பேட்டைக்காரன் கலைஞர்.

(தமிழ்ப் பிரபா)

கலைஞரைப் பற்றி இங்கே எழுதக்கூடிய நிதானமான மனச்சூழல் இப்போதுதான் கிடைத்தது. கலைஞர் செய்த முக்கியமானதொரு காரியமாக என்னளவில் நினைப்பது, ‘மெட்ராஸ்’ கூவத்தை ஒட்டி வாழ்ந்த குடிசைப்பகுதி மக்களுக்கு ஹவுசிங் போர்டு கட்டிக் கொடுத்தது. ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன் ‘குடிசை மாற்று வாரியம்’ என்று அவர் தொடங்கிய ஹவுசிங்போர்டு திட்டம் அடித்தட்டு மக்களின் வாழ்வியலில் மிகப்பெரிய உளவியல் பலத்தை சேர்த்தது. கலாசார மாற்றத்தைக் கொண்டுவந்தது. தங்களிடையே இப்படியொரு மாற்றத்தை நிகழ்த்திய கலைஞரையும் மக்கள் இன்றளவும் விட்டுக் கொடுத்ததில்லை.

எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கு என்பது கிராமப்புற ஏழை, எளிய மக்களிடம்தான். மெட்ராஸ் அடித்தட்டு மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு திமுகதான். கலைஞர்தான். குறிப்பாக, எங்கள் தொகுதியான சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை என்பது கலைஞரின் கோட்டை. அவர் அதிக முறை தேர்தலில் நின்ற தொகுதி அது. தொடர்ந்து மூன்றுமுறை அங்கே வெற்றிபெற்றார். ஒவ்வொருமுறை ஓட்டுக் கேட்க ஹவுசிங்போர்டு ஏரியாவுக்கு கலைஞர் வரும்போது ஹவுசிங்போர்டின் மூன்றாவது மாடியிலிருந்து கலைஞர்க்கு பூ தூவுவார்கள். தன் மீது பூக்கள் விழும் ஒவ்வொரு முறையும் தலையை மேலே தூக்கி அவர் ஒரு சிரிப்பு சிரிப்பார்.
அது ஒரு காவியத் தருணம். நடனம், பாட்டு, பறையிசை என ஆண், பெண் பேதமின்றி ஊரே அல்லோலப்படும்.

கலைஞர்க்கும் சிந்தாதிரிப்பேட்டைக்கு வருவதென்பது தாய்வீட்டுக்கு வருவதுபோலதான். பெரியார் ‘விடுதலை’ பத்திரிகை நடத்திய இடம் சிந்தாதரிப்பேட்டை. அங்கேதான் தங்கியுமிருந்தார். மீரான்சாஹிப் தெருவிலுள்ள தன் வீட்டுத்திண்ணையில் இயக்கத் தோழர்களுடன் பல ஆலோசனைக் கூட்டங்கள் போட்ட இடம் அது. அந்தத் தருணங்களை எல்லாம் கலைஞர் சிந்தாதிரிப்பேட்டைக்கு வரும் ஒவ்வொரு முறையும் நினைவு கூறுவார். கலைஞரின் தேர்தல் பிரசாரம் என்பது திருவாரூர் அல்லது சிந்தாதிரிப்பேட்டையில்தான் பெரும்பாலும் நிறைவுறும். சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட் அருகே கூட்டம் நடைபெறும்போது உட்கார இடம் கிடைக்காது என்பதால் வெகு சீக்கிரமே அங்கு சென்று முகத்தில் வெயிலடிக்க நாற்காலியில் இடம் பிடித்துவிடுவேன்.
பின்னர் அங்கு வரும் பெரியவர்களால் துரத்தப்பட்டு டவுசர் போட்ட சிறுவனாக ஓர் ஒரமாக நிற்பேன்.
என் உயரம் காரணமாக கலைஞரின் முகத்தைப் பார்க்க இயலாது. முன்னாடி நிற்பவர்களின் தோளைப் பற்றி எழும்பி எழும்பி அவர்களிடம் திட்டு வாங்கி, சரி முகத்தைப் பார்க்காவிட்டால் என்ன என்று என் இயலாமையின் மீது ஏதாவதொரு நியாயத்தைக் கற்பித்து கலைஞர் பேசும்போது காதைக் குவித்துக் கேட்க ஆரம்பிப்பேன். கலைஞர் பேச ஆரம்பிப்பார். அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கட்சி ஆட்கள் ஒவ்வொருவர் பெயரையும் அவர்களே.. அவர்களே என்கிற வார்த்தையைச் சேர்த்து சொல்லி முடித்து ‘மற்றும் என் உயிரினும் மேலான….’ என ஆரம்பித்து அந்த இடத்தில் ஓர் இடைவெளி விடுவார். கூட்டம் ஆர்ப்பரிக்க என் உடல் சிலிர்க்கும். இந்தத் தருணத்தை அனுபவிக்கத்தானே கால்கடுக்க நின்றோம் என்கிற திருப்தியுடன் கலைஞரின் முகத்தைப் பார்க்காமலே அந்த ஆரவாரத்தை அனுபவிப்பேன். அவர் இறப்பையொட்டி இதை எழுதும்போது அந்த தருணங்கள் எல்லாம் நினைவில் வந்து மோதுகின்றன.

