முட்டுச் சந்துக்குள் முஸ்லிம் சமூகம்

முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்காத ஒரு மடையர் கூட்டம் மேற்கொண்ட, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதச் செயலால், ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இத்தனை அவலங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

முஸ்லிம்களின் அரசியல் வெகுவாகப் பலமிழந்து இருக்கின்றது. மார்க்க அடிப்படையிலான சபைகளும் சிவில் சமூகக் கட்டமைப்புகளும் மௌனித்துள்ளன. முஸ்லிம்களை வழிநடத்துவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் தலைமைகளும் உலமா சபை போன்றனவும் அமைதி பேணும் நிலையில், யாருடைய வழிகாட்டுதலும் தயவும் இன்றி, முஸ்லிம் சமூகம் தம்பாட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

‘மேய்ப்பர்களைத் தொலைத்த ஆடுகள்’ போலத்தான், முஸ்லிம் சமூகத்தின் கதியும் ஆகியிருக்கின்றது. தகுதியற்ற அரசியல், மத, சமூகத் தலைமைத்துவங்கள் மட்டுமன்றி, எந்தவோர் அடிப்படையிலும் தலைமைத்துவக் கட்டுப்பாட்டைப் பேணாத முஸ்லிம் வெகுஜனங்களும் இதற்குப் பொறுப்பாளிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான நெருக்கடி, 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஆரம்பித்த ஒன்றல்ல! 1900ஆம் ஆண்டுகளில் இருந்தே, முஸ்லிம்கள் இனத்துவ நெருக்கடியை எதிர்கொண்டு வந்தனர். இது, ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு முகம் எடுத்திருந்தது. இவ்விடத்தில், முஸ்லிம்கள் தரப்பிலும் தவறுகள் உள்ளன என்பதைக் குறிப்பிடவேண்டும்.

யுத்தம் முடிந்த பிறகு, அதாவது ‘பல்பிடுங்கிய பாம்பாக’ தமிழர்களைப் அடக்கிய பிறகு, முஸ்லிம்களை நோக்கி இனவாதம் பாய்ந்தது. அது வெறும் இனவாதம் மட்டுமல்ல; அதற்குப் பின்னால் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் நலன்கள், பிராந்திய மதவாதம், முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் திட்டம் எனப் பல விடயங்கள் இருந்தன.

ஆனால், ஏனைய சமூகங்களின் துணையுடன், அவற்றையெல்லாம் முஸ்லிம்கள் சமாளித்துக் கொண்டிருந்த வேளையில், ‘சஹ்ரான் கும்பல்’ செய்த மிகக் கேவலமான காரியம், முஸ்லிம் சமூகம் மீதான சந்தேகப் பார்வையை ஏற்படுத்தியதுடன், முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்குதல்களை எதிர்த்துப் பேச முடியாத நிலையையும் உருவாக்கியது.

இப்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அறிக்கையை ஆராய்ந்த உப குழுவும் தமது நிலைப்பாட்டை முன்வைத்தாயிற்று. இந்தப் பின்னணியில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வறிக்கையில் முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட சில விடயங்களுக்கு மேலதிகமாக, முன்னாள் ஆட்சியாளர்கள், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உள்ளடங்கலாக, பொதுபல சேனா போன்ற அமைப்புகள் மீதும் சுட்டுவிரல் நீட்டப்பட்டிருக்கின்றது.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் போன்ற உயரிய பொறுப்புதாரிகள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து ஓடுவதற்கான எல்லாக் கதவுகளும் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதுபோல, பொதுபலசேனாவைக் காப்பாற்றி, பின் கதவாலேனும் அனுப்பி வைப்பதற்கு அரசாங்கத்தில் உள்ளவர்களே, பகிரத பிரயத்தனங்களை எடுத்து வருகின்றனர்.

மறுபுறத்தில், இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாக இருவரின் பெயரை அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வளவு நாளும், சஹ்ரானை முக்கிய நபராகக் காட்டியும், இத்தாக்குதலுக்குப் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள் இருக்கலாம் என்றும் கதைகள் கூறப்பட்டுவந்தன.

