“பாவா” அக்காவும் நானும்…

பிள்ளையாரடி எனது அப்பாவின் ஊர். எனக்கும் அந்த ஊருக்குமான மிகவும் நெருக்கமான தொடர்பு சுமார் ஒருவருட காலந்தான். அம்மாவுக்கு கொக்குவில், பன்னிச்சையடி பள்ளிக்கூடத்தில் மாற்றலானதால், அருகே அப்பாவின் ஊரில் ஒருவருடம் சென்று வாழ்ந்தோம்.  நகரத்தில் இருந்து 3 மைல் தூரத்தில் இருந்தாலும் அப்போது பிள்ளையாரடி பெரிதும் கிராமத்தின் குணாதிசயங்களையே கொண்டிருந்தது. நாங்கள் அங்கு 70களில் வாழ்ந்தபோது அங்கு மின்சாரமும் கிடையாது. மண்ணெண்ணை விளக்குதான். ஆனாலும் அங்கு வாழ்ந்த நாட்கள் மிகவும் அருமையான நாட்கள்தான். அங்கு எல்லாம் அப்பாவின் உறவினர் என்பதால், எனக்கு பிடித்தவர்கள் மிகவும் அதிகம். பிடிக்காதவர் என்று எவரையும் ஞாபகமில்லை. அப்படி பிடித்த குடும்பங்களில் ஒன்று எனது அப்பாவின் மைத்துனரான (அத்தை மகன்) ஐயன் அங்கிளின் ( தில்லையர் பூபாலபிள்ளை – இவர் ஒரு ஆசிரியர்) குடும்பம்.

அந்தக் குடும்பத்திலும் எனக்கு மிகவும் பிடித்தவர்தான் ‘பாவா அக்கா’. baby…baba என்று மருவி வந்ததாக இருக்க வேண்டும் இந்த ‘பாவா’ என்ற பெயர். எங்கள் குடும்பத்தில் பலருக்கு செல்லப் பெயராக இருக்கிறது. வேறு பலருக்கும் அது பொது. சரி, பிள்ளையாரடி பாவா அக்காவின் உண்மையான பெயர் மகாலக்ஷ்மி. ஃபிரேம் போட்ட சாமிபடத்தில் இருப்பது போல அவ்வளவு பளிச் என்றெல்லாம் மகாலக்ஷ்மி போல அவர் அழகு என்ற சொல்ல முடியாவிட்டாலும், அவர் சிரிப்பது இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது. கொஞ்சம் என்னுடைய மனைவி பரமேஸ்வரி சிரிப்பது போல. என்னுடைய நிறந்தான் அவருக்கு. சொந்தம் என்றதால் இருக்கலாம். ஆனாலும் அவருடைய நடவடிக்கைகள் அவரை ஒரு அழகியாகவே மனதில் நிற்க வைத்திருக்கின்றன. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். என்னைவிட ஐந்து அல்லது ஆறு வயது அதிகமாக இருக்கலாம். உறவுமுறையில் மச்சினிதான் என்றாலும் அக்கா என்றுதான் கூப்பிடுவேன். அவர் ‘கண்ணன்’ என்றுதான் என்னை கூப்பிடுவார். அவர்கள் வளவு மிகவும் பெரியது. வளவு முழுக்க மரங்கள். நல்ல ஒரு கிணறும், அருகில் ஒரு டாங்கும் (பக்கி) இருந்தது. கிணற்றில் இருந்து தண்ணீரை விட்டு டாங்கை நிரப்பினால். நன்றாக குளிக்கலாம். தமிழக கிராமங்களில் பம்புசெட்டில் குளிப்பது போல. டவுனில் பைப் தண்ணியில் குளித்து பழகிய எனக்கு அந்த தாங்கிக் குளியல் மிகவும் விருப்பமான ஒன்று. ஒரு நாள் அப்படித்தான், தாங்கியை நிரப்பி, அதனுள் இறங்கி, ராகத்தாக குளித்தேன். அரைக்காற்சட்டை, அதையும் ஏன் நனைக்க வேண்டும் என்று நினைத்ததால், தண்ணிக்குள்ளே ஒன்றும் தெரியாது என்பதால், காற்சட்டையை ஜட்டியோடு கழற்றி, மேலே வெயிலுக்காக தலையில் போட்டுக்கொண்டு ஜாலியாக