மீண்டுமொருமுறை முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துச் செல்லாதீர்கள்.

அன்று கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட விஜிதரன் பல்கலைக்கழக மாணவன் இல்லையா?

இக் காணாமலாக்கலுக்கு காரணமான அரசியல் எது?

கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட விஜிதரனை விடுதலை செய்யும்படி எழுந்த மக்கள் குரல்வளையை திருகி எழுந்த குரல்களை அச்சுறுத்தி அடக்கிய அரசியல் எது?

விஜிதரனை விடுதலை செய்யும்படி சாகும்வரை உண்ணாவிரதமிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு மரணதண்டனை தான் பரிசு என பட்டியல் வைத்து அந்த பட்டியலில் இருந்த பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனை பின்தொடர்ந்து நடுத்தெருவில் நாயைப்போல சுட்டுக்கொன்றவர்கள் அரசியல் எது?

விமலேஸ்வரன் என்ற பல்கலைக்கழக மாணவனைக் கொலை செய்த அரசியல் எது?

விமலேஸ்வரனைச் சுட்டுக்கொன்ற பின் பத்திரிகைகளில் அச் செய்தி வராதபடி யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகைகளை மிரட்டி விமலேஸ்வரன் கொலைக்கு எந்த முக்கியத்துவமும் தராதபடி பார்த்து ஒரு அனாதைப்பிணமாக அன்று தெருவில் கிடக்க வைத்தவர்கள் இன்று வாய்கிழியப் இவர்களால் பேசப்படும் ஊடக சுதந்திரத்தை அடக்கியது எந்த அரசியல்?

பல்கலைக்கழக மாணவர்களான செல்வி என்ற செல்வநிதி தியாகராசா, தில்லை போன்றவர்களைக் கடத்தி கொடுமையான சித்திரவதைகள் செய்து உயிரை எடுத்தது எந்த அரசியல்?

அதே அந்த அரசியலின் நீட்சி தான் இன்றும் தொடர்கிறது.

இன்றோ காணாமலாக்கப்பட்டவர்கள், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை, ஊடக சுதந்திரம், பல்கலைக்கழக மாணவர்கள் மேலான தாக்குதல்கள், கொலைகள் என இன்னும் இன்னும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுகின்ற சாதாரண மக்களையும் மீறி அன்று மாணவர்களைப் பலியெடுத்த அதே அரசியல் தான் எந்த மாறுதலும் இல்லாமல் உறுமுகின்றது.ஒப்பாரி வைக்கின்றது. கர்த்தால் நடாத்துகின்றது இன்று நடாத்தப்பட்ட மாணவர்கள் படுகொலைக்காக.

நீங்கள் வரித்துக்கொண்ட அன்றும் இன்றுமான அரசியல் மாணவர்களைப் படுகொலை செய்யலாம். கடத்தலாம். பத்திரிகைகளை அச்சுறுத்தி பணியவைத்து ஊடக சுதந்திரமா அது என்ன என்று கேட்கலாம் துரோகிகள் என்று ஆதரித்து குதூகலிக்கலாம்.

இன்று எங்காவது பிணம் விழுமாக என்று காத்திருந்து, அதனை தங்கள் அதே அரசியலைத் தொடர்வதற்கு, காவி இழுத்துச் சென்று கண்ணீர் உகுத்தி, கவிதை எழுதி தமிழன்டா என்று உசுப்பேத்துவதற்கு தூக்கம் இன்றி அலைகிறது ஒரு கூட்டம். அன்றைய நாட்களில் கொல்லப்பட்டவன் தமிழனா அப்போ ஒற்றைச் சொல்லில் அவன் நிச்சயம் ஒரு துரோகி அல்லது சிங்களவனுக்குப் பிறந்தவன் என்று ஒருபடி மேலே போய் பெற்ற தாயையும் இழிவுபடுத்திவிட்டு பேசாமல் தன் காரியம் பார்த்த அன்றைய அரசியலின் அதே கொடூரம் இன்று நீதி கேட்கலாம் தவறில்லை ஆனால் எல்லாப் படுகொலைக்கும் நீதி கேட்க வேண்டும்.

எந்த அரசியல் உங்களுக்கு இனிப்பானதோ அந்த அரசியலில் நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கும் நீதி கேட்க வேண்டும். அதை விடுத்து உங்களது இனவாத அரசியலுக்குப் பின் மக்களை அணிதிரட்ட இன்னும் பிணங்கள் விழுமா எனப் பாத்திருக்கும் உங்களுக்குப் பின்னால் மீண்டுமொருமுறை மக்களை முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துச் செல்லாதீர்கள்.

(NDPFRONT.COM)