மாதா! பிதா! குரு?

தாய் கடமை தவறினால் அறுசுவை போகும். தந்தை கடமை தவறினால் நல்வாழ்வு போகும். நண்பர் தவறு செய்தால் சமூக அந்தஸ்த்து போகும். ஆனால் ஆசிரியர் தப்புசெய்தால் அனைத்தும் போகும். பசித்த வயிற்றுக்கு புசிக்கத்தராது தாய் தன் நிலை தவறினால் எமக்கு உணவு கிடைக்காது போகலாம். பொறுப்புடன் எம்மை பராமரிக்க வேண்டிய தந்தை கடமை தவறினால் நாம் எதிர்பார்க்கும் நல்வாழ்வு எமக்கு சவாலாகலாம். நண்பர்களின் உன்மத்த செயல், எம்மை ஊரவர் வசைபாடலுக்கு உள்ளாக்கலாம். இத்தனையும் எம்மை தனித்தனியே பாதிக்கும் செயல்களே. ஆனால் எம் அகக்கண் எனும் கல்விக் கண்ணை திறக்கும் ஆசான்கள் நிலை தடுமாறினால், எமக்கு சர்வமும் நாசமே. மாதா! பிதா! குரு! தெய்வம்! எனும் வரிசையில், பெற்றதால் தாய், வளர்ப்பதால் தந்தை என முன்னிலை படுத்தபட்ட போதும், தெய்வத்துக்கு முன், முன்னிலைப் படுத்தப்படுவது குரு. குரு பார்க்க கோடி நன்மை. அப்படியான குருப்பிரமாக்கள் கோலோச்சிய யாழ் மண்ணில் இன்று சில நாசகார நீசர்கள், ஆசிரியர்கள் என்ற போர்வையில் பாடசாலையில் நடத்தும் பாலியல் துன்புறுத்தல் செய்தியால், நாறிக்கிடக்கிறது எம் தாய் மண்.

காலை 7 மணி முதல் மாலை  3 வரை அநேக மாணவர் ஆசான்களின் பார்வையில். சிலர் கூடுதல் வகுப்பு காரணமாய் மேலும் சில மணி நேரம் அவர்கள் மேற்பார்வையில். ஆக ஒரு நாளின் 24 மணி நேர கால அட்டவணையில் உண்ணும் நேரம், உறங்கும் நேரம், களிக்கும் நேரம் தவிர, கூடுதல் நேரம் அவர்கள் ஆசான்களின் பார்வையில். தாயாய், தந்தையாய், நண்பனாய் பழக வேண்டிய அந்த நேரத்தில், எம்மீது ஆளுமை செலுத்தி எம்மை சாதிய எதிர்ப்பாளராய், சமூக அக்கறை கொண்டவராய், காந்தியவாதிகளாய், மாக்சிச வாதிகளாய் மாற்றிய அதே ஆசிரியர்கள், எம்மீது பேரினவாத அடக்கு முறை ஏவப்பட்ட போது சேகுவேராவாக மாறு எனவும் போதித்த காலம், நாம் கடந்து வந்த பாதை. ஆனால் இன்று????

30 வருட யுத்தம் எம் வாசல் கதவை தட்டாமலே திறந்து, எம் அனைத்து வளங்களையும் முள்ளிவைக்காலில் பொசுக்கியபின், நிர்க்கதியாய் நிற்கும் எம் இளையவர்க்கு முன்னேற இருக்கும் ஒரே வழி கல்வி. அறிவுத் தேடல் மட்டுமே இனி எம்மை மீளுருவாக்கும் என்ற நிலையில், வெந்தது பாதி வேகாதது பாதி என பசிக்கு உண்டபின், சீருடையில் ஓட்டமும் நடையுமாய் கல்வி வேட்கையில் வரும் மாணவிகள் மீது கலவி வேட்டையன்கள், ஆசான்கள் என்ற போர்வையில் நடத்தும் அசிங்கங்கள் அடுத்தடுத்து அண்மைய செய்தியாய் பரவிவருகிறது. நிர்க்கதியாய் நிற்கும் அவர்களின் முறைப்பாடுகளை பூசி மெழுகும் அதிபர்கள் மட்டுமல்ல, அவ்வாறான காமராசாக்களுக்கு மாணவியரை ஏற்பாடு செய்யும் ஆசிரிகைகள் பற்றியும் அறியக்கிடக்கிறது.

தான் கற்ற கல்வி அறிவை சமூகத்தின் பயனுக்காக மாற்றும் மூத்த தொழில் ஆசிரியர் தொழில். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் எனும் நிலைக்கு ஆசான்கள் போற்றப்படுவர். எந்த ஒரு சமூகமும் முன்னேறிய சமூகம் என போற்றப்படுவது அதன் கல்வி அறிவு நிலைகொண்டே. அந்த சமூக மாற்றத்தின் அச்சாணியே ஆசிரிய பெருந்தகைகள் தான். தன்னிடம் கற்கும் மாணவரை அவயத்து முந்தியிருக்க செய்யும் வித்தை தெரிந்த வித்தகர்கள் ஆசிரியர். இன்று நான் வைத்தியன், நான் எந்திரி, நான் சட்டத்தரணி, நான் விஞ்ஞானி, நான் கணக்காளன், நான் கல்வியாளன், என பெருமைகொள்ளும் அத்தனை நான் களையும் அந்த உயரத்துக்கு உயர்த்திவிட்ட ஏணிகள் தான் அவர்களுக்கு ஏடு தொடக்கம் பல்கலை வரை போதித்த ஆசான்கள்.