இந்நிலையில், அரசாங்கம் திடுதிடுப்பென இருவரின் பெயரைக் கூறியமை, பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளை மேலும் இழுத்துக் கொண்டு செல்லாமல், இக் ‘கோப்பை’ மூடிவிட்டு, அடுத்த வேலையைப் பார்ப்பதற்கு எத்தனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், முஸ்லிம் சமூகம்தான் ஒரு முட்டுச் சந்துக்குள் மாட்டிக் கொண்டுள்ளது. யார் தப்பித்தாலும், யாருக்கு விதிவிலக்குக் கொடுக்கப்பட்டாலும், முஸ்லிம்கள் விடயத்தில் மாத்திரம் நெகிழ்வுப் போக்கொன்று கடைப்பிடிக்கப்படும் என்ற நம்பிக்கைகள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில், அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஆகியவை தமிழ்ச் சமூகத்தின் மீதான கெடுபிடிகள், வகைதொகையற்ற கைதுகளுக்கு வழிகோலியதுடன், தமிழர் மீது ஒருவித நெருக்குவாரத்தையும் பிரயோகித்தது.

அதுபோலவே, அண்மைக்காலத்தில் பயங்கரவாத ஒழிப்பு சார்ந்ததாக முன்னெடுக்கப்படுகின்ற சட்ட ஏற்பாடுகள், நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என்றாலும், இப்பயங்கரவாத அல்லது மதவாதச் செயற்பாடுகளுடன் கொஞ்சமேனும் தொடர்பற்ற அப்பாவி முஸ்லிம்கள் மீதும், ஒருவகையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இலங்கையில் வாழும் எந்தச் சமூகத்தினரோடும் முரண்பட வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லை. புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் ஆயுத அடக்குமுறையைப் பிரயோகித்த போதும், சிங்கள இனவாதிகள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டபோதும், முஸ்லிம் சமூகம் வன்முறையைக் கையிலெடுக்காமல் பொறுமையாகவே இருந்தது.

இப்படியான ஒரு சூழலில், ஏதோவொரு நோக்கத்துக்காக இஸ்லாமிய மத அடையாளத்துடன், அப்பாவி மக்களைப் பலியெடுத்த பயங்கரவாதிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்; அவர்களின் வேர்களும் கிளைகளும் கண்டறியப்பட வேண்டும்.

‘தௌஹீத்’ அல்லது வேறு ஏதேனும் அடைமொழியுடன் ஆளுக்கொரு மதக் கொள்கையை அறிமுகப்படுத்தி, தெளிவை ஏற்படுத்துகின்றோம் என்ற பெயரில், பெரும் குழப்பத்தை உண்டுபண்ணியவர்கள், சிங்கள மக்களது மத நம்பிக்கையை பொதுவெளியில் விமர்சித்தவர்கள், கடும்போக்குவாத கருத்துகளை விதைக்கும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தோர், அவர்களுக்குத் தெரிந்துகொண்டே உதவி செய்தவர்கள் என, இந்தச் ‘சங்கிலி’யுடன் தொடர்புடைய அனைவரும், சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

உயிரிழப்புகளை ஏற்படுத்தியது ஒருபுறமிருக்க, முஸ்லிம் சமூகத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் காரணமாக அமைந்தமைக்காகவும் கூட, இந்தப் பேர்வழிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும், உண்மையில் குற்றமிழைத்திருந்தால் அவர்களுக்காக முஸ்லிம்கள் வக்காளத்து வாங்கப் போவதும் இல்லை.

ஆனால், இங்குள்ள பிரச்சினை அதுவல்ல! உண்மைக் குற்றவாளிகளையும் சூத்திரதாரிகளையும் கண்டுபிடிப்பதற்குக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காலப்பகுதியில், அவற்றை முழுமையாகச் செய்யாமல், நீதியை நிலைநாட்டல் என்ற தோரணையில், முஸ்லிம் சமூகத்தின் மீது உளவியல் நெருக்கடி ஒன்றைப் பிரயோகிக்க முனைவதும், அதனூடாக அச்சமூகத்தைப் பலவீனப்படுத்துவதுமே அரங்கேற்றப்பட்டு வருகிறது.

ஆனால், இத்தனை நடந்து கொண்டிருக்கின்ற போதும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிவில் அமைப்புகளும் சமயத் தலைவர்களும் வாயைத் திறக்க, நல்ல நேரம் வரும்வரை காத்திருப்பது, பெரும் வருத்தம் தரும் விடயமாகும்.

தமிழ் அரசியல் தலைமைகளைப் போல, முஸ்லிம் அரசியல்வாதிகள் தம்மை புடம்போட்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், முக்கிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டமை, மற்றைய முஸ்லிம் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு செய்தியை மறைமுகமாக உணர்த்தியிருக்கின்றது.

அவர்களுக்கு, ‘தமக்கும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு விடுமோ’ என்ற அச்சம், உள்ளூரத் தொற்றிக் கொண்டுள்ளது. ஆகவே, “அரசாங்கத்துடன் இருந்தால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு” என்று கூறியவர்களும், “சஜித் அணிக்கு வாக்களியுங்கள்” என்று கூறிய முஸ்லிம் அரசியல்வாதிகளும் பெருமளவுக்கு ‘சைகை’ மொழியிலேயே இப்போது பேச விரும்புகின்றனர்.

சாதாரண காலத்திலேயே வாயைத் திறப்பதற்குப் பயப்படுகின்ற, எதிர்த்துப் பேசினால் தமது வரப்பிரசாதங்களில் ஏதாவது குறைந்து விடுமா என்று நினைக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, இது நல்ல சாதகமாகப் போய்விட்டது. அதுபோலவே, சமூகத்துக்காகக் குரல்கொடுத்து வந்த சிவில் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் அச்சத்தின் காரணமாக, அடக்கி வாசிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

கத்தோலிக்க சமூகத்துக்காக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பேசுவதுபோல, பௌத்த மக்களுக்காக பௌத்த பீடங்கள் குரல்எழுப்புவதுபோல, முஸ்லிம்களுக்காகப் பலமான ஒரு மதத் தலைமைத்துவம் இல்லாது போயுள்ளது. ஆனால், அப்படிப் பேசினால், மறுதரப்பு அவரை எந்தக் கோணத்தில் பார்க்கும் என்பதும் நாம் அறியாததல்ல.

எனவே, உலமா சபையும் மதப் பெரியார்களும், நியாயத்தைக் கூடப் பேசாது தவிர்த்து விடுகின்ற சூழல் உருவாகியுள்ளது. அத்துடன், எவரையும் நல்லவர் என நம்பி, குரல்கொடுக்க முடியாத யதார்த்தம் உள்ளது. ஏனெனில், ‘எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கின்றது’ என்று பிடிபடும் வரைக்கும் முஸ்லிம்களுக்கே தெரியாது.

இப்படியாகச் சாதாரண முஸ்லிம்களைச் சுற்றி, பின்புலமொன்று கட்டமைக்கப்பட்ட பிறகே, இந்த உளவியல் நெருக்குவாரங்களும், கெடுபிடிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு வித்திட்டவர்கள், ‘முஸ்லிம்கள்’ என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, தேவாலயங்களைப் பலிபீடங்கள் ஆக்கிய கயவர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாததல்ல!

எனவே, அரசாங்கத்தை மட்டும் குற்றம் சொல்ல முடியாது என்பதையும் முஸ்லிம்கள் அறிவார்கள். ஆனால், பயங்கரவாதிகளைத் தண்டிக்கின்ற அதேநேரத்தில், இச்சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு, பலவீனப்பட்டுள்ள சாதாரண முஸ்லிம் மக்களைப் பிரித்தறிந்து, வாஞ்சையுடன் கையாளுமாறே வேண்டி நிற்கின்றனர்.