முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு ஆடை குறித்து இஸ்லாமிய சட்டவியல் – பிக்ஹு – நிலைப்பாடு என்பதாகவன்றி அதுவொரு பெண்கள் குறித்த சமூக மனோபாவமாக அர்த்தம் பெற்றிருப்பது தான் பிரச்சனை.

முகத்திரை அணிவது பெண்களின் சமூக ஊடாடலை தீவிரமாக கட்டுப்படுத்தும் நிலைப்பாடாகவும், பெண்கள் முகத்தை திறப்பது சமூக ஊடாடலுக்கான ஏற்பாகவும் இங்கு பொருள் கோடல் செய்யப்படுகிறது. இத்தகைய பொருள் பிறழ்ந்த வியாக்யானங்கள் காரணமாக முகத்திரை அணிபவர்கள் முகத்தை திறந்த பெண்களை ஒழுக்கத்தில் குறைந்த பெண்களாகவும், முகத்தை திறந்த பெண்கள் முகத்திரை அணிபவர்களை பிற்போக்குத்தனமான சமூக இலட்சியங்களை கொண்டவர்களாகவும் கருதும் நிலை இங்கு தோற்றம் பெற்றிருக்கிறது.

ஒரேயொரு தனித்த பிக்ஹு நிலைப்பாட்டினை வைத்து ஒருவரை, ஒரு அமைப்பை அல்லது சமூக குழுவை முற்போக்கு, பிற்போக்கு என்று தீர்மானித்து விட முடியாது. பெண்கள் முகத்திரை அணியும் நிலைப்பாட்டுக்கு சார்பாக கருத்துரைத்த ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, உஸ்தாத் பதியூஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி, அல்லாமா அபுல் அஃலா மௌதூதி போன்றவர்கள் பிற்போக்குவாதிகளா? ஒட்டு மொத்த அணுகல் முறையுடன் இந்த முன்னோடிகளின் கருத்தியல் அமைப்புகளை ஆராய்பவர்கள் இப்படியான தீர்ப்பரசியல்களுக்குள் இறங்க முடியுமா?

ஆம், நாமும் தீர்ப்புகளை ஒத்தி வைத்து ஒரு ஷரீஆ சார்ந்த ஒரு விவாதத்தில் ஒவ்வொரு தரப்பினரும் முன் வைக்கும் நிலைப்பாடுகளை குறிப்பான சமூக, அரசியல் பின்னணியில் நின்று தான் நாம் ஆராய்ந்திட வேண்டும். பண்பாடு அரசியலாக்கப்படும் சூழலில் இத்தகைய தீர்ப்புகளை ஒத்தி வைத்து நிகழ்வுகளை பரிசீலனை செய்யும் போக்கு தான் ஒடுக்குமுறையை வெல்ல எமக்கு உதவும்.

அனைத்தும் விதமான குறுங்குழுவாதங்களையும், பிரிவினை வாதங்களையும் வெல்வதற்கும் அதுவே வழி…..!

(Lafees Shaheed)