அப்படி எம் சமூகத்தை உருவாக்கிய அவர்களின் மத்தியில், இன்று சில ஊடுருவிகள் கல்வி நடவடிக்கையில், கலவி சில்மிஷம் புரியும் கேவலமான ஈனப்பிறவிகளாக எம் சமூகத்தில் உலவ நாம் அனுமதிக்கலாமா?. கல்வி அதிகாரிகள் முதல் பாடசாலை கடைநிலை ஊழியர் வரை, ஒருசிலரின் அசமந்த போக்கால் தான் இது இந்தளவு தூரம் பல்கி பெருகியது. 3௦ வருட யுத்தத்தால் ஏற்ப்பட்ட இடப்பெயர்வு எம் கிராம, ஊர் கட்டமைப்பையே மாற்றிப்போட்டு விட்டது. அன்று யார் யாரின் உறவினர் என்பது மட்டுமல்ல, கல்லூரி அதிபர்கள், கற்பிக்கும் ஆசிரியர் பற்றிய விபரமும் ஊரவர் அறிவர். இன்று நிலைமை அப்படியல்ல. யாழின் பிரபல களியாட்ட விடுதிகளுக்கு சென்று பாருங்கள். அங்கு சில ஆசிரியரும் கூடவே மாணவர்களும் இருப்பர்.

சில மாணவர்களின் பல தேவைகளை சிரமேற்கொண்டு செய்ய காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு, பிரதியுபகாரம் செய்யும் ஒன்றுகூடல் இடமாக, குடா நாட்டில் பல கேளிக்கை விடுதிகள் தம் பங்களிப்பை செய்ய, புதிது புதிதாக தோற்றம் பெறுகின்றன. பெரும்பாலும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து, இன்று மாண்ணை வளமாக்குவதாக வந்திருப்பவர் முதலீடுகள் அவை. வெளிநாட்டில் அது உழைத்த பணமா? அல்லது மட்டையில் சுருட்டியபணமா? அல்லது சீட்டு பிடித்து ஆட்டையை போட்ட பணமா? என்பது அவற்றின் தரம் தராதம் பார்த்து அனுமானிக்கலாம். நேர்வழியில் கொண்டுவந்த பணத்தை, கேளிக்கை விடுதிகள் நடத்தி எம்மவரை சீரழிக்க விரும்பாதவர்கள் பலர் உண்டு. ஆனால் குறுக்கு வழியில் புதுப்பணம் கண்டவர்களின் குறுக்கு புத்தி, சில ஆசான்கள் எனும் ஆசாடபூதிகளின் அனுசரணையுடன் எம் சமூகத்தை சீரழிக்கிறது.

நீண்ட நெடிய யுத்தம் வேலையில்லா பிரச்னையை பூதாகாரமாக்கியது. யுத்த சத்தத்தின் மத்தியிலும் படித்து பட்டம் பெற்ற பலர் வேலையற்று காத்திருக்க, சில காவடி தூக்கிகளுக்கு, அரச உத்தியோகங்கள் பிரதி உபகாரமாக கிடைத்தது. அரசியல் அடிவருடிகளில் சிலர் ஆசிரிய சேவைக்கும் உள்வாங்கப்பட்டனர். தெரிவே தவறு. இவர்களை தெரிந்தவர்களும் தவறானவர்கள் என்றால், சரியானது எப்படி சபையேறும்?. கற்பித்தலை தொழிலாக மட்டுமல்ல, சேவையாகவும் செயல்ப்படுத்தும் பல ஆசிரிய பெருந்தகைகளின் செயலால், இன்றும் எம் கல்வி நிலை மேம்பட்டு நிற்க, இந்த சில்மிச ஊடுருவிகளின் கலவி சேட்டை, மாணவர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. பாலர் வகுப்பு முதல் பல்கலைகழகம் வரை பதவி நிரப்பல் அரசியல் மயப்படுத்தபட்டதால், மந்திரிகளின் மன்மத அம்புகளான அடிவருடிகள் ஆட்டம் போடுகின்றனர். தலை போகும் வழி தானே வாலும் நுழையும்.

விடுதலை என்ற பெயரில் எம் அனைத்து ஒழுக்க நெறிகளையும் உடைத்தெறிந்து புதுயுகம் படைப்போம் என புறப்பட்ட பலர், இன்று புலம்பெயர் தேசங்களில் தஞ்சம் புகுந்து விட்டனர். சாதியம் ஒழிக்க போராடினோம். கூடியவரை வெற்றியும் கண்டோம். பெண்ணியம் பற்றி பேசினோம். பெருமைப்படும் அளவிற்கு மாற்றங்களும் கண்டோம். பிரதேசவாதம் நீங்க அணிதிரண்டோம். அதிலும் கணிசமான சாதனை புரிந்தோம். இன விடுதலை போரை முன்னெடுத்தோம், எமக்குள் நாமே மோதி அதை மீண்டும் எதிரியின் காலில் போட்டுடைத்தோம். இன்று ஓன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை தந்தால் ஏற்க தயார் என ஐ நா வரை சென்று காவல் கிடக்கிறோம். ஆனால் மண்ணில் எம்மவரே எம் பிஞ்சுகளை குதறும் கேவலம் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாது, மாகாண சபையில் கிடைக்கும் சலுகைக்கும், பாராளுமன்றத்தில் பெறக்கூடிய பேறுக்கும், மந்திரி சபையில் மைத்திரி சேர்ப்பாரா என்ற வாலாட்டல்களுக்கும், காத்திருக்கும் வரை இந்த வக்கிரங்கள் தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும்.
– ராம் –