பா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால்…

போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக இளைஞர்களைப் பயன்படுத்தினர். கூட்டணித் தலைவர்கள் துரையப்பாவுக்கு இயற்கை மரணம் இல்லை என்றனர். அன்று இளைஞனாக இருந்த வே பிரபாகரன் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சவலாக நின்ற அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்தார்.

இன்று எஸ் சிறிதரன் ‘வே பிரபாகரன் வளர்த்தெடுத்தவர்கள் சயனைடை கடித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதவர்கள் அரசின் கூலிகள்’ என்றார். அதனை சிறிதரன் சகோதரர்களின் ஜெவிபி நியூஸ், தமிழ் வின், கனடா மிரர் வெளியிடவில்லை. ஆனால் வன்முறையாளர்கள் தனது அரசியல் நலனுக்காக அராஜகத்தில் ஈடுபட்ட போது அவர்கள் ‘தேசிய உணர்வாளர்’களாக சிறிதரன் சகோதரர்களின் ஊடகங்கள் காட்டுகின்றன.

சிறிதரன் சகோதரர்களின் ஊடகங்கள் சிறிதரனின் தனிப்பட்ட அரசியல் எதிரிகள் மீதும் திட்டமிட்ட தனிநபர் தாக்குதலை நடாத்துகின்றன. பா உ சுமந்திரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராகவும் சிறிதரன் சகோதரர்களின் ஊடகங்கள் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றன. இந்த வன்முறை மற்றும் அராஜக அரசியலில் பா உ எஸ் சிறிதரன் லாபமடைவதால் அவர் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம். கல்லூரி அதிபராக இருந்த பா உ சிறிதரன் மாணவருக்கும் சமூகத்துக்கும் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டுமே அல்லாமல் மூன்றாம்தரமான அரசியல் நடவடிக்கைகள் மூலம் வாக்கு வங்கியை தக்க வைக்க முற்படுவது நீண்ட காலத்தில் எதிர் விளைவை ஏற்படுத்தும்.

அதுவே கூட்டணி அரசியலுக்கும் வே பிரபாகரனுக்கும் இருந்த உறவிலும் ஏற்பட்டது. வே பிரபாகரன் போன்ற இளைஞர்களைப் பயன்படுத்த முற்பட்ட கூட்டணித் தலைமைகள் பின்னர் வே பிரபாகரனாலேயே கொல்லப்பட்டனர். பா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால் மீண்டும் ஒரு நச்சுச் சுழலுக்குள் தன்னையும் தமிழ் சமூகத்தையும் தள்ளும் நிலையேற்படும்.

(Arun Ambalavanar)