பிரபாகரனின் நீட்சியாக கருதப்பட வேண்டியவர் கேபி யே

(யோகா வளவன் தியா)

நான் அறிந்தவகையில் கே பி , பிரபாகரனின் நல்ல நண்பர். அவரது நல்லது கெட்டதுகள் அனைத்திலும் பங்கு பெற்றவர். பிரபாகரனின் திருமணத்தின் போது மாப்பிள்ளை தோழனாக இருந்தது கேபி யே. இயக்கம் அரசியல் எல்லாவற்றுக்கும் அப்பால் பிரபாகரனின் குடும்ப நண்பராகவும் இருந்தார். விடுதலைபுலிகளின் வளர்ச்சியில் பிரபாகரனுக்கு அடுத்தபடி கேபி க்கு முக்கிய பங்கு உண்டு. அதாவது ஆயுத கொள்வனவு. கள்ள சந்தையில் ஆயுதம் வாங்குவது என்பது சாதாரண விடயமல்ல. இங்கு பாங்கில் பணத்தை போட அங்கு ஆயுதம் டிலிவறி செய்யும் விடயமல்ல. நூறு பெயில் டீல்களினுடாகவே நல்ல ஒரு தொடர்பு கிடைக்கும். அவற்றை கேபி செவ்வனே செய்து வந்தார்.

ஆனால் கிளிநொச்சி தலமையகம் உருவாக்கப்பட்ட மையை அடுத்து, அங்கு ஏற்பட்ட அதிகார போட்டி , பொறாமை, மற்றும் புலம்பெயர் புலி கட்டமைப்புக்களின் தவறான வழிகாட்டல் கேபி ஐ ஓரங்கட்ட வைத்தது. புலம் பெயர் புலிக்கட்டமைப்பின் சிறுபிள்ளை தனமான ஓர் செயற்பாட்டுக்கு ஒரு சிறு உதாரணம் போதும். கனடாவில் இருந்து தமிழ் இளைஞர் ஒருவரை அமெரிக்காவுக்கு விமான எதிர்பு பீரங்கி வாங்க அனுப்பி அவர் அமெரிக்க உளவுத்துறையின் ஏஜென்ட் ஒருவரிடமே பீரங்கி வாங்க பேரம் பேசி கைதாகியது அனைவரும் அறிந்ததே. கேபி ஐ ஓரங்கட்ட தங்களால் எல்லாம் முடியும் என்ற மெத்த படித்த அறிவாளித்தனத்தால் வந்த விளைவு.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது , பிரபாகரன் தனது தவறை உணர்ந்து கேபி ஐ சர்வதேச தொடர்பாடல்களுக்கு உரியவராக கேபி ஐ நியமித்தார். ஆனால் பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து கேபி காட்டி கொடுக்கப்பட்டு இலங்கை அரசால் கைது செய்யப்பட்டார். எவர் காட்டி கொடுத்திருப்பார்கள் என்று நான் கூற வேண்டிய அவசியம் இல்லை.
என்னை பொறுத்தவரை விடுதலைபுலிகளின் / பிரபாகரனின் நீட்சியாக கருதப்பட வேண்டியவர் கேபி யே . விடுதலைபுலிகள் அமைப்பின் நோக்கம், பிரபாகரனின் இலட்சியம் அனைத்தையும் அறிந்து அவருடன் இறுதிவரை பயணித்தவர். கைது செய்ய பட்டபின்னர் அவருக்கு இருந்த தெரிவு புனரமைப்பு பணிகளில் ஈடுபடுவதே ஏனெனில் மக்கள் இல்லாத மண் எதற்கு. உண்மையான பிரபாகரன் / விடுதலை புலி விசுவாசிகள் கேபி யின் புனரமைப்பு பணிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்கதே சரியானதாகும். அவரது தற்போதைய வீட்டு காவல் நிலை நிரந்தரமானதல்ல , மாற்றங்கள் வரலாம்.

இன்று பிரபாகரனினதும் / விடுதலை புலிகளினதும் பெயரை பாவித்து கொண்டு தமது சுயநலத்துக்காக அரசியல் செய்கின்றனர். இதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட எவரும் விதிவிலக்கல்ல. பிரபாகரனின் சகாப்தம் முடிந்து விட்டது. அதில் நல்லதும் உண்டு கெட்ட தும் உண்டு. நல்லதுக்கு மட்டும் உரிமை கோருபவர்கள் கெட்டதுக்குமான பொறுப்பையும் ஏற்பார்களா ? நாசூக்காக நழுவி விடுகிறார்கள். வேண்டாம் விஷப்பரீட்சை . சமகாலத்தில் உங்களால் என்ன செய்ய முடியும் என்று கூறி மக்களிடம் செல்லுங்கள். தியாகிகளாகி போன வணக்கத்துக்குரியவர்களின் பெயரில் குதிரை சவாரி செய்யாதீர்கள். முடிந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள்.