மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்

(Gopikrishna Kanagalingam)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பிரிவினரும், தேர்தல் பிரசாரக் காலத்தில் முன்வைத்த பிரசாரங்களுக்கான பதிலடியாகவே, எதிர்க்கட்சித் தலைவரின் பதிலடி அமைந்திருந்தது.

இலங்கையின் மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில், இரா. சம்பந்தனுக்குக் காணப்படும் அனுபவமாக இருக்கலாம், இரா. சம்பந்தன் மீது மஹிந்த ராஜபக்‌ஷ கொண்டிருக்கின்ற தனிப்பட்ட மரியாதையாக இருக்கலாம் (இரா. சம்பந்தனின் பிறந்தநாளுக்கு, மஹிந்தவும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்‌ஷவும் வாழ்த்தியிருந்தனர்), இல்லாவிடில் பொறுத்தது போதும் என்ற உணர்வாக இருந்திருக்கலாம், தமிழீழம் தொடர்பாக இரா. சம்பந்தன் தெரிவித்த கருத்துகளில், நியாயமான கோபம் காணப்பட்டது.

பிரிக்கப்படாத, ஒரே நாட்டுக்குள்ளேயே, அரசியல் தீர்வொன்றைத் தாம் கோருவதை உறுதிப்படுத்திய அவர், “நீங்கள் இப்படியே நடந்துகொண்டிருந்தால், தமிழீழம் மலரும்: அது எங்களின் தரப்பிலிருந்து மலராது, உங்களின் தாமரை மொட்டிலிருந்து தான் மலரும்” என்று, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திய விதம், தெற்கிலும் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்த எச்சரிக்கை அல்லது விமர்சனத்தால் மாத்திரம், எதுவும் உடனடியாக மாறிவிடப் போவதில்லை என்பதை நாமனைவரும் அறிவோம். ஏனென்றால், அரசியல் நிலைப்பாட்டின் இரு முனைகளிலும் காணப்படும் கடும்போக்குவாதிகள், தமிழீழம் பற்றிய கலந்துரையாடல்களை விரும்புகிறார்கள் என்பதை, நாமனைவரும் அறிவோம்.

அதற்கான உதாரணமாக, எதிர்க்கட்சித் தலைவரின் இக்கருத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்குப் பகிர்ந்திருந்தது. வழக்கத்தைப் போன்றே, முற்போக்குவாதிகளால் அது அதிகமாகப் பகிரப்பட்டது. ஆனால், அதற்கு அளிக்கப்பட்ட பதில்களில் பெரும்பாலானவை, கடும்போக்குவாதிகள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதைக் காட்டியது.

அவரின் கருத்தைப் புரிந்துகொள்ளாத ஒருவர், “பிந்திய கருத்துத் தான், ஆனால் இக்கருத்தை வரவேற்கிறேன். தமிழீழம் தான் ஒரே தீர்வு” என்கிறார். இன்னொருவர், “தமிழீழம் மலரும் போது, எமது தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்தமைக்காக, சம்பந்தன் மீது தேசத்துரோக வழக்குத் தாக்கல் செய்யப்படும்” என்கிறார்.

இவர்கள் ஒருபக்கமாக இருக்க, “ஏற்கெனவே தமிழீழம் கேட்ட பிரபாகரன் இறந்துவிட்டார்” என்ற கருத்துப்பட, பல்வேறு அளவிலான கெட்ட வார்த்தைகளோடு, பெரும்பான்மையினத் தரப்பிலிருந்து பல கருத்துகள் வழங்கப்பட்டிருந்தன. இரா. சம்பந்தன் தெரிவித்த கருத்து, “தமிழீழத்தை உருவாக்கப் போகிறோம்” என்ற அடிப்படையில் இருந்திருக்கவில்லை. பிரிக்கப்படாத நாட்டுக்குள் தான் தீர்வை விரும்புகிறோம் என்பதை, அவர் உறுதிபடத் தெரிவித்திருந்தார். ஆனால், இரண்டு தரப்புகளுமே அக்கருத்தை, தங்களுக்கேற்றவாறு பயன்படுத்திக் கொண்டன.

இதுதான், இலங்கையில் தற்போது காணப்படுகின்ற நிலைமை. அரசியல் அரங்கின் இரு முனைகளிலும் காணப்படுகின்ற கடும்போக்குவாதிகள், மற்றைய முனையிலிருக்கும் கடும்போக்குவாதிகளின் எழுச்சியை, தமக்குச் சாதகமான ஒன்றாக, தமது அரசியலுக்குச் சார்பான ஒன்றாகப் பார்க்கிறார்கள்.

தெற்கில், மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு, மக்களுக்குக் காணப்படுகின்ற நம்பிக்கையீனங்களையும் சந்தேகங்களையும் அச்சத்தையும் எவ்வாறு பயன்படுத்தி, தமது அரசியலை எவ்வாறு முன்னெடுக்கிறதோ, அதேபோன்ற நடவடிக்கையைத் தான், வடக்கில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதன் ஆதரவாளர்களும் செய்து வருகின்றனர். இரு தரப்பினரும் ஒரே அளவில் கடும்போக்காளர்களாக இருக்கின்றனரா என்று கேட்டால், இல்லை. ஆனால், இரு தரப்பினராலும் ஆபத்து இருக்கிறதா என்றால், ஆம், நிச்சயமாக.

‘தமிழ்மிரர்’ பத்திரிகையில், கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான அரசியல் கட்டுரையொன்றில், அரசியல் ஆய்வாளரான அகிலன் கதிர்காமர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியலை, “நச்சு” என்று வர்ணித்திருந்தார். “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, துடிப்பான இளைய அங்கத்தவர்களைச் சேர்த்துள்ளது.

அவர்கள், நச்சான தமிழ்த் தேசியவாத அரசியலுடன், இயங்கவிடப்பட்டிருக்கின்றனர்” என்பது, அவர் பயன்படுத்திய அதே வார்த்தைகள். அக்கட்டுரையை வாசித்த பின்னர், மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற, அதுவும் அண்மைக்காலத்தில் தனது ஆதரவுத் தளத்தை அதிகரித்திருக்கின்ற ஒரு கட்சியின் அரசியலை, “நச்சு” என வர்ணிப்பது சரியானது தானா என்ற கேள்வி, இப்பத்தியாளருக்கு ஏற்பட்டது. ஆனால், தொடர்ந்து சிந்தித்ததிலும், அக்கட்சியின் தொடர்ச்சியான நடவடிக்கைகளைப் பார்க்கும் போதிலும், “நச்சு” என்பதைத் தவிர, பொருத்தமான வேறு வார்த்தைகள் இல்லை என்ற முடிவுக்குத் தான் வர முடியும்.

உதாரணமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை தவறிவிட்டது எனக் குற்றஞ்சாட்டியும், அதன் காரணமாக இலங்கை விடயத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையிