முள்ளிவாய்க்கல் நினைவேந்தலும் விக்கி ஐயா கையேந்தலும்

இன்றுவரை வடமாகாண முதலமைச்சராகிய பிற்பாடு, பல நாடுகளுக்கு செல்லும் அனுபவங்களையும் விக்கினேஸ்வரன் அவர்கள் (விக்கி ஐயா) பெற்று வந்துள்ளார். ஆனால் ஒரு நினைவேந்தலிலே யார் பங்கேற்கிறார்கள் என்பதைக் கூட அறியாதவராக உள்ளவரா விக்கி ஐயா? கனடாவில் இரண்டாம் உலக யுத்தத்தில் போரிட்டு உயிரிழந்தவரைக் கனம் பண்ண, முன்னாள் போராளிகளை Veterans எனக் கூறி, அவர்களுக்கு முன்னிடம் அளித்துத்தான் ஆண்டுதோறும் நினைவேந்தல் நடைபெறுகிறது. இது அவர்களுக்கு அளிக்கும் ஆறுதல்.

சிறீ லங்கா அரசு முன்னாள் போராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, மேலும் அவர்கள் நிலை மேம்பட திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. நினைவேந்தலில் பங்குபற்ற முன்வந்த போராளிகளை அப்புறப்படுத்தியது மாத்திரமல்ல, அவமானப்படுத்தும் சூழலையும் ஏற்படுத்தி வைத்த விக்கி ஐயா என்ன செய்தியை, வெளிநாட்டவருக்கு அறிவிக்க முன்பாக, உள்நாட்டு
மக்களுக்கு அறிவிக்கிறார் என்பதை, சிறிது தெளிவுபடுத்தலாமே? விக்கி ஐயா தமிழில் எழுதி வைத்திருந்த உரையை வாசிப்பதற்கே திண்டாடுகிறார்.

விக்கி ஐயா சிறீ லங்கா ராணுவத்தினர் நினைவேந்தலில் குளிர்பானம் வழங்குவதற்கு இடமளித்திருந்தார். இதுதான் அவருக்கு ஆகக் கூடியதாக செயல்படுத்தக் கூடிய நல்லிணக்கமா? அவர் தனது குடும்பத்தை இனமத பேதமின்றி நல்லிணக்கமாக கொண்டு செல்கின்றார். இந்த நல்லிணக்க அரசியல் சூழலில் ஏன் இன்றைய சந்ததி இராணுவத்தினருக்கும் இனிமேல் நம்மிடையே யுத்தம் வேண்டாம் என்று பிரதிபலிக்கும் விதமாக, அவர்களால் உயிரிழந்தவர்கட்கு ஓர் மரியாதையை செய்து கொடுக்க ஏற்பாடு செய்யமுடியவில்லை. நீதிபதியாக தண்டனைகள் கொடுக்க மட்டும்தான் பழக்கப்பட்டாரா விக்கி ஐயா? மன்னிப்பு, மறத்தல், துயர் ஆற்றுதல், புனர்வாழ்வு என்பன அவரது சட்ட நூல்களில் இல்லாதவையா?

சிறீ லங்கா அரசு வடமாகாண ஆளுநராக ஒரு சிங்களவரை அனுப்பியிருந்தாலும், அவர் தமிழ்மொழியையும் பேசி, தமிழ் மக்களின் நிலையையும், தேவையையும் அறிந்து செயலாற்றி தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் என அறியப்படுகிறது. அவரை மீண்டும் வரவேற்று இரண்டாவது தவணை அவர் மூலம் சேவை பெறுவதை மக்கள் விரும்பியுள்ளனர். விக்கி ஐயா அவருடனாவது கலந்தாலோசித்து நல்லிணக்க செயற்பாடுகளை, இந்துக்கோயில் தண்ணீர்பந்தலை விட, வேறுமுறைகளைக் கையாண்டு கடைபிடித்திருக்க முடியாதா? இருந்த போதும் இராணுவத்தினர் கிடாரத்தை வைத்து, செம்பினால் மொண்டு மூக்குப்பேணிகளில் வார்க்காமால், தமது முறையில் மிக நாகரீகமாக கண்ணாடித் தம்ளரிகளில் ஊற்றி, தட்டிலே பரிமாறியது பாராட்டத்தக்கது.