நீராடினேன். அப்போது அங்கே பாவா அக்காவின் தப்பி ராமச்சந்திரன் வந்தான். எனது தலையில் காற்சட்டை இருப்பதை பார்த்ததும், அவனுக்கு துச்சாதனனின் நினைப்பு வந்து விட்டது. நேராக சிரித்துக்கொண்டே அருகில் வந்தான், அவன் ஆம்பிள்ளை என்றதாலா நான் ஒன்றும் பெரிதாக வெட்கப்படவில்லை. ஆனால், அருகில் வந்தவன், நேரடியாக எனது தலையில் இருந்த காற்சட்டையை எட்டிப் பறித்தான், அப்போது, நான் பெரிய கெட்டிக்காரன் மாதிரி, ‘’தண்ணிக்குள்ளதானே இருக்கன், ஒண்டும் தெரியதே’’,,, என்று நக்கலடித்தேன். ‘’நம்ம வாய்தானே நமக்கு எப்போதும் எதிரி’’. அடுத்து அவன் செய்ததுதான் ‘’பைனல் டாஸ்க்’’. தாங்கியின் தண்ணீரை திறந்துவிடும் ஓட்டையில் இருக்கும் துணி அடைப்பை எடுத்து விட்டான். தண்ணியும் ஓடத்தொடங்கிவிட்டது. தண்ணீர் வெளியே போகப் போக எனக்கும் மானம் படிப்படியாக தண்ணியோடு போய்க்கொண்டிருந்தது. ராமச்சந்திரன் எக்காளம் கொட்டி சிரித்துக்கொண்டிருந்தான். எனக்கு கத்தி, கிட்டத்தட்ட கண்ணாலும் கண்ணீர் வந்துவிட்டது. அப்போதுதான் முதன் முதலாக அபயக் குரலாக ‘’பாவா அக்கா’’…. என்று உரத்துக் கத்தினேன். என் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அவங்க, நிலைமையை உணர்ந்து, அவனிடம் எனது காற்சட்டையை பறித்து, எனக்கு தந்துவிட்டு, அவனுக்கும் அடியும் போட்டார். எனக்கு போன உயிர் (அதுதான் மானமா?) திரும்பி வந்தது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும். திருவெம்பாவைக்கு அதிகாலையில் பாடிக்கொண்டு கோயிலுக்கு செல்வது, பனங்காய் பொறுக்குவது உட்பட, பிறகும் அந்த குடும்பத்தோடு மிகவும் சந்தோஷமாக அங்கிருந்த நாட்கள் எல்லாம் இருந்தோம். பிறகு டவுனுக்கு வந்துவிட்டோம். எப்போதாவது மகாபாரதக் கதையின் சில வடிவங்களில், கிருஷ்ணன் கோபிகையருக்கு செய்த சேட்டைகளுக்கு பழிவாங்க, அவன் குளிக்கும் போது, அவர்கள் அவன் உடையைத் திருடி மறைக்க, அவன் அழ, அவ்வழியாக வந்த திரோபதி, அவனுக்கு ஆடையை எடுத்து கொடுத்ததாக சொல்லக் கேட்ட போதெல்லேம் எனக்கு பாவா அக்காவின் நினைப்புத்தான் வரும். ஆனால், அது நடந்து 15 வருடங்களுக்கு பிறகு, 1990 ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் திகதி இரவு வந்த சிலர், அந்த வீட்டில் இருந்த அனைவரையும், ஐயன் அங்கிள், மலர் அண்டி, பாவா அக்கா, அவரின் இரு தங்கைகள் எல்லாரையும் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அருகே பன்னிச்சையடி, கொக்குவில், சத்துருக்கொண்டான் ஆகிய இடங்களில் இருந்து கூட்டமாக ஆட்களை சாய்த்துச் சென்றதை எமது ஏனைய உறவினர்கள் சிலர் மறைந்திருந்து பார்த்திருக்கிறார்கள். அன்று அந்த முகாமில் இருந்து ஆட்கள் அலறும் சத்தமும், நெருப்பு எரிவதும் தெரிந்ததாக