பா.ஜ.கவின் பிளவுபடுத்தி ஆளும் காலனிய சூழ்ச்சி

பா.ஜ.க இவ்வளவு விரைவில் ஒ.பி.எஸ்ஸை கைவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவருக்கும் மத்திய அரசுக்குமான உறவில் ஏதோ ஒரு பிசகு நேர்ந்திருக்கிறது. ஒ.பி.எஸ்ஸின் புகழ் ஒரு பக்கம் உயரும் போது பா.ஜ.கவினர் தீபாவை முறுக்கேற்றி முன்னுக்கு கொண்டு வர துவங்கினர். அப்போதே பா.ஜ.கவின் பிளவு படுத்தி ஆளும் காலனிய உத்தியை கவனித்தேன். ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் அவரை தெருவில் விடுவார்கள் என நான் நினைக்கவில்லை.

மத்திய அரசு நினைத்தால் சசிகலா குழுவினரின் அடித்தளத்தை பெயர்க்க ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் பா.ஜ.கவின் தேவை அத்தரப்பை அழிப்பது அல்ல. கட்டுப்படுத்துவது. அதாவது பூனையையும் சீண்டி விட வேண்டும்; எலியையும் பாதுகாக்க வேண்டும். சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பியதுடன் பா.ஜ.கவின் முதல் தேவை ஓரளவு நிறைவேறி விட்டது. பூனைக்கு அது மணி கட்டி விட்டது.

தனக்கு எதிராக தீர்ப்பு வருமென சசிகலாவுக்கு நிச்சயம் முன்பே தெரிந்திருக்கும். அதனால் தான் அவர் அவசரமாய் ஒ.பி.எஸ்ஸை பதவியில் இருந்து இறக்கினார். எம்.எல்.ஏக்களை தன் ஆணைக்கு பணிய வைத்தார். தன்னால் நிச்சயம் முதல்வர் ஆக முடியாது என அவர் அறிவார். ஜெயிலில் இருக்கப் போகிற அவர் ஏன் அவசரமாய் ஆட்சியை கைப்பற்ற முயல வேண்டும்? இங்கு தான் சூட்சுமம் உள்ளது. அதிகாரத்தில் இருப்பது சசிகலாவை பொறுத்த மட்டில் அவரது பெரும் சொத்துக்களை காப்பாற்றவும், வழக்கில் இருந்து ஏதாவது ஒரு வழியில் தப்பிக்கவும் அவசியம். சசிகலா கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுடன் தங்கி இருந்து வியூகங்கள் வகுக்கும் போது தம்பிதுரை போன்றோர் தில்லியில் மத்திய அரசின் அதிகார மையத்தை நெருங்க முயன்று கொண்டிருந்தனர். சீராய்வு மனு தாக்கல் செய்தனர். ஜெயிலுக்கு போகும் முன்பு அவர் எம்.எல்.ஏக்களிடம் “நான் மூன்று மாதங்களில் திரும்புவேன்” என சொல்லி விட்டு சென்றார். இதன் பொருள் என்ன? அவருக்கு இந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? மத்திய அரசுடனான பேரம் படிந்து விட்டது என்பதில் இருந்து தான் இந்த தன்னம்பிக்கை வருகிறது.

அதனால் தான் எடப்பாடியார் முதல்வரானதும் மோடி அவரை அழைத்து வாழ்த்து தெரிவிக்கிறார். வெங்கய்யா நாயுடு தன் ஆசிகளை அளித்து “மத்திய அரசுடன் இணக்கமாக இருங்கள்” என ஆலோசனை தெரிவிக்கிறார். இதெல்லாம் ஒன்றை காட்டுகிறது. இங்கு அரங்கேறிய எதுவும் பா.ஜ.கவின் கையை மீறி நடந்ததல்ல. எது நடக்க வேண்டுமே அதுவே நடந்தது!
மோடியும், வெங்கய்யா நாயுடுவும் சசிகலா குழுவினருடன் கைகுலுக்குகிறார்கள் என்றால் ஹெச்.ராஜா ஒ.பி.எஸ்ஸுக்கு அரைமணி நேரம் ஆறுதல் கூறுகிறார். இன்னொரு பக்கம் குருமூர்த்தி போன்றோர் தீபாவுக்கு ஊக்கமளிக்கிறார்கள். பா.ஜ.கவின் திட்டமே இவ்வாறு அதிமுகவை பல்வேறு குழுக்களாய் பிளந்து அதிகார சமநிலையின்மையை உருவாக்குவது தான். ஜெயிலில் உள்ள சசிகலா மோடியின் பெருவிரலின் கீழ் இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய இடைஞ்சல்களை மோடி அளித்தும் அவர் ஒரு சொல் கூட மோடியை பழிக்கவில்லை. பதிலுக்கு திமுக தமக்கு எதிராய் சதி செய்வதாய் பழித்தார். இது என்ன அபத்தம்? உண்மையான வில்லன்களை விட்டு விட்டு ஏன் வேடிக்கை பார்ப்பவரை நோக்கி அவர் சாட வேண்டும்? ஏனென்றால் அவருக்கு மோடியின் தயவு அவசியம். (இன்னொரு பக்கம் ஒ.பி.எஸ்ஸை ஆதரிக்க வேண்டி உள்ள திமுகவும் பா.ஜ.கவை சாடுவதை தவிர்க்கிறது. இப்படி தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளுமே அம்மணமாய் ஊர்வலம் போகும் ராஜாவை பார்த்து மௌனிக்கிறார்கள்.)

இவ்வளவு எம்.எல்.ஏக்களை சசிகலா கூவத்தூரில் குவித்தது ஆட்சியை கைப்பற்றும் வெறியில் மட்டும் அல்ல. அவரது முக்கிய நோக்கம் தன்னை காப்பாற்றுவது. அதற்கு பேரம் பேச அவருக்கு அதிகாரம் வேண்டும். அதற்கு இந்த எம்.எல்.ஏக்கள் வேண்டும். ஒருவேளை அவர் ஆரம்பத்திலேயே கட்சி அதிகாரத்தை கைப்பற்றாமல் ஒதுங்கி இருந்தால் இந்த வழக்கில் அவரை முழுக்க நசுக்கி இருப்பார்கள். இப்போது நிலைமை வேறு. மத்திய அரசு கொடுத்த கடுமையான அழுத்தத்திற்கும் மசியாமல் அவர் ஒ.பி.எஸ்ஸை கவிழ்த்து விட்டார். அக்னி பரீட்சையில் தேறி விட்டார். அதனால் தான் ஆளுநர் இப்போது அவர் தேர்வு செய்த நபரை முதல்வராக பதவி பிரமாணம் செய்வித்திருக்கிறார். இவ்வளவு காலம் பொறுத்த ஆளுநர் இன்னும் சில வாரங்கள் பொறுத்திருக்கலாமே? எம்.எல்.ஏக்களின் ஒற்றுமையை உடைத்திருக்கலாமே? ஆனால் ஆளுநரின் திடீர் முடிவு பா.ஜ.கவுக்கும் சசிகலாவுக்குமான ஏதோ ஒரு பேரம் முடிவுக்கு வந்து விட்டதை காட்டுகிறது. ஒ.பி.எஸ் இனி தேவையில்லை எனும் பா.ஜ.கவின் முடிவையும் காட்டுகிறது.

இந்த ஆட்டத்தில் சசிகலா அடைந்த பலன் என்ன என்பது சில மாதங்களில் தெரிந்து விடும். பா.ஜ.க அடைந்த பலன்? தொடர்ந்து தலைமையை பலவீனப்படுத்துவதன் மூலம் அதிமுகவின் உண்மையான பாஸ் தான் மட்டுமே என மோடி உணர்த்தி இருக்கிறார். இனி ஒவ்வொரு சிறு அசைவையும் அவர்கள் தில்லியில் கேட்டுத் தான் நடத்த முடியும். இந்த பிடியை வலுப்படுத்த அடுத்து அவர்கள் எடப்பாடியாருக்கும் பல்வேறு நெருக்கடிகளை, போட்டி முனைகளை ஏற்படுத்துவார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் பா.ஜ.க ஒரு குறிப்பிட்ட அதிகார வட்டத்தை ஆதரித்து இன்னொன்றை கைவிடும். அதன் மூலம் அதிமுகவை தொடர்ந்து ஒரு சமநிலையற்ற தடுமாற்றத்தில் வைத்திருக்கும். உண்மையிலேயே அதிமுகவை நினைத்தால் பரிதாபமாய் இருக்கிறது. வரும் ஆண்டுகளில் நமக்கு இன்னும் பல பிரேக்கிங் நியூஸ்கள் வர இருக்கின்றன.

எல்லாம் அவன் செயல்!

(Abilash Chandran)