முன் அழைப்பும் பின் இழுப்பும்

அலங்காநல்லூர் என்ற ஊரின் பெயரைத் திரும்பத் திரும்ப ஊடகங்களின் ஒலியாகக் கேட்கும்போது, “தலையாலங்கானம்” என்ற சங்ககால இடம்பெயர் இதுதானோ என்று மனம் நினைக்கத்தொடங்கிவிட்டது. தனது இளம் வயதில் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் எதிரிகளை வென்ற வரலாற்றை விரிவாக, அவனைப்பாடிய புறநானூற்றுப் புலவர்களின் பாடல்கள் காட்டுகின்றன. அவனது முன்னோன் ஒருவரின் பெயருக்கு முன்னால் “ ஆரியப்படை கடந்தவன்” என்ற முன்னொட்டு இருப்பதும் நினைவிலிருந்து தப்பவில்லை.

பொங்கலன்று முளைவிட்ட போராட்டக் கங்கு அலங்காநல்லூரின் வாடிவாசலுக்குள் அணைந்துவிடாமல் தடுத்தவை முகநூல், வாட்ஸ்- அப் போன்ற சமூக ஊடகங்கள். அதையே தமிழகத்தின் நகர்களெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தவை 24 மணிநேரமும் செய்தி சொல்லும் அலைவரிசைகள் என்பதையும் மறுக்கமுடியாது. இவற்றின் வழியாகவே இன்று- உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் உணர்வாக மாறியிருக்கிறது. இந்த உணர்வைத் திசைதிருப்பும் குரல்கள் அறிவுவாதமாக வெளிப்பட்டாலும், ஆதரவுக்குரல்கள் போல வெளிப்பட்டாலும் தேவைப்படுவது எச்சரிக்கைதான்.

தலைமை, நோக்கம், இலக்கு, திட்டமிடல், முன்னெடுப்பு போன்ற கலைச்சொற்களைப் பயன்படுத்தி அரசியல் பேசுவதாக நினைப்பவர்கள் அரசியல் பேசட்டும். அரசியல் கட்சிகள் தங்கள் வளர்ச்சிக்காக இவற்றைப் பயன்படுத்தப் பார்ப்பது இயல்பு. ஆனால் மக்கள் திரளைச் சென்றடையும் ஊடகக்காரர்களின் கேள்விகளும் அந்தப் போக்கில் இருக்கவேண்டிய அவசியமில்லை. தொடர்ச்சியான அந்தக் கேள்விகள் அலுப்பூட்டும். திசைதிருப்பும். அவை முன்னெடுக்கப்பட்ட உணர்வை -திரட்டப்பட்ட திரளின் மன உறுதியைப் பின்னிழுப்பதாக ஆகிவிடும். இப்போதைய தேவை முன்னெடுக்கும் வாசகங்களே.

(அ. ராமசாமி)