மஹிந்த – இந்தியா உறவு: காதலா, வியாபாரமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்துக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், தரகராகப் பாவிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியே ஆவார். எனவே, இப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, இந்திய அரசாங்கத்துக்கு, மஹிந்த ராஜபக்‌ஷவின் நட்புத் தேவையாக இருந்தால், மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்ள, சுப்ரமணியன்சுவாமியையே தரகராகப் பாவிப்பதற்கு, பிரதமர் மோடி ஆர்வமாயிருப்பார்.

ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்து, மஹிந்தவுடன் நெருக்கமாகப் பழகி வருபவர், சுப்ரமணியன்சுவாமியே ஆவார். மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், தமிழீழ விடுதலை புலிகள், இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதற்காக, மஹிந்தவைப் பெரிதும் பாராட்டுபவர் அவர். அதற்காக மஹிந்தவுக்கு, இந்தியாவின் அதியுயர் சிவிலியன் விருதான, ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும் எனக் கூறி வருபவர் இவராவார்.

இந்திய அரசாங்கம் தான், அண்மையில் சுவாமியை, இலங்கைக்கு அனுப்பியதோ தெரியாது. மஹிந்தவின் சகோதரர் ஒருவர், கடந்த மாதம் இறந்த போது, அதற்காக மஹிந்தவுக்கு அனுதாபம் தெரிவிக்க, இலங்கைக்கு வந்த சுவாமியை, இந்திய அரசாங்கம் பாவித்ததோ தெரியாது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு வந்த சுவாமி, இந்திய விஜயமொன்றுக்காக, மஹிந்தவுக்கு அழைப்பு விடுத்துச் சென்றார். அந்த விஜயத்தின் போது, புதுடெல்லியில், இலங்கை – இந்திய உறவைப் பற்றிய பகிரங்க உரையொன்றுக்கும், மஹிந்தவுக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த விஜயம், சற்று வித்தியாசமானதாகவே தெரிந்தது. புதுடெல்லியில், மஹிந்த நன்றாக வரவேற்கப்பட்டார். அவர், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துவிட்டு, நாடு திரும்பினார். மஹிந்தவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த முறுகல் நிலை, போய்விட்டது போன்றதொரு நிலைமை இப்போது உருவாகியுள்ளது.

மஹிந்தவுடனான தமது நெருங்கிய உறவை விளக்கும் சுவாமி, அதற்குக் காரணம், இந்தியாவின் எதிரியான புலிகளை, மஹிந்த அழித்தமையே எனக் கூறியுள்ளார்.

சுவாமி, கடுமையாக புலிகளை வெறுப்பவர். ராஜீவ் காந்தி கொலைக்காகச் சிறைக்குச் சென்றவர்கள், 27 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்தும், அவர்களை விடுதலை செய்யக் கூடாது எனக் கூறுபவர்.

அது மட்டுமல்லாது, ராஜீவ் காந்தி கொலைக்காக, சிறையில் உள்ளவர்கள் மீது, தாம் வெறுப்புக் கொள்ளவில்லை என்று கூறியதற்காக, ராஜீவின் மகன் ராஹூலையும் மகள் பிரியங்காவையும் கண்டித்தவர்.

அக்கொலைக்காகச் சிறை வாசம் இருக்கும் நளினியின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்தமையை விமர்சிப்பவர். நளினியின் மகளுக்கு, இலண்டனில் கல்வி கற்க, வசதி செய்து கொடுத்தமையை விமர்சித்தவர்.

இவ்வாறு, சுவாமியின் புலி எதிர்ப்பை, பட்டியல் போட்டுக் காட்டலாம். எனவே, இலங்கைப் பாதுகாப்புப் படைகள், புலிகளைத் தோற்கடித்து, புலிகளின் தலைவர்களை அழித்த போது, நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்தவை, சுவாமி நேசிப்பதைப் புரிந்து கொள்ளலாம். காரணம் எதுவாக இருந்தாலும், மஹிந்தவுடனான சுவாமியின் உறவை, இந்தியா பாவிக்கிறது போல் தான் தெரிகிறது.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னரும், மஹிந்தவுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையே, பல்வேறு முரண்பாடுகள் இருந்தன. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை, தமது தேர்தல் தேவைகளுக்காகப் பாவிக்கும், தமிழ் நாட்டுத் தலைவர்களின் நெருக்குவாரத்தின் காரணமாக, இந்திய அரசாங்கம், இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், ஜனாதிபதி மஹிந்தவிடம் பல விடயங்களை எதிர்பார்த்தது. ஆனால், மஹிந்த தட்டிக் கழித்தே வந்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுக் செயலாளர் சிவ் சங்கர் மேனனிடம், “13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பாலும் சென்று, தமிழர்களுக்குச் சலுகைகளை வழங்கத் தயார்” என மஹிந்த கூறினார். பின்னர், அவ்வாறு தாம், மேனனுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை எனக் கூறியிருந்தார். இது, இந்தியத் தலைவர்களை வெகுவாகச் சீண்டும் செயலாக அமைந்தது.

சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக, சில சிங்களப் பௌத்த தீவிரவாதக் குழுக்கள் செய்து வந்த குற்றச் செயல்களை, மஹிந்த அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்துவிட்டது. அதன் விளைவாக, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்து, அவரது அணியினர் கடந்த பொதுத் தேர்தலிலும் தோல்வியடைந்தனர். மஹிந்த அதற்கு இந்திய அரசாங்கத்தையே குறை கூறியிருந்தார்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் வெளியிடப்படும் ‘தி ஹிந்து’ பத்திரிகை நடத்திய நேர்காணல் ஒன்றின் போது, இலங்கையின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, தம்மை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுறச் செய்தது, இந்திய வெளிநாட்டு உளவுப் பிரிவான ‘ரோ’ அமைப்பே என, மஹிந்த கூறியிருந்தார்.

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில், மற்றொரு நாட்டின் உளவுப் பிரிவொன்று தலையிட்டதாகக் கூறுவது, பாரதூரமான குற்றச்சாட்டாகும். இந்தியா இந்தக் குற்றச்சாட்டை, அதுவும் இந்தியப் பத்திரிகை ஒன்றிடம் கூறிய கருத்தை, சாதாரணமாகக் கருதியிருக்காது.

அதன் பின்னர், கடந்த வருடம் இந்தியப் பிரதமர், இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த நிலையிலேயே, மஹிந்த அணியினரின் மே தினக் கூட்டம், காலி முகத்திடலில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், மஹிந்த மேடையில் இருக்கும் போதே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, இந்தியப் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, கறுப்புக் கொடி காட்டுமாறு, குழுமியிருந்த மக்களைக் கேட்டுக் கொண்டார். இதுவும் நிச்சயமாக இந்தியாவை ஆத்திரமூட்டியிருக்கும்.

அதேவேளை, மஹிந்த, தனது பதவிக் காலத்தில், சீனாவின் பக்கம் வெகுவாகச் சாய்ந்தார். மத்தல விமான நிலையம், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், துறைமுக நகரம் போன்ற பாரிய திட்டங்கள் அனைத்துக்கும், சீனாவிடமே கடன் பெற்று, அவற்றின் கட்டுமானப் பணிகளும் சீனாவுக்கே வழங்கப்பட்டன.

போதாக்குறைக்கு, மஹிந்தவின் காலத்தில், அணுசக்தியால் இயங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பலொன்று, கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து, தரித்து நின்று சென்றது.

இந்திய அரசாங்கம், அப்போது இதைப் பாரதூரமான விடயமாக நோக்கியது. அண்மையில், மஹிந்த இந்தியாவுக்குச் சென்றபோது, ‘ஹிந்து’ பத்திரிகையின் சார்பில், அவரைப் பேட்டி கண்டவர்கள், அதைப் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர். பேட்டி கண்ட இருவரில் ஒருவரான சுஹாசினி ஹைதர், சுப்ரமணியன்சுவாமியின் இளைய மகள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் இந்திய மத்திய அரசாங்கத்தில், முஸ்லிம் அமைச்சர்களில் ஒருவரான சல்மான் ஹைதரின் மகனான நதீம் ஹைதரையே, சுஹாசினி திருமணம் செய்துள்ளார். எனவேதான், அவர் சுஹாசினி ஹைதரானார்.

எனினும், சுவாமி கடும் இந்துத்துவவாதி. எவ்வளவுக்கு என்றால், அவரது முஸ்லிம் எதிர்ப்பின் காரணமாக, ஹாவர்ட் பல்கலைகழகத்தில் செய்த தொழிலையும் 2011 ஆம் ஆண்டு இழக்க நேரிட்டது.
மும்பையில் வெளியிடப்படும் இரண்டு பத்திரிகைகளில், வெளியான அவரது இரண்டு கட்டுரைகளே, ஹாவர்ட் பல்கலைகழகம் அவரை விரிவுரைகளில் இருந்து நிறுத்தக் காரணமாகியது.

அந்தக் கட்டுரைகளில் அவர், இந்தியாவிலுள்ள நூற்றுக் கணக்கான பள்ளிவாசல்களை இடித்துத் தள்ள வேண்டும் என்றும் தமது மூதாதையர்கள் இந்துக்கள் என்று ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்களுக்கு மட்டுமே, இந்தியாவில் வாக்குரிமை வழங்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

சுப்ரமணியன்சுவாமி, எப்போதும் சர்ச்சைகளை விரும்புபவர் போலும். ஜே.ஆர். ஜெயவர்தன, இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தமிழீழக் கோரிக்கையை ஆதரித்துவந்தார். அதேவேளை, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பையும் ஆதரித்திருந்தார்.

