புலனாய்வுக் கட்டமைப்பும் ஐ.எஸ் தாக்குதலும்

விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னர், வவுணதீவு பொலிஸ் சோதனைச்சாவடி மீதான தாக்குதல்கள் உட்பட, பல்வேறான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி, வெறுமனே சந்தேகப்பார்வையில் பார்க்கப்பட்டு வந்த முன்னாள் போராளிகள் மீதான விசாரணைகள், தீவிரப்படுத்தப்பட்டு வந்த நிலையில், இலங்கை இராணுவத்தினரதும் புலனாய்வுப்பிரிவினதும் கட்டமைப்பை சற்று உச்சமாகவே நெருக்கியிருந்தது பாதுகாப்பு தரப்பு.

எனினும், குட்டித்தீவில் உலக பயங்கரவாதம் தலைவிரித்தாடும் என்ற சந்தேகப்பார்வை, இந்தப் புலனாய்வுப்பிரிவுக்கு வராதுபோனமை பெரும் வெட்கக்கேடானதாகவும் அனைவரும் விமர்சிக்கும் கருப்பொருளாகவும் மாறியிருக்கின்றது.

போதைப்பொருளை ஒழிப்பதற்கும் அதனோடிணைந்து நடைபெற்றுவந்த பல்வேறு சமூகச் சீரழிவுக்குக் காரணமான கட்டமைப்புகளை இலங்கை தடுத்து வந்த நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நடைபெறும் என்ற கண்காணிப்புப் பார்வை இல்லாமல் போனமை சற்று அசமந்தமான செயற்பாடாகவே பார்க்கத்தூண்டுகின்றது.இது, புலனாய்வுக் கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளையும் புலனாய்வுத்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தப் பல்வேறு யுக்திகளைத் தற்போது பாதுகாப்புத் தரப்பு மேற்கொண்டு வரும் நிலையில், வடபகுதி மக்களின் வாழ்வியல், மீண்டும் 10ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலைக்குச் சென்றுள்ளது என்பதே உண்மை.

திடீர் சுற்றிவளைப்புகளும் சோதனைகளும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்குப் பழகிப்போன விடயமாக காணப்பட்ட போதிலும், தற்போது அச்சமின்றி அதனை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இதற்கு காரணம் என்ன?

விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களையும் புலிகளாகப் பார்த்த புலனாய்வுப்பிரிவும் பாதுகாப்பு படைகளும் இன்று தமிழ் மக்கள் மீதும் அவர்கள் செயற்பாட்டிலும் சற்று நம்பகத்தன்மையை கொண்டிருப்பதே அதற்கான காரணமாக மாறியுள்ளது. வெறுமனே தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட சந்தேகப்பார்வையில் தவறு என உணர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு வவுணதீவில் பொலிஸார் கொல்லப்பட்டமைக்கும் அதன்போது காணாமல் போன ஆயுதங்களும் ஐ.எஸ் ஆதரவு அணியிடம் இருந்துள்ளமை தற்போது வெளிப்பட்டுள்மையானது முஸ்லிம் அடிப்படைவாதத்தைக் கொண்ட தீவிரவாதிகள், இன்னோர் இனத்தைச் சார்ந்து, தமது அணியைப் பலப்படுத்தியுள்ளதாகவே கொள்ள முடிகின்றது.

இவ்வாறான நிலையில், வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும் நிலையொன்றைக் காணமுடிகின்றபோதிலும் மீண்டும் இந்நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் சிரமம் கொள்வதையும் அவதானிக்க முடிகின்றது.

வில்பத்து காடுகளும் வண்ணாத்திவில்லு மறைவிடங்களும் தாக்குதலுக்குப் பின்னர் அடையாளம் காணப்பட்ட இடங்கள் அல்ல. ஏற்கெனவே இவை பெரும் விடயங்களாகப் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டபோதிலும் அதிகாரத்தரப்பினரின் அசமந்தமும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது இருந்த நம்பிக்கையும் இவ்வாறான தீவிரவாதமொன்று இலங்கையில் உருவாகாது என்ற கோணத்தில் பார்க்கவைத்துள்ளது.

எனினும், தற்கொலைதாரிகளாக இந்த நாசகார செயலைச் செய்தவர்களின் தொடர்பு என்பது பெரும் புள்ளிகளுடனேயே இருந்துள்ளது. எனினும் அவை தொடர்பில் இன்றுவரை உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்கின்ற ஆதங்கம் பல அரசியல் தலைமைகளிடம் உள்ளது. எனவே, இலங்கையின் ஸ்திரத்தன்மை தொடர்பில் அதீத நம்பிக்கையைப் பாதுகாப்பு தரப்பினர் கொண்டிருந்தமையே இதற்குக் காரணமாகியுள்ளது.