ஊரவர் கூறினார்கள். பாவா அக்கா, அவரது குடும்பத்தினர் உட்பட 184 பேர் அன்றோடு இல்லை. கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவர் மாத்திரம் கத்திக் குத்துக் காயத்துடன் தப்பி வந்திருக்கிறார். இது குறித்து ஒரு ஆணைக்குழுவும் விசாரித்தது. ஆனால், எவரும் தண்டிக்கப்படவில்லை. அன்று பாவா அக்காவும் கதறித்தானே அழுதிருப்பார். நான் தண்ணித் தாங்கியில் இருந்து கத்தியதுபோல அபயக் குரல் எழுப்பியிருப்பார். அப்போது நான் இந்தியாவில் இருந்தேன். ஏன், மட்டக்களப்பில் இருந்திருந்தாலும் கேட்டிருக்கவா போகிறது. இல்லை கேட்டிருந்தாலும், நான் போய் உதவியிருக்கவா முடியும்? அப்படியெல்லாம் நடக்க நானென்னெ கண்ண பரமாத்மாவா அல்லது பாவா அக்கா திரோபதியா? நாங்கள் இலங்கையில் பிறந்த ஈனப்பிறவிகள்… பாவா அக்காவின் தம்பி ராமச்சந்திரன் இராணுவத்துக்கு உதவியதாகக் கூறி, தமிழ் இயக்கம் ஒன்று அவனை முன்னதாக சுட்டுக்கொன்றுவிட்டது. பின்னர் ஏனையவர்களை இராணுவம் கொன்றதாக ஊரவர் கூறும் சாட்சிகள் உறுதி செய்கின்றன. அவர்களது கடைசித் தம்பி நீண்ட நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்து அவனும் ஒரு குண்டு வெடிப்பில் இறந்து போனானாம். இன்று 25 வருடங்கள் கழித்தும் பாவா அக்கா குடும்பத்தினரின் நினைவுகளால் மனது வலிக்கிறது. எனக்கு மாத்திரமா, இன்னும் எத்தனையோ பேருக்கும் இனம், மதம் கடந்தும் அங்கு சமமாக கிடைத்திருப்பது இந்த வலி ஒன்றுதானோ? பிற்குறிப்பு: ======= செய்தியாளர் தராக்கி சிவராமுக்கும் எனக்கும் கொழும்பில் இருக்கும் போது நல்ல பழக்கம். இலங்கை அரச ஊடகங்களால் படிக்கப்பட்ட, ஒரு அனாமதேய அமைப்பின் ‘’தேசத்துரோகிகள்’’ பட்டியலில் நாங்கள் இருவரும் அருகருகே இடம்பெற்றிருந்தோம். பல விசயங்களை அவர் பொதுவாக வெளிப்படையாக பேசாவிட்டாலும், மப்பும் மந்தாரமுமாக இருக்கும் சில நேரங்களில் மாத்திரம், சில விடயங்களை மனம் திறந்து, அவரை அறியாமலேயே ஒப்புவிப்பார். அப்படியான தருணங்களில் தனக்கு தெரிந்த, தெரியாத பெண்களைப் பற்றியும் அவர் பேசுவார். ஆனால், அப்போதெல்லாம் எந்தப் பெண்ணைப் பற்றியும் அவர் சுமூகமாக சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், 1998ஆம் ஆண்டில், ஒருநாள் அவருக்கு ‘’வானம் கறுத்திருந்த’’ தருணத்தில் சத்துருக்கொண்டான் படுகொலைகள் பற்றி பேசினோம். அப்போது பாவா அக்கா பற்றியும் பேசினோம். அவருக்கும் பாவா அக்காவை தெரிந்திருந்தது. ’’அது ஒரு நல்ல பிள்ளை அப்பா ’’ என்றார் செய்தியாளர் தராக்கி… அரசியலுக்கு அப்பால் அவர் சொன்ன கருத்து அது. நான் ஆடிப்போனேன். அவர் வாயில் இருந்து முதல் தடவையாக இப்படி ஒரு வார்த்தை…. ‘’பாவா அக்கா’’ அந்த அளவுக்கு நல்லவர்.

(எழுதியவர் பெயர் தெரிவில்லை)