பிரித்தானியா, ஐரோப்பாவை இலக்கு வைத்துள்ள ISஇன் உறங்கும் செயற்பாட்டாளர்கள்

சிரியாவில், இஸ்லாம் அரசினால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்படுபவர்களின் கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் பணியை, மேற்படி ஜிஹாட் ஜோன் என்றழைக்கப்படும் மொஹமட் எம்வாசி என்பவரே மேற்கொண்டு வருகின்றாரென, ஐக்கிய இராச்சியப் புலனாய்வுத் தகவல்கள் உறுதி செய்திருந்தன.

இவ்வாறு தாக்குதல்களை நடத்துபவர்கள், உறங்கும் செயற்பாட்டாளர்கள் என்றே குறிப்பிடப்படுவதோடு, அவர்கள் ஒன்றிணைந்த வலையமைப்பு, “க்ரொகொடைல் செல்” (முதலைச் சிறைக்கூடம்) என்றே அழைக்கப்படுகிறது. விசேடமாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இஸ்லாம் அரசப் பயங்கரவாதிகளே, இந்த விடயம் தொடர்பான தகவல்களைக் கசியவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், கொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தாக்குதலை நடத்த முயற்சித்து, தெஹிவளையில் குண்டை வெடிக்கவைத்த, 36 வயதுடைய அப்துல் லத்தீப் ஜமால் மொஹமட் எனும் குண்டுதாரி, பிரித்தானியாவில் கல்வி பயின்றவர் என்று கூறப்படுகிறது.

இவர், சிரியாவில் வைத்து, பயங்கரவாதத்துக்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளார் என, பிரித்தானியப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனால், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், இவரது பங்கு அதிகமாக இருந்திருக்குமெனவும் அவருடைய மனதுக்குள் இஸ்லாமியப் தீவிரவாதச் சிந்தனைகளை, பிரித்தானியாவில் வசிக்கும் தீவிரவாதிகளே புகுத்தியிருப்பர் என்றும், இருப்பினும், பிரித்தானியாவில் இருந்த காலப்பகுதியில், அவர் எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்றும், புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவில் உயர்கல்வியை அடுத்து, அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள அப்துல் லத்தீப் ஜமால், அங்குள்ள தேசிய பிரிவினைவாதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளார் எனவும் பின்னர் அங்கிருந்து, 2014ஆம் ஆண்டே சிரியாவுக்குச் சென்றுள்ளார் என்றும், அங்கு அவர், “தி லெஜிஒன்” எனும் இஸ்லாமிய அரசுக்குள் உள்ள “பெரிய படை” எனும் பிரிவின் உறுப்பினராக இணைந்துகொண்டுள்ளார். மொஹமட் எம்வாசி எனும் ஜிஹாட் ஜோன் என்பவரும், இதே பிரிவைச் சேர்ந்தவராவார்.

இஸ்லாம் அரசு எனும் ஐ.எஸ் அமைப்பானது, தனது இராச்சியத்தை சிரியாவில் ஸ்தாபிக்கும் போது, அந்நாட்டுக்குள் போரிட்டுக்கொண்டிருந்த பிரித்தானிய பயங்கரவாதிகள் சிலரும், ஜிஹாட் ஜோனுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் ஜுனைட் ஹுஸைன் எனும் மற்றுமொரு நபரும், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், பிரித்தானிய புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாக, சிரியாவின் யுத்த களத்தில் சிலகாலம் இருந்துள்ள அப்துல் லத்தீப் ஜமால் மொஹமட், இலங்கைக்கு எப்போது வந்தார் என்பது தொடர்பிலும் அவர், இஸ்லாம் அரசின் உறங்கும் செயற்பாட்டாளர்கள் கூடத்தில் எவ்வளவு காலம் இருந்தார் என்பது தொடர்பிலும், இதுவரையில் தெளிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என, அந்தப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 2006ஆம் ஆண்டிலேயே அவர், பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளார் என்றும் 2007இல் மீண்டும் இலங்கைக்கு வந்து, 2008இல் மீண்டும் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவர், இலங்கையில் பிரபலம் பெற்ற தேயிலை விநியோக நிறுவனத்தை நடத்திவரும் குடும்பமொன்றைச் சேர்ந்தவர் என்றும் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றபோதே, அவர் இவ்வாறான அமைப்புடன் கூடிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கலாமென, அவருடைய சகோதரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அப்துல் லத்தீப் ஜமால் மொஹமட் போன்ற உறங்கும் செயற்பாட்டாளர்கள் பலர், இன்னமும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவுக்குள் வசித்து வருவதாகவும் இவர்கள், எதிர்வரும் காலங்களில், மாற்றுவழிகளில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்றும், பிரித்தானிய புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.