளில் சந்தைகளில் சனங்கள் வாங்கவில்லையென்று சொல்வது தவறு. சனங்களை
வாங்கச் செய்வதற்கு சுதேசியங்கள் குறித்த விழிப்புணர்வைச் செய்வதற்கு
நாம் என்ன செய்தோம்?
பப்பாசி அழிந்து விட்டது. எமது மண்ணுக்கே உரித்தான ஊர்ப்பூசணிப்
பரம்பரையும் செகிடம் இழுக்கின்றது.
இது போல ஹைபிறிட் இனங்கள் உள்ளதாக சகல விதமான மரக்கறி வகைகளும் வேகமாக
வந்து கொண்டிருக்கின்றன.
முன்பு ஒரு பச்சை மிளகாயைக் கடித்தால் வாயெல்லாம் கடுமையாக உறைக்கும்.
இன்று ஹைபிறிட் மிளகாய் சாடையாக ஒரு உறைப்பு.
மரபணு நீக்கப்பட்ட விதை இனங்களை அவர்கள் தருவதிலிருந்தே எம்மை
அழிப்பதற்கான உயிரியல் போர்த் தாக்குதல் இதுவெனப் புரிந்து கொள்ள
வேண்டும்.
அவுஸ்திரேலிய சிட்னிப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் விஞ்ஞானியும் சிறந்த
எழுத்தாளருமான ஆசி. கந்தராஜா இது தொடர்பான விழிப்புணர்வைத்
தொடர்ச்சியாகவே ஏற்படுத்தி வருகின்றார்.
கறுத்தக்கொழும்பான், செல்லப்பாக்கியம் மாமியும் முட்டிக் கத்தரிக்காயும்,
கள்ளக்கணக்கு என நீளும் அவரது நூல்கள் யாவும் எமது மண்ணுக்கே உரித்தான
பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கான செய்திகளாகவே உள்ளன.
அவர் இலகு தமிழில் தரும் செய்திகளை நாம் வெறும் புனை கதைகளாகப் பார்த்து
விட்டுப் போகின்றோ்.
இது எமது விவசாயத்தை அமெரிக்கரிடம் அடகு வைப்பதாக முடிகிறது.

வட துருவப் பிரதேசங்களில் பனி பொழியும் காலங்களில் சைபீரியாவிலிருந்து
பறவைகள் பறந்து வந்து எமது வயல்களில் அமர்கின்றன.
அவற்றின் இறக்கைகள் மூலமாகக் கால்கள் மூலமாக நோய் பரப்பும் கிருமிகளை
எமது வயல்களில் பரவச் செய்து எமது பாரம்பரிய விவசாயத்தை அழிவடையச் செய்ய
வளர்ந்த நாடுகள் சதி செய்கின்றன என்றொரு குற்றச்சாட்டும் உள்ளது.
இந்திய தமிழகத்தில் பாரம்பரிய நெல் விதை இனங்களை மீட்பதற்கான
போராட்டத்தில் ஜெயராமன் என்றொருவர் தனது வாழ்நாளையே செலவழித்தார்.
அது போல எமது நாட்டிலும் எமது மண்ணிலும் பாரம்பரிய விவசாய இனங்களைக்
காப்பாற்றுவதற்கான மனிதர்கள் தோன்ற வேண்டும்.

இது தான் காலம் தரும் கட்டாயச் செய்தி.

(வேதநாயகம் தபேந்திரன்)
எதிரொலி 16.01.2019 புதன்கிழமை