பின்னாட்களில், கலைஞர் மீது எனக்கு நிறைய விமர்சனம் வர ஆரம்பித்தது. என் வீட்டருகே இருக்கும் ஆரி தாத்தா பழைய திமுக ஆள். பார்வை பறிபோன அவருடைய அந்திமக் காலங்களில் அவருடனேயே இருந்தேன். ஈழப்போர் சமயத்தில் கலைஞர் செய்தது, வாரிசு அரசியல் இதுகுறித்தெல்லாம் அவரிடம் கேட்பேன். ஒருமுறை ஆரி தாத்தா என் கை மணிக்கட்டை இறுகப் பற்றியபடி சொன்னார் “நைனா, நீ கேக்றதுக்கெல்லாங் பதில் தெர்ல நம்ம காலம்வேற. ஆனா தலைவர் மட்டும் இல்லன்னு வெச்சுக்கோ பாப்பானுங்கோ நம்ள பம்ப்பஷ்ட்டு இருப்பானுங்கோ” என்று கையால் சைகை செய்தார். அவர் கூறியதன் அர்த்தம் எனக்கு அப்போது பெரியதாய் விளங்கவில்லை. கலைஞர்க்கு மாற்றாக நெடுஞ்செழியன், சம்பத் ஏன் அண்ணாவே கூட கட்சியைத் தொடர்ந்திருந்தால் இந்துத்துவத்திற்கு எதிராக இத்தனை ஆண்டுகாலம் தாக்குப் பிடித்திருப்பார்களா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அதனால்தான் கலைஞரின் மரண அறிவிப்பு வரும் முன்னரே ஒரு தரப்பு அதை ‘தீபாவளியாக’க் கொண்டாட யத்தனித்தார்கள். நம்முடைய பரம எதிரி சாய்ந்தான் என்று ஆசுவாசம் கொள்கிறார்கள். கடைசிநேரத்தில், கலைஞர் புதைக்கப்படும் இடம் குறித்து நமக்குள் எழுந்த நிம்மதியின்மையை வெளிப்படையாக ரசித்தார்கள். ஒருவகையில் இது நல்லதுதான். நாம் அழும்போது சிரிப்பவன் யார் என இணங்காணப்பட்டதற்கு குறிப்பாக இன்றைய தலைமுறையினர்க்கு இந்தச் செய்தியைச் சொல்ல ஒரு கூர்மையான ஆயுதமாக கலைஞர் பயன்பட்டு இருக்கிறார். இறந்தபிறகுகூட கலைஞர் செய்த முக்கியமான அரசியல் நகர்வை, காலத்தின் தேவையை புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். திராவிடம் 2.0 என நிறைய கூட்டம் போட்டார்கள். என்னளவில் கலைஞருக்கு இடம்தர மறுத்தும் பின்னர் சம்மதித்ததும்தான் திராவிடம் 2.0. அதையும் அவர்தான் தொடங்கி வைத்திருக்கிறார்.

