மாறி வரும் நம் மரபுகள்-கலியாணம்

என் சிறு வயது முதல் பல கலியாண வீடுகளை எங்கள் சேனையூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தில் பார்த்திருக்கிறேன்.எனக்கு நினைவில் உள்ள முதல் கலியாண வீடு அப்புச்சியின் தங்கச்சி சின்னமாமியின் கலியாணம்.அந்த வீட்டு முற்றத்தில் பரப்பப் பட்ட வெண் மணலும் வாழை கமுகம் தென்னம் குருத்து அலங்காரமும் கொட்டகையும் வரிசைக் கால்களும் நிலவொளியில் பட்டுத்தெறிக்கும் அழகாய் பூத்த நாடகள்.


அரியதரம் ,பயத்தம் பலகாரம்,முறுக்கு ,சோகி தயிர் வாழைப் பழம் என என் மச்சி மாருடன் தின்று தீர்த்த பொழுதுகள்.
கலியாண ஆயத்தங்கள் எங்கள் ஊரில் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கி விடும்.வளவை துப்பரவாக்குதல் ,வீட்டுக்கு வெள்ளை அடித்தல் ,நல்ல நாள் பார்த்து கொட்டகைக்கு கம்பு தடி வெட்ட காட்டுக்கு போதல்,பின் கொட்டகை போடல், சோற்றுக்கு நெல் அவித்தல்,ஒரு நாளில் மாவிடித்தல்,மறு நாளில் பலகாரம் சுடுதல் என எல்லா வேலைகளையும் உறவினர் கூடி செய்வர்.கலியாணம் எங்கள் ஊரில் பெரும் கொண்டாட்டம்.ஊரவர் எல்லோரும் கூடும் ஒரு பெரு விழா அது.

எங்கள் ஊர் கலியாணங்களில் சாப்பாடு விசேசமானது மறிக்கடாக் கறி இல்லாமல் கலியாணம் இல்லையெனலாம் சங்க கால மரபும் அதுதான்.சாமத்தில் கலியாணம் நடந்தாலும் ஆட்டிறச்சி கறியோடுதான் கலியாண விருந்து அமையும்.சொந்த காரர்களே கூடியிருந்து சமைப்பர். பந்தி வைத்து பரிமாறப் படும் பாய்கள் விரித்து அதன் மீது வெள்ளை சீலைகள் போட்டு சம்மாணமிட்டு உட்கார்ந்து வாழையிலையில் பரிமாறப் படும்.ஆட்டிறச்சி கறியுடன் தொடங்கும் சாப்பாடு தயிரும் வாழைப் பழம் கலந்த இனிபாய் முடியும்.

இன்றய கலியாண வீடுகள் ஒரு நாளிலேயே முடிந்து விடுகின்றன கலியாண மண்டபத்தில் சாப்பாடு கொடுப்பதோடு சரி .ஆனால் முன்னய நாட்களில் தொடர்ந்து பல நாட்கள் மாப்பிள்ளை விடு பெண் வீடு என இரண்டு வீடுகளிலும் கலியாணச் சாப்பாடு தொடரும்.நெருங்கிய உறவினர்கள் கலியாண வீட்டிலேயெ பல நாட்கள் சாப்பிடுவர் அன்னியோன் யமான உறவு.

அனேகமான கலியாணங்கள் இரவு வேளையில்தான் நடக்க்கும் மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் காது குத்து சடங்கு.பெண் வீட்டில் நடக்கும் தண்ணி வார்க்கும் சடங்கு .கலியாணச் சடங்கு மாப்பிள்ளை வீட்டு நாலாம் சடங்கு. என அமர்க்களப் படும் கலியாண விழாக் காலம்.

மாப்பிளை பெண்ணை ஊர்வலமாக அழைத்து செல்வர் இது அனேகமாக நாலாம் சடங்குக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்லும் போது நடக்கும்.மேற்கட்டி நில பாவாடை வெடிக் கொழுத்தல் என அமர்க்களப் பட வாயில்கள் தோறும் பூரண கும்பம் வைத்து ஆராத்தி எடுத்து வாழ்த்துவர்.

இன்று இவையெல்லாம் மறைந்து மரபுகள் மாறும் காலமாகிப் போனது.

கலியாணத்தில் முக்கியப் படுவது சாப்பாடு இன்று வேறு இனத்தவர்கள் யாரோ சமைக்க ,சாப்பாட்டு முறைமையே மாறிப் போய் நம் மரபு சார் உணவுகளும் கறி வகைகளும் மறைது போயினவா. நான் உலகில் பல நாடுகளுக்கும் பயணம் பண்ணியுள்ளேன் நம் சாப்பாடு போல் எதுவுமே வராது.

அன்றய கலியாண வீடுகளில் கறிவகை நிறைய இருக்கும் .ஆட்டிறச்சி குழம்பு,பூசணிக்காய் கறி,கத்தரிக்காய்,பயத்தங்காய்,பருப்பு, ஏதாவது பொரியல்,இன்னும் சில கறிவகை ,எலும்பு போட்டு ஒரு சொதி அதற்கு நிகர் அதுவேதான்.தயிர் சீனி வாழைப்பழம் என அறு சுவை உணவு.

நம்மவர்கள் போல் யாராலும் சமைக்க முடியுமா.எத்தனை வகையான உணவு நமக்கு.என் ஆச்சி என் மாமிமார் எல்லோரும் நல்ல சுவையாக சமைப்பார்கள்.ஊரில் கலியாண வீடென்றால் ஆச்சியயை அழைத்து பதம் பார்க்க சொல்வார்கள்.அது போலவே என் பெரியமாமி என்கிற யோகாம்பிகை,கறுத்த மாமி என்கிற செளந்தரம் ஏன் சின்ன மாமி கல்யாண சமையலுக்கு பேர் போனவர்கள்.

நம்மவர்கள் நம் தனித் தன்மைகளை இழந்து போகின்றனரா அவர்களை அறியாமலேயே அவர்கள் மரபுகளை இழக்கின்றனர்.இன்று உலகம் முழுவதுமுள்ள இனங்கள் தம் மரபுகளை தேடி பாதுகாக்க முயல்கின்றன் .ஒரு சமூகத்தின் அடையாளங்களில் உணவு முக்கியமான ஒன்று.எல்லாவற்றிலும் அடிமைப் பட்டிருக்கும் நாம் நமக்கான உணவுப் பழக்கங்களை மறந்து வேறு வகையான உணவுகளுக்கு அடிமைப் பட்டிருக்கிறோமா?

எங்கே போகும் நம் சமூகம்?

(Balasingam Sugumar)