பின்னர் அவர் மாறிவிட்டார். ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து, புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அதற்கு ஒரு வருடத்துக்குப் பின்னரே, புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அந்தத் தடையைக் கொண்டு வருவதிலும் சுவாமி பெரும் பங்காற்றினார்.

இப்போது அவர், புலிகளை அழித்தமைக்காக, மஹிந்தவுக்கு, இந்திய அரசாங்கம் ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும் என்று கூறுகிறார். அவர், இந்தப் பரிந்துரையை இம்முறை மட்டுமல்ல, 2011 ஆம் ஆண்டிலும் செய்தார். அவர், இந்தப் பரிந்துரையை இம்முறை செய்தபோது, தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகள், அதனை எதிர்த்துக் கருத்து வெளியிட்டு இருந்தனர்.

எனவே, மஹிந்தவுடன் இந்திய அரசாங்கம், மீண்டும் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதை, தமிழ் நாட்டுத் தலைவர்கள் அவ்வளவு விரும்ப மாட்டார்கள். அவ்வாறு இருக்கத் தான், தமிழ் நாட்டவரான சுவாமி, இரு தரப்பினருக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த முன்வந்துள்ளார். அல்லது, இந்திய அரசாங்கம் அவரை அந்தப் பணிக்காக பாவிக்கிறது.

இந்திய அரசாங்கம் பழையவற்றை மறந்து, ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, மஹிந்தவுடன் மீண்டும் உறவைப் பலப்படுத்திக் கொள்ள முற்படுவதாக இருந்தால், அதற்கான பிரதான கரணம், இலங்கையில் அரசியல் நிலைமை மாறி வருவதாகத் தென்படுவதேயாகும்.

கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, அது தெளிவாகக் காணப்பட்டது. அத்தேர்தல்களின் போது, தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி மன்றங்களில் 230 க்கு மேற்பட்ட சபைகளின் அதிகாரத்தை, மஹிந்த உத்தியோகப்பற்றற்ற முறையில் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது.

அத்தேர்தல்களின் போது, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 45 சதவீதத்தையே மஹிந்த அணியினர் பெற்றனர். என்றாலும், தேர்தல் முறையிலுள்ள குழப்ப நிலை காரணமாக, மொத்த சபைகளில் 78 சதவீதத்தை அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

வாக்குகளை விட, வெற்றி பெற்ற சபைகளின் எண்ணிக்கை எல்லோரது கண்ணிலும் படுவதால், மஹிந்த அணிக்கே நாட்டில் மக்கள் ஆதரவு இருப்பதாகப் பொதுவானதொரு மக்கள் அபிப்பிராயம் உருவாகியிருக்கிறது. அது இந்தியாவையும் ஆட்கொண்டு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே, அடுத்த ஆட்சியாளர்கள் என்றதொரு தோற்றம், மஹிந்த அணியினரிடம் தென்படுவதால், மஹிந்தவை அரவணைக்க இந்தியா முற்படுவதாக இருக்கலாம்.

அதேவேளை, மஹிந்தவுக்கும் இந்தியாவின் நட்புத் தேவையாக இருக்கிறது. ஏனெனில், இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில், தமிழ் அரசியல் கட்சிகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தும், வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவிடம் இருக்கிறது.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களின் போது, இந்தியாவை பகைத்துக் கொள்வது பாதகமானது என மஹிந்த கருதுகிறார் போலும்.

எனவே தான், தமது அணியினரான விமல் வீரவன்ச, மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், கடந்த வருடம் இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, மஹிந்த, நள்ளிரவில் சென்று மோடியைச் சந்தித்தார். மோடியிடமிருந்து அவருக்கு, அதற்கான அழைப்பேதும் இருக்கவில்லை. அவர், வீரவன்சவின் முகத்தில் அறைந்தாற்போல், தாமாக இந்தியத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்தே மோடியைச் சந்தித்தார்.

அதன் பின்னர் தான், இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அத்தோடு, இந்தியாவுக்கும் மஹிந்தவின் உறவு தேவைப்பட்டது.

அத்தோடு, மஹிந்தவின் சகோதரர் சந்திரா ராஜபக்‌ஷ, கடந்த மாதம் உயிரிழந்தார். அந்த மரண வீட்டைப் பாவித்து, சுப்ரமணியன்சுவாமி இங்கே வந்து, அவரது இந்து மறுமலர்ச்சி அமைப்பான ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ சார்பில், மஹிந்தவுக்குப் புதுடெல்லியில், இலங்கை, இந்திய உறவைப் பற்றிய விரிவுரையொன்றுக்கு அழைப்பு விடுத்தார். அத்தோடு, மோடியைச் சந்திக்கவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

எனவே, இரு சாராருக்கும் இடையே வளர்ந்து வருவது காதல் என்று கூற முடியாது. இது, இலாப நட்டத்தைக் கருத்தில் கொண்ட, வியாபாரமாகவே கருத வேண்டியுள்ளது.