கலைஞர் மீது விமர்சனமே இல்லை என்றால் இருக்கிறது. அதில், அழுத்தாமாக நான் சொல்ல விழைவது, வாக்கு அரசியலுக்காக அவர் செய்துகொண்ட சமரசங்களின் வழியாக இடைநிலைச் சாதிகளின் அதிகார பரவலாக்கம் வேரூன்றியதுதான். அதுவே, கலைஞர் ஏற்படுத்திய மிகப்பெரிய சேதாரம். திராவிட இயக்கத்திற்கு முன்பு தோன்றிய திராவிடக் கொள்கைகளை வடிவமைப்பதற்கு அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய தலித்தியத்திற்கு அரசியல்ரீதியான அதிகாரப் பகிர்வுகளில் திமுக செய்த நியாயங்களைப் பற்றி சிந்திக்கிறபோது எழும் ஆற்றாமையை தவிர்க்க இயலவில்லை. இந்த ஆற்றாமை என்பது திமுக மீது மட்டுமில்லை. சமூக கட்டமைப்பின் எதார்த்ததையும் புரிந்துக் கொள்கிறேன். அதேசமயம், அதை உடைக்கிற திமிரும் திமுகவுக்கு இன்னும் வேண்டும். திமுக என்கிற கட்சி வலுவடைவதற்குக் கீழே இறங்கி வேலைப் பார்த்தவர்கள் தலித்துகள். திமுகவிற்காக உயிரைவிடத் தயங்காதவர்கள். மெரினாவில் கலைஞர்க்கு இடமில்லை எனத் தெரிந்ததும் காவேரியின் முன்பும், கோபாலபுரத்தின் முன்பும் தீக்குளிக்கத் துணிந்தது இங்குள்ள அடித்தட்டு மக்கள்தான். இது யாருக்கான கட்சி என்பதைப் பற்றியெல்லாம் கூட யோசிக்காமல் கலைஞர் என்கிற முகத்திற்காக இன்றளவும் அவருக்காக கட்சியில் இருக்கிறார்கள். ஒருவகையில் விசிக தன் தரப்பு தலித்துகளைக் கூட ஒன்றிணைக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம்கூட கலைஞர்தான். தலித்துகள் கலைஞர்மீது வைத்திருக்கும் முரட்டுத்தனமான அன்புதான். இதுகுறித்து மேலும் விரிவாக இந்தச் சூழலில் எழுத எனக்கு மனம் வரவில்லை.

அடித்தட்டு மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யாமல் தன் திரை பிம்பத்தைப் பயன்படுத்தி அவர்களின் தலைவனாக பெயரை வாங்கிக் கொண்டு போனார் எம்.ஜி.ஆர். ஆனால் கலைஞர் அப்படியில்லை. எளிய மக்களை மனதில் வைத்து கலைஞர் கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம். அவர்மூலம் பயன்பெற்று தலையெடுத்து இருக்கும் இந்த தலைமுறை இதை உரக்கச் சொல்லி அவரைக் கொண்டாடுவதுகூட சரியான திசையை நோக்கி வரலாறு சென்று கொண்டிருப்பதாகவே பார்க்கிறேன்.

கலைஞரை அவருடைய வீட்டில் பார்க்க வேண்டுமென்கிற எண்ணம் நீண்டகாலமாக எனக்கு இருந்தது. அதற்குரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில், நள்ளிரவு ஒருமணிக்கு அவரை அவருடைய வீட்டில் சந்தித்தேன். அவரைப் பார்த்து இருகரம் கூப்பினேன். கண்ணாடிப் பெட்டியில் படுத்திருக்காமல் இருந்திருந்தால் அவருடன் நிச்சயம் ஒரு புகைப்படம் எடுத்திருப்பேன். அவரும் அன்புடன் அனுமதித்திருப்பார்.