பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு

(ஜனகன் முத்துக்குமார்)

ஜேர்மனியின் சான்செலர் இன்னமுமே ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மூத்த அதிகாரியின் பங்கை வகிக்க முயலுகின்றமை, தற்போது ​​அங்கெலா மேர்க்கல் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுதல்) மீது பிரித்தானிய அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் மூலம் தெளிவாகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் மார்ச் 29 அன்று வெளியேறும் குறித்த நான்கு மாத காலத்துக்குள் மற்றும் மேர்க்கல் தனது சான்செலர் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு நாள் குறித்த பின்னருமான இக்காலப்பகுதியில் ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரேசா மேயுடனான பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வை எட்டும் நோக்கிலேயே சான்செலர் மேர்க்கல் முயன்று வருகின்றமை – தன்னை – தனது சான்செலர் பதவியின் காலப்பகுதிக்கு பின்னரான காலத்திலும் ஐரோப்பிய அரசியலில் நிலைநிறுத்துவதற்கான ஒரு செயற்பாடாகவே மேர்க்கல் செயற்படுவதாக பார்க்கப்படுகின்றது.பிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்சிற் மீதான வாக்கெடுப்பை கடந்த வாரம் ஒத்திவைத்ததுடன், மே முன்வைத்த இறுதித் திட்டத்துக்கு நாடாளுமன்ற எதிர்மறை வாக்கெடுப்பு சாத்தியம் என பிரித்தானிய அரசாங்கம் அச்சம் கொண்டுள்ள இவ்வேளையில், ஐரோப்பா மற்றும் லண்டன் தொடர்ச்சியாக அரசியல் முட்டுச்சந்தில் சிக்கியுள்ளது. குறித்த வாக்கெடுப்புக்கு முன்னர் குறித்த பிரெக்சிற் திட்டம் பற்றி கருத்து வெளியிட்டிருந்த மே, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிரித்தானியாவுக்கும் ஐரோப்பாவுக்குகும் இடையேயான சாத்தியமான ஒப்பந்தத்தை விட சிறந்த திட்டம் எதுவுமில்லை என கூறியிருந்திருந்தார். மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறுவது இலண்டனுக்கு மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இலண்டன் தனக்கு ஏற்றதான ஒரு திட்டத்துடன் வெளியேறவே விரும்புகின்றது.

எது எவ்வாறாயினும், அவ்வாறான ஒரு திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பெறுவது என்பது இலகுவான காரியம் இல்லை. மறுபுறம், பிரித்தானியாவில் வலுத்துவரும் பிரெக்சிற் மீதான “இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்படுதல்” ஐரோப்பா மற்றும் பிரித்தானிய விவகாரங்களில் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கலான பிரெக்சிற் விலகலுக்கான திட்டத்தில் மேலதிக சிக்கல் நிலைமையை தோற்றுவித்துள்ளது எனலாம். இது தொடர்பில் கருத்து வெளியிடும் அரசியல் ஆய்வாளர்கள், பிரித்தானிய அரசாங்கத்தின் சிக்கலான தீர்வுத் திட்டத்தை தொடர்ச்சியாக அரசியல் பரப்பில் வைத்திருத்தல், பிரித்தானிய அரசாங்கமும் நாடாளுமன்றமும் இந்த விஷயத்தில் மற்றொரு வாக்கெடுப்பில் பங்கேற்க பிரித்தானிய குடிமக்களை வழிநடத்த முயல்கின்றன என்று வாதிடுகின்றனர். இதே விடையத்தையே, தொழிற்கட்சி, கன்சர்வேடிவ் கட்சிகள் இருவரும் (அவற்றின் வேறுபாடுகள் இருந்தபோதிலும்) தமது கொள்கை சார்புபட விவாதிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில், ஐரோப்பிய அதிகாரிகள் இந்த சிக்கலான விடயத்தில் தமது ஆளுமைக்கு உட்பட்டே தீர்வுகாண விழைகின்றனர். ஒரு புறத்தில், இலண்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸிற்கும் இடையேயான உடன்பாடு இல்லாமல், பிரெக்சிற் மிக மோசமான விளைவாக அமையும் என சில ஐரோப்பிய தலைவர்கள் கவலை தெரிவிக்கும் போதிலும், மறுபுறம் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே வேறு எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என்றும் ஏற்கனேவே வழங்கப்பட்ட தீர்வு மிகவும் பொருத்தமானதே என்றும் வாதாடுகின்றனர்.ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜூன் கிளாடியே ஜங்கர் இது பற்றி கூறுகையில் “நாங்கள் ஏற்கெனவே பேசி அடைந்த ஒப்பந்தம் சிறந்த ஒன்றாகும். சிறந்தது என்பதை தாண்டி இதுவே சாத்தியமான ஒரே ஒரு ஒப்பந்தம் ஆகும். ஆதலால், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு எந்த இடமும் இல்லை” என்றிருந்தார். எது எவ்வாறாயினும், தம்மால் நிச்சயமாக குறித்த தீர்வுத் திட்டம் தொடர்பாக மறுபிரவேசம் செய்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையுமாயின், குறித்த ஒப்பந்தத்தை திருத்தாமலேயே மேலும் தீர்வு தொடர்பாக விளக்கங்களை வழங்குவதற்கு போதுமான இடைவெளி உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்திருந்தார். இந்நிலையியிலேயே ஜேர்மனிய சான்செலரின் இராஜதந்திர தலைமைத்துவம் குறித்த பேச்சுவார்த்தை மேசையில் செல்வாக்கு செலுத்துகின்றது.

இதே நிலைமையை வேறுவிதமாக வெளிப்படுத்துவதானால், ஐரோப்பிய அதிகாரிகள் பிரித்தானியாவுக்கு பிரெக்சிற் தொடர்பாக இன்னொரு வாக்கெடுப்பு நடாத்த வழிவைக்கும் கைங்கரியங்களிலேயே ஈடுபட்டுள்ளனர் எனலாம். இதன் நகர்வுகளில் முன்னிலையில் ஜேர்மனிய சான்செலரே அங்கம் வகிக்கின்றார். சமீபத்தில் றொய்ட்டர்ஸுக்கு செவ்வி அளித்தபோது, ​​பிரெக்சிட்டை பொறுத்தவரை ஐரோப்பிய, பிரித்தானிய அதிகாரிகளுக்கு இடையே வேறு எந்த பேச்சும் இல்லை என்று மேர்க்கல் வெளிப்படையாக வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், திரை மறைவில் பிரித்தானியாவுக்கு குறித்த திட்டம் தொடர்பில் மீண்டும் பேசுவதற்கு உறுதியளிக்கும் முயற்சிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேர்க்கல் இந்த முயற்சிகள் பற்றி குறிப்பிடவில்லை ஆயினும், பிரித்தானியாவின் பிரதம மந்திரி மேர்க்கலுடன், தொடர்ச்சியாக பேச்சுவார்ததை நடாத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகளில் தனது பிடிப்பை தொடர்ச்சியாக வைத்திருப்பதற்காகவே ஆகும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.