பாஞ்சாலி சபதம்! காவியம் கலந்த நிகழ்கால நிலைமை!

ஏய்! அருச்சுனா என் சுயம்பரத்தில், அன்று தமிழரசு கட்சி தன் உணர்ச்சிகர பேச்சால் தமிழ் மக்கள் வாக்குகளை கவர்ந்தது போலவே, உன் வில்வீரம் காட்டி என்னை உனக்கு  மாலையிட வைத்தாய்.   தமிழ் காங்கிரஸ் மலையக மக்கள் விடயத்தில் தவறான் முடிவு எடுத்ததால், தமிழ் மக்கள் அதனை நிராகரித்தது போலவே, கர்ணன் வளர்ந்த குலத்தை சாட்டியே சபையினர் அவனை போட்டியில் இருந்து விலகவைத்தனர்.

 கர்ணனும் உன்னை ஒத்த வீரன்தான். அவனை நான் மணம் முடித்திருந்தால் கர்ணனுடன் ஒருவனுக்கு ஒருத்தி என ஒழுக்கமாக நான் வாழ்ந்திருப்பேன். உன் தாய் என்னை பண்டம் என நினைத்து பங்கு போட சொல்ல, அதை மீறமுடியாமல் என்னை உனது சகோதரருக்கும் தாரமாக்கினாய். இதுவும் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி சூரியன் சின்னத்தை கையகப்படுத்த, பிரபாகரன் சொல்படி வீடு சின்னத்தில் தமிழரசு கட்சியின் தலைமையில் இயக்கங்கள் போட்டியிட்டது போன்றதே.

அன்று அதனால் தான் துரியோதனன் சபையில், கர்ணன் என்னை பஞ்சவர் பாவை என எள்ளி நகையாடினான். இன்று பிரபாகரன் மறைந்ததும் நடக்கும் உள்குத்தை பார்த்து, தேவானந்தா இது கூட்டமைப்பு அல்ல கூத்தமைப்பு என ஏளனம் செய்கிறான்.

துச்சாதனன் என் தலைமுடி பிடித்து இழுத்து சபை நடுவில் நிறுத்த, என் துகில் உரிய சொன்னான் துரியோதனன். நெடுமரம் போல் ஐவரும் நிற்க என் மானம் காக்க ஆடை தந்தான் மாய கண்ணன்.

ஆனால் இறுதியுத்ததின் போது பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளும் விழி பிதுங்கியபோது, மக்கள் உயிரை காக்க கண்ணனை தேடினார்கள். அவன் வரவில்லை. ராஜீவ் காந்திபோல் பொட்டம்மானின் மனிதவெடிக்கு அவனும் பலியாகி இருக்கலாம்.

முறை வைத்து என்னுடன் இல்லறம் நடத்திய உங்களால், என் இடர் தீர்க்க இயலாது போனது போலவே, தேர்தல் காலத்தில் மட்டும் ஆசனங்களை பங்கு போடும் கூட்டமைப்பு வாக்குகள் பெற்றபின், அறிக்கைகள் பல விட்டும் தமிழ் மக்களின் நிலை மாறதாது போல.

என் தலைவிரி கோலம் கண்ட பின்பே நீங்கள் குருசேத்திர களம் கண்டீர்கள். இதுவும் சனல் 4 தொலைகாட்சி ஆதாரத்துடன் தமிழர் அவலத்தை காட்ட, கண் கலங்கிய உலகத்திடம், நியாயம் கேட்க ஐ நா சென்ற தமிழ் தலைமைகள் செயல் போன்றதே. .

ஐவருடன் வாழ வேண்டிய நிலை ஏற்ப்பட்ட போதும், சுயம்பரத்தில் உனக்குத்தான் நான் மாலையிட்டேன். தமிழரசு கட்சியை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டதுபோல, உன்னைத்தான் என் துணைவனாய் ஏற்றேன்.

தருமன் உன் தாயிடம் கனி ஒன்று கொண்டு வந்ததாக கூற, அனைவரும் பகிர்ந்து உண்ணுங்கள் என்றாள் குந்தி. குழப்பம் அவர் சொல்லால் வந்தது. இதுவும் தமிழரசு கட்சி சமஸ்டி, தனிநாடு, மாவட்டசபை என குழப்ப, ஈழ இயக்கங்கள் தோன்றியது போன்றதே.

இன்று தனித்து போட்டியிட்டால் பெரும்பான்மை ஆசனங்கள் தமக்கே என, திடமான நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் அரசு கட்சி போன்றே, உன் வீரத்தில் நம்பிக்கை வைத்து  குருசேத்திர யுத்தத்தில் வெற்றி நிச்சயம் என நம்பிகையோடு இருந்தேன்.

அன்று அருச்சுனன் இல்லாது போர்க்களம் போக ஏனைய பாண்டவர் முயலவில்லை. அதுபோல் தேர்தலில் தமிழ் அரசு கட்சியை விலத்தி செல்ல, ஏனைய கட்சிகளும் தயாராய் இல்லை. அதே வேளை கூட்டமைப்பை பதிவு செய்யும் சாத்தியமும் இல்லை.

இன்று கூட்டமைப்பில் புது குழப்பம் தமிழ் மக்கள் பேரவையால். நீதிமானான தருமனே (விக்னேஸ்வரன்) தடுமாறும் நிலை. அருச்சுனனுக்கு கண்ணன் சொன்ன கீதையை கம்பவாருதி தருமனுக்கு சொல்ல முடியாது, உகர(ம்)த்தில் கெடுகுடி சொல் கேளாது என கட்டுரை எழுதும் நிலை.

அருச்சுனனுக்கு (சம்மந்தர்) எதிராக பீமனும் (சுரேஸ்) கதாயுதம் தூக்க,  நகுல (சித்தார்த்தன்) சகாதேவன் (செல்வம்) சஞ்சலத்தில். வானில் பேரிடி எழும்போது அருச்சுனா அபயம், அருச்சுனா அபயம் என்பது போல் உன்னையே இன்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.

தம்மை பங்குபோட நினைக்கும், தமிழ் மக்கள் பேரவையை ஏற்காத வாக்காளரை போல, நல்லாட்சியில் துரியோதனர்கள், தமிழ் மக்களின் பங்கை கொடுக்க முயற்சிக்கும் வேளையில், உன்னைத் தான் நான் அரவணைப்பேன்,

[உள்ளூர் ஆட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடும் என்ற செய்திக்கான பதிவு] 

(ராம்)