புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள்…….?

புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள் இப்போது உள்ள நிலையுடன் ஒப்பிட்டால் அளவில் குறைவாகவே இருந்தது என்கின்ற ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அந்த நிலை 2007 ஆரம்பம் வரையுமே இருந்தது. அதன் பின் 2009 மே மாதம் நடுபகுதிவரை என்றுமில்லாத வகையில் தமிழ் மக்கள் அடக்குமுறைகளையும் சமூக சீரழிவுகளையும் அனுபவித்தனர். புலிகளே இதற்கு காரணமாகினர் என்கின்ற குற்றச்சாட்டையும் நிராகரிக்கவும் முடியாது.


புலிகள் இறுதி போருக்குள் தள்ளப்படும்வரை இந்த சமூக சீரழிவுகள் மட்டுபடுத்தப்பட்ட அளவில் இருந்தது என்பதற்கு இந்த சமூகவன்முறைகளுக்கு அவர்கள் பூச்சிய சகிப்புதன்மையை கொண்டிருந்தனர் என்பதைவிட அதிகம் அறியப்படாத வேறு ஒன்றும் வலுவான காரணியாக இருந்தது.

சமூக சீரழிவுகளில் ஈடுபாடுடைய சமூகவிரோதிகள் புலிகளுக்கு பயந்து அவர்கள் கண்களில் படாமல் ஒடி ஓழிந்துகொண்டனர் அல்லது அரசுபடைகளிடம் தஞ்சமடைந்ததால் அவர்களின் நிகழ்ச்சி நிரலின்படி நடக்கவேண்டியதாயிருந்தது. அவ்வாறு தப்பிக்க முடியாதவர்கள் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேறுவழியில்லாமல் புலிகளோடு சேர்ந்து அவர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப இயங்கவேண்டியிருந்தது.
அதாவது சமூகத்துக்கு தீங்குசெய்யகூடியவர்கள் என்ற வகையினுள் வந்த அனைவரினதும் சுதந்திரமான நடமாட்டத்தின் பிரதான கட்டுபாட்டாளர்களாக புலிகளே நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தனர், தீர்மானித்தனர் என்பதே அந்த அதிகம் அறியப்படாத காரணியாகும்.

ஆனால் இன்று புலிகளும் இல்லை. நாட்டில் எந்தவித அச்சநிலையும் இல்லை. அனைவரும் அளவுக்கு அதிகமான சுதந்திரத்தை அனுபவிப்பதால் புதிதாக சமூகவிரோத செயல்களும் முளைக்கின்றன.
யுத்தகாலத்தில் இலங்கையின் 20 மில்லியன் மக்களின் கவனமும் யுத்தத்தை நோக்கியே மையப்படுத்தபட்டிருந்தது. ஆனால் இன்று மக்களின் சிந்தனையை ஒருமையப்படுத்தும் பெரும்காரணி என்று எதுவும் இல்லாததால் அவர்களின் சிந்தனையில் சிதறல் ஏற்படுகின்றது. சமூக சீர்கேடுகளும் அதிகரித்துள்ளது.

நாட்டில் வலுவான சட்டம் ஒழுங்கு ஏற்படும்போது, சட்டத்தின் ஆட்சி வலுவானதாக மாறும்பபோது இந்த சீரழிவுகளும் குறையலாம் அல்லது கட்டுக்குள் வரலாம். இதற்கு நீதிபதிகளின் பங்கும் காவல்துறையினரும் செயற்பாடுகளுமே உதவமுடியும்.
காலமாற்றத்துக்கு ஏற்ப மக்களாகிய நாமும் அதை ஏற்றுக்கு முன்னோக்கி சிந்தித்து செயற்படவேண்டியதும் அவசியமாகின்றது.
மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்தை ஏற்றுக்கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் அரசியல் வேறுபாடுகள் மறந்து.

(Rajh Selvapathi)