ஆனால் விக்கி ஐயாவின் திட்டமும், முயற்சிகளும் இனபேதத்தை பல்கலைக்கழக இளைய தலைமுறை தமிழ் மாணவரிடையே மேன்மேலும் தூண்டிவிடும் செயலாகவே இருந்திருக்கிறது. தனக்கும், அந்த இளைஞருக்கும் மட்டும் முதலிடம் கொடுத்ததில் ஏதோ பிடி உள்ளது என்பது வெளிப்படை. முதலிடம் கொடுக்கப்பட்ட இளைஞருக்கு எவ்வாறு மனிதாபிமானத்தோடும், மரியாதையாகவும் பழக வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கலாம் இல்லையா?

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை விக்கி ஐயா ஆட்சியில் திட்டங்கள் அதிகம் அமுல்படுத்தியாகத் தெரியவில்லை. ஏதோ சாக்குப்போக்குகளைக் கூறிக்கொண்டே இருக்கிறார். மக்கள் நலன்கருதும் பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுதலில் காணிகள் விடுவிக்கப்பட்டவுடன், விக்கி ஐயா தான் விழுந்தடித்து அக்காணிகளைப் பார்வையிடச் சென்றார். அவ்வளவுதான். இறுதிவரை பொறுத்திராது, நினைவேந்தலை யார் நடாத்துவது என்பதையாவது சிறந்த திட்டமிடல் மூலம் பலரது மனம் நோகாத விதமாக நடாத்த ஒழுங்குபடுத்தியிருக்கலாம் அல்லவா? சரி, அதுதான் இல்லையென்றால், இனிமேல் போர் வேண்டாம் என்ற சூழலையாவது ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். அதைவிட்டு ஒரு ஆணாதிக்க சூழலை ஏற்படுத்தி, யாழ் பல்கலைக்கழக மாணவ இளைஞர்களை, சினிமாப்படத்தில் வரும் கதாநாயகர்கள் போல், உந்துஉருளிகளில் அணி என்ற பெயரில், போக்குவரத்து சட்டங்களையும் மீறியும் அவர்கள் பயணம் செய்யலாம் எனும் விபரீதமான உத்வேகத்தினை அளித்து, அவர்கள் மேலும் என்ன செய்கிறார்கள், எங்கே போகிறார்கள் எனத் தெரியாத நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளார் விக்கி ஐயா. இது நிச்சயமாக கடந்து போன 3 தசாப்தங்களுக்கு மேலான போரினால் ஏற்பட்ட இழப்புகளைச் சந்தித்த தாய்மாரின் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டியதாகும். விக்கி ஐயா நினைவேந்தலில் விளக்கேற்றினாரோ இல்லையோ, ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் அன்னையரினதும், ஏனைய அன்னையரினதும் வயிற்றில் தீ வைத்துள்ளார் என்பது மறுக்க முடியாதது. கடந்த வாரம்தான் அன்னையர் தினம் கொண்டாடினோம். விக்கி ஐயா இதைத்தான் உள்நாட்டு அன்னையருக்குப் பரிசாக திட்டமிட்டார் என்பது தெரியாமல் போய்விட்டது.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களை வேறு இடங்களிலிருந்து தமது கூட்டங்களுக்கு பேரூந்துகளில் இறக்குமதி செய்தது போல, விக்கி ஐயாவும் தானும் சளைத்தவரில்லை என பேரூந்துகளில் தமிழ் மக்களை வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்தார். பெண்கள் அதிகம் சமூகமளிக்காததை வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருந்தது. அவர்களது தேவையும், முக்கியமும் தற்போது வேறு என்பது தெளிவாகிறது. இது அழுவதற்கான இடமில்லை என்று முன்னாள் போராளிகளுக்கு கூறிவிட்டு, ஒப்பாரி வைத்து அழுவதற்கு சில பெண்களுக்கு இடமளித்ததன் நோக்கம் புரியவில்லை. பெண்களைத் தமக்கு வேண்டிய மாதிரி, வேண்டிய வேளையில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் ஆணாதிக்க செயற்பாடாகவே தெரிகிறது.

இந்த செயற்பாடுகளெல்லாம் எதற்கு, அதனால் என்ன பயன் என அதிகம் ஆராய்வதற்கு இல்லை. விக்கி ஐயா அடுத்த மாகாணத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, விக்கி ஐயா தனது பதவியைப் பிரயோகித்து தனதளவில் தன்மானமிக்க வாக்குகள் பெறும் கையேந்தலாக நடத்தி முடித்துள்ளார்.

(Janaki Karthigesan Balakrishnan)