மீயுயர் சபையிலும் வரம்பு மீறும் வாய்மொழி துஷ்பிரயோகம்

(மகேஸ்வரி விஜயனந்தன்)

வீடுகள், தொழில் நிலையங்கள், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவது சாதாரணமாகிவிட்டது என்பதை விட அனைவருக்கும் பழகிய ஒன்றாகவும் போய்விட்டது.

ஆனால் ஒரு நாட்டின் மீயுயர் சபை அதிலும் பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை இயற்றும் இடத்தில், பெண் உறுப்பினர்கள் வாய்மொழி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமைமைய எவ்வகையிலும் எவரும் அனுமதிக்க முடியாது.

பெண்களைப் பாதுகாக்க பல்வேறு சட்டதிட்டங்களை இயற்றும் மீயுயர் சபையிலேயே இந்த நிலை என்றால், ஏனைய இடங்களில் பெண்கள் எவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளலாம். துஷ்பிரயோகம் என்பது உடல் உள ரீதியானது மாத்திரமல்ல. வாய்மொழி ரீதியான துஷ்பிரயோகமும் இதில் பிரதானமாக உள்ளடங்குகின்றது.

அதாவது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக நடைபெற்று வரும் வாத விவாதங்களில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையிலேயே,எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி தொடர்பில், பட்டும் படாமலும் புரிந்தும் புரியாமலும் சில இரட்டை அர்த்தம் கொண்ட கருத்துக்களை ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி சபையில் முன்வைத்தார்.

இவரது உரையின் போது, இவர் உரையாற்றிய தொனி, கூறிய கதை, சுட்டிகாட்டிய உதாரணங்கள் என்பவற்றுக்கு மெய்மறந்து ஆளும்கட்சியினர் மேஜை மீது தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் வந்த ஆர்வக்கோளாறே இவரை அன்றைய தினம் அதிகம் அதிகம் பேசத் தூண்டியது. இதனால் தான் தமது வாயிலிருந்து எவ்வாறான வார்த்தைகள் வெளிவர வேண்டும் என்பதை இவர் மறந்து விட்டார்.

எனினும் இவரது உரை பெண்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்து, திஸ்ஸ குட்டியாராச்சி உரையாற்றி முடித்ததுமே, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தமது எதிர்ப்பை முன்வைத்தார்.

ஆனால் அப்போது சபைக்கு தலைமைத் தாங்கிய ஆளுங்கட்சியின் உறுப்பினரான அஜித் ராஜபக்ஸ, திஸ்ஸ குட்டியாராச்சியின் உரையில் தவறு இருப்பது போன்று தனக்கு தெரியவில்லை. இருந்தால் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லுங்கள் என்றார்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர், இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளேயிடம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன முறைப்பாடு ஒன்றை செய்தார்.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே சபாநாயகரின் கவனத்துக்கு கடிதம் மூலம் கொண்டு வந்தார்.

“சட்டத்தை உருவாக்கும் இடமொன்றில் அதற்கு பங்களிக்கும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பெண்கள் அந்த இடத்திலேயே வாய்மொழி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார் எனின், இதன்மூலம் ஒட்டுமொத்த சமூகத்தின் சீரழிவும் புலப்படும்“.

அதேவேளை, பொது இடங்களில் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் உயரிய நிறுவனம் ஒன்றில் பெண் உறுப்பினர் ஒருவருக்கு எதிரான, வாய்மொழி துஸ்பிரயோகம் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே சபாநாயகரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.

அத்துடன், அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவான மட்டத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 12 பெண் உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்தாடல்கள் இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து திஸ்ஸகுட்டியாராச்சி எம்.பியின் உரை தொடர்பில் தான் கவலையடைவதாகவும் அதியுயர் சபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார்.

“இதுபோன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாதிருப்பதை உறுதி செய்ய ஆளும், எதிர்க்கட்சி பிரதமக் கொறடாக்கள் இது தொடர்பில் இருதரப்பு எம்.பிகளுக்கும் அறியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்”.

பெண்களை அவமதிக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து இடம்பெற்றால், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் எனவும் எச்சரித்தார்.

ஆனால் அதன் போது கூட திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி தனது கருத்தில் எவ்வித தவறுகளும் இல்லை. தான் சரியான கருத்துகளையே முன்வைத்தேன். அதை கேட்பவர்கள் தவறான முறையில் கேட்டால், அதற்கு தான் பொறுப்பில்லை என எகத்தாளமாக பதிலளித்தார்.

இந்த நிலையில், பாராளுமன்றத்துக்குள்ளேயே எதிர்கட்சியினரால் திஸ்ஸ குட்டியராச்சி மீது தாக்குதல் நடத்த முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டதுடன், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான 25ஆம் திகதி “பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து“என்ற ஸ்டிக்கர் அணிந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பினை வெளிகாட்டியிருந்தனர்.

அத்துடன், பாராளுமன்றத்தில் மோசமாக செயற்பட்டுகொண்டிருக்கும் ஆளுங்கட்சி எம்.பி திஸ்ஸ குட்டியாராச்சியின் மனநலம் தொடர்பில் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல சபையில் கோரிக்கை விடுத்ததுடன், திஸ்ஸ குட்டியாராச்சிக்கு சபாநாயகர் தண்டனை வழங்கவில்லை என்றால், இந்த விடயத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்வோம் எனவும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தாலும் ஆளுங்கட்சியிருந்து எவரும் இது குறித்து, வாய் திறக்கவில்லை என்பது ஆச்சிரியத்தை வரவழைக்கவில்லை.

மேலும் ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் அவரது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் அவரது புத்திசாலித்தனம் மற்றும் கல்வித்தரம் எவ்வாறு என்பதை திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் பாராளுமன்றத்தில் உறுதிபடுத்தியுள்ளதாக கபே அமைப்பும் சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மையில் உலகின் முதலாவது பெண் பிரதமரையும் நிறைவேற்று அதிகாரமுடைய பெண் ஜனாதிபதி, பெண் நீதியரசர் உள்ளிட்டோரை உருவாக்கிய எமது நாட்டின் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது ஆண்களை விட 60 சதவீதம் குறைவாதகவுள்ளது. உண்மையில் பெண்களுக்கு அரசியலில் பங்களிப்பு செய்வதற்கு ஆசை இருந்தாலும் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு பயந்தே தமது அரசியல் ஆசைகளை அடியோடு மறந்து விடுகின்றனர்.

“ பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே ஒழிக்கவும்” எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டாலும் வருடங்தோறும் உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்நாளில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதுடன், தற்போதைய கொரானா தொற்று உள்ளிட்ட இன்னோரன்ன காரணங்களால் ஏதோ ஒருவகையில் பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகலாவிய ரீதியிலான கொரோனா முடக்கத்துக்குப் பின்னர், 13 நாடுகளை அடிப்படையாக வைத்து, ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த ஆராய்ச்சிக்கு அமைய ஒவ்வொரு மூன்று பெண்களில் இருவர் சில வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாகவும் குறிப்பாக தினமும் 137 பெண்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுவதாகவும் ஐ.நாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் 10 பெண்களில் ஒருவர் மாத்திரமே பொலிஸ் அல்லது வேறு துறையினரை நாடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சர்வதே மகளிர் தினம், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் தினம் என எத்தனை தினங்களை அனுஷ்டித்தாலும் அனைத்து வகையான பெண்களும் துஷ்பிரயோகம் மற்றும் நிர்ப்பந்தம் இல்லாத வாழ்க்கையை அனுபவிப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு நாட்டிலும் முயற்சி செய்யும் போதே, இவ்வாறு அனுஷ்டிக்கப்படும் தினங்களின் பலனை பெண்கள் அடையமுடியும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.