மஹிந்தவின் மறு எழுச்சியா?

‘ஜன சட்டன’ என்ற பெயரில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றுத் தொடங்கப்பட்டுள்ள கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாதயாத்திரையின் விளைவுகள் எத்தகையதாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர், நடத்துகின்ற மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக இது காணப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைப் பறிகொடுத்த பின்னர், அரசியல் ரீதியாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

தோல்வியின் பின்னர் சில வாரங்களே அரசியலில் இருந்து விலகி, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவர், முழுவேகத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாரானார்.

மீண்டும் ஜனாதிபதியாகும் கனவு முற்றாகவே தகர்ந்து போய் விட்ட நிலையில் பிரதமர் பதவியே அவரது அடுத்த அரசியல் இலக்காக மாறியது.

அதனை அடைவதற்காக, கடந்த ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து, தனிக்கட்சியை உருவாக்கவும் மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உடையாமல் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு இடமளித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்காமல் போனதும், ஐதேகவுடன், இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசு அமைக்க முடிவு செய்ததும் மஹிந்தவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடைமொழியுடன், 51 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் கூட்டு எதிரணியை நடத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது, ஆட்சியைக் கவிழ்க்கின்ற ஆசை வந்திருக்கிறது.

அண்மைய நாட்களாக, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பது ஒன்றும் கடினமான காரியமில்லை என்று அவர் கூறி வருவதைக் காணமுடிகிறது.

தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பது இலகுவான விடயமல்ல என்பது மஹிந்தவுக்குத் தெரியும். ஆனாலும் அவர் அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார் என்றால், சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

தற்போதைய அரசாங்கத்தின் சில நகர்வுகள், மஹிந்தவுக்கும் அவரது அணியினருக்கும், குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.

அதைவிட, அரசியல் ரீதியாக மக்கள் மத்தியிலும் குழப்பங்கள், அதிருப்திகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவும் அவரது கூட்டு எதிரணியினரும் முயற்சிக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மீது அதிகளவில் வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள் தமிழர்கள். ஆட்சி மாற்றத்தை அதிகளவு ஆதரித்தவர்கள் அவர்கள். அவர்களுக்கே இப்போதைய ஆட்சியின் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

எதிர்பார்க்கப்பட்டது போல தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கவில்லை – தீர்ப்பதற்குப் பெரியளவில் முயற்சிக்கவுமில்லை. பொறுப்புக்கூறல் வாக்குறுதிகள் நிலுவையாகக் கிடக்கின்றன. இன்னும் பல்வேறு வாக்குறுதிகளின் நிலை கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. விலைவாசி உயர்வு கூட தலைக்கு மேல் போகத் தொடங்கியுள்ளது.

இவையெல்லாம் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக தமிழ் மக்கள் மஹிந்த ஆட்சியை விரும்புகின்றனர் என்று அர்த்தமில்லை.

ஆனாலும், இரண்டு ஆட்சிகளுக்கும் இடையே வித்தியாசமில்லை என்று அவர்கள் எப்போது தீர்மானிக்கின்றனரோ அப்போதே, மஹிந்தவின் மீது அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு வந்து விடக் கூடும்.

சிங்கள, முஸ்லிம் மக்களின் நிலை வேறு விதமானது. முஸ்லிம்கள் கடந்த காலங்களில் மஹிந்தவுடன் ஒன்றாகவே இருந்தவர்கள் சேர்ந்து அரசியல் நடத்தியவர்கள். பொது பலசேனா விவகாரம் தான், மஹிந்தவிடம் இருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்தியதே தவிர, வேறு பெரியளவில் பிரச்சினைகள் அவர்களுக்கிடையில் இல்லை.

எனவே, தனது தவறுகளுக்காக மஹிந்த வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்களை நோக்கி கையை நீட்டுவாரேயானால், ஒருவேளை முஸ்லிம் மக்களின் மனங்களும் இலகுவாக மாறிவிட வாய்ப்புகள் உள்ளன.

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில், மஹிந்த ராஜபக்ஷவை முற்றாக வெறுக்கின்றனர் என்றோ, அவரை அரசியலில் இருந்து ஓரம்கட்ட நினைக்கின்றனர் என்றோ எவராவது கருதினால் அது தப்புக்கணக்காகவே இருக்கும்.

சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனியான செல்வாக்கு இருக்கிறது மதிப்பும் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர் கூட, மஹிந்தவின் மீதான சிங்கள மக்களின் ஈர்ப்பு ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவில்லை.

சிங்கள மக்களில் கட்சி அரசியலுக்கு வெளியே இருப்பவர்கள் எப்போதும், ஐதேக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்று மாறி மாறி ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

அப்படியிருக்கும் நிலையில், அவர்கள் ஒருபோதும், தற்போதைய ஆட்சியை நிரந்தரமானதாக- தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கப் போவதில்லை.

அதைவிட, போரை வெற்றி கொண்ட தலைவர் என்ற மதிப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் மிக அதிகமாகவே இருக்கிறது.

இப்படியான நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி சிங்கள மக்கள் திரும்புவதற்கு பெரிதாக ஒன்றும் நேரம் எடுக்கப் போவதில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலம் மோசமானது என்பதை பொதுமக்கள் அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள் என்றாலும், தற்போதைய அரசாங்கம் அதனை சட்ட ரீதியாக நிரூபிப்பதில் இன்னமும் வெற்றி பெறவில்லை. இது மஹிந்தவைக் கைவிட்டுச் சென்றவர்களைக் கூட அவரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

மஹிந்த ஆட்சிக்கால பொருளாதார கொள்கைகளின் விளைவாக தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தாலும், தற்போதைய அரசு அதனை எந்தளவுக்கு சீரமைக்க முனைகிறது என்பதில் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன.

வாக்குறுதிகளுக்கு அப்பால் செயற்படுகின்ற ஓர் அரசாங்கமாக இந்த அரசாங்கம் எந்தளவு காலத்துக்கு நீடிக்கப்போகிறது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது.

இப்படியான நிலை, மஹிந்தவுக்கு மிகவும் சாதகமானது. புதிய அரசாங்கம் மீதான கவர்ச்சியும், நம்பிக்கையும் மெல்ல மெல்ல உடையத் தொடங்கியுள்ள இந்தச் சூழலை அவர் மிகக் கவனமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.

பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக இல்லாவிடினும், குறைந்தபட்ச அளவிலேனும் செயற்படுத்த வேண்டிய ஒரு காலகட்டத்தில் அரசாங்கம் இருக்கிறது.

காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் முயற்சிகள் நாடாளுமன்றம் வரை வந்திருக்கிறது. இதுபோன்ற பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள், மஹிந்த ராஜபக்ஷவையும் முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள், படை அதிகாரிகள், சிங்கள மக்களையும் சஞ்சலத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

பொறுப்புக்கூறல் பொறி தம்மை விழுங்கி விடுமோ என்று அச்சம் கொண்டிருப்பவர்களை தம் பக்கத்துக்கு இழுத்துக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கு வேறு வசதியான தருணங்கள் வாய்க்கும் என்று நம்ப முடியாது.

அதைவிட இன்னும் சில மாதங்களில் எப்படியாவது உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ள ஒரு சூழலில் தான், அவர் மக்களைத் தன் பின்னால் அணிதிரட்டத் தொடங்கியிருக்கிறார்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை வரும் முதலாம்; திகதி கொழும்பைச் சென்றடைந்த பின்னர், இதனை மிகப் பெரிய வெற்றியாகவும் மில்லியன் கணக்கான மக்களை தாம் அணி திரட்டியிருப்பதாகவும் பிரசாரங்களை கூட்டு எதிரணி ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்தப் பிரசாரத்துக்கு அப்பால், ஐந்து நாட்களும், கண்டி தொடக்கம் கொழும்பு வரையான வீதி நெடுகிலும் பாதயாத்திரை பயணம் செய்யும் வழிகளெல்லாம், மக்கள் மத்தியில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் தான் கனதியானதாக இருக்கும்.

புதிய அரசாங்கம் மீதுள்ள மக்களின் அதிருப்திகளை வெறுப்பாக மாற்றிக் கொள்வதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஷவினால் பயன்படுத்திக் கொள்ள முடியுமாக இருந்தால், அது அவரது அரசியல் பாதையில் மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தலாம். அதை விடுத்து, வெறும் அரசியல் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்த்து, அதிகார மோகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு களமாக மட்டுமே இந்தப் பாத யாத்திரையைப் பயன்படுத்திக் கொள்ள மஹிந்த ராஜபக்ஷ முற்படுவாரேயானால், மீண்டும் அவருக்கு சறுக்கல்கள் தான் ஏற்படும்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வரலாற்றில் மறு எழுச்சிக்கான ஒரு சந்தர்ப்பமாக இந்தப் பாதை யாத்திரையை அமைத்துக் கொள்வது, தனியே அவரது கையில் மாத்திரம் இல்லை.

மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் எவ்வாறு இதனையும், இதற்குப் பின்னரான அரசியலையும் கையாளப்போகிறது என்பதும் கூட அதனைத் தீர்மானிப்பதாக இருக்கும்.
(கே. சஞ்சயன்)