இவற்றுக்குமப்பால் வடக்கில் நடக்கும் சுற்றிவளைப்புகளின் போதும் அதனோடிணைந்த செயற்பாடுகளின்போதும் இஸ்லாமியர்களும் அவர்கள் வாழும் பிரதேசங்களும் கழுகுப்பார்வைக்குள் வந்துள்ளன. நீண்ட காலமாகக் கவனிக்கப்படாது இருந்த பல்வேறான சட்டவிரோத செயற்பாடுகள், இன்று களையப்படுவதற்கான சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

இருந்தபோதிலும் மதஸ்தலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களும் மக்களின் அன்றாட வாழ்வியலில் ஏற்பட்டுள்ள சங்கடங்களும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டிய விடயங்களே. இவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒன்றிணைந்த செயற்பாடு இன்றியமையாதது என்பது மறுப்பதற்கில்லை.

எனவே, இந்த ஒன்றுபட்ட செயற்பாடு எங்கிருந்து உருவாக வேண்டும் என்பதான கேள்வியே அதிகமுள்ளது. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையைத் தீர்க்க மக்கள் ஒன்றுபட்டுச் செயற்படத் தயாராக உள்ள நிலையில் அரசியல் தலைமைகள் அதற்கு உடன்படுவார்களா என்பது ஆராயப்படவேண்டிய விடயமே.

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும் அதனில் சிரத்தை கொள்ளாது விட்டமையாலும் அடுத்த தேர்தல் என்ற எண்ணப்பாட்டுடன் தமது நகர்வுகளை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தியமையாலும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான கருத்து மோதல்களும் இன்று இலங்கையை யுத்தகளமாக மாற்றியிருக்கின்றது.

தகவல் பரிமாற்றங்களும் அதனுடைய முக்கியத்துவமும் அரசியல் என்ற கட்டமைப்புக்குள் சிக்கித் தவித்தமையின் காரணமாக, நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் செல்வாக்கும் தமது ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான முனைப்புகளாலும் ஐ. எஸ் தீவிரவாதத்துடன் இலங்கை முஸ்லிம்கள் சிலர் பங்கேற்பதை ஏற்கெனவே தடுக்க முடியாத நிலைக்குப் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் போயுள்ளனர்.

இந்நிலையிலேயே, செல்வம் அடைக்கலநாதன், “சில அரசியல்வாதிகள் முதலைக்கண்ணீர் வடிப்பது வேதனையளிக்கின்றது. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டில் சில அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். இலங்கையின் முக்கிய வனங்களான வில்பத்து காட்டுப்பகுதி அழிக்கப்படுகின்றபோது, அதனைத் தடுக்குமாறு பல குரல்கள் ஓங்கி ஒலித்தபோது, அதனைப் பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டுகொள்ளாத நிலை காணப்பட்டது. இன்று அப்பகுதியிலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படும் நிலையில், வில்பத்து பகுதியில் ஏன் முன்னரே கண்காணிப்பை மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. சில அரசியல்வாதிகளால் பல்வேறு அரச திணைக்களங்களில் தமக்குச் சார்பானவர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளமை தொடர்பிலும் புலனாய்வாளர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலை உள்ளது” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அரசியல்வாதிகள் தேர்தல் என்ற நிலைப்பாட்டில் தமது நகர்வுகளை நகர்த்தாது, மக்களின் நலன் கருதியதும் அவர்களது பாதுகாப்பிலும் கவனம் செலுத்தவேண்டும்.

ஐ. எஸ் தீவிரவாதிகள் என்ன காரணத்துக்காக இந்தத் தாக்குதலை இலங்கையில் மேற்கொண்டனர் என்பது தொடர்பான தகவலை இதுவரை வெளிப்படுத்தாத நிலையில், இது தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு இலங்கைப் புலனாய்வுப் பிரிவு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இலங்கையில் தஞ்சமடைந்துள்ள சிரியா, பாகிஸ்தானுட்பட ஈரான் நாட்டு அகதிகளை, வடபகுதிக்கு நகர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதான தகவல்களும் வெளிவரத்தொடங்கியுள்ளன. அகதிகளாக வந்தவர்களுக்கு அதற்குரிய வசதிகளை அரசாங்கம் என்ற ரீதியில் செய்துகொடுக்க வேண்டிய நிலை உள்ளபோதிலும், யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து நிமிர்ந்து வரும் தமிழ் சமூகத்தின் மத்தியில் அவர்களைத் தங்க வைப்பதோ, குடியேற்றுவதோ சாதகமானதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இது தொடர்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், “தற்போது நாட்டில் நிலவியுள்ள அசாதாரண சூழ்நிலையின்போது, இங்கே இவர்களைத் தங்க வைப்பது என்பது இப்பிரதேச மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பங்களையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதாகவே அமையும். நீண்ட கால யுத்தத்துக்குப் பின்னர் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற பல பிரச்சினைகளுக்கு வடக்கு, கிழக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் வெளிநாட்டுப் பிரஜைகளை இங்கு தங்க வைப்பது பொருத்தமற்ற செயற்பாடு ஆகும். எனவே யுத்தம் நடைபெற்ற வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இவர்களை தங்க வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டிய அரசாங்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முயற்சிகளைக் கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என்பதோடு தீவிரவாதத்துக்கு அரசியல்வாதிகள் உடந்தையாக இருப்பார்களேயானால், அவர்கள் தகுதி பாராமல் தண்டிக்கப்படவேண்டிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் மத்தியில் உள்ள கருத்தாகும் என்பது மறுப்பதற்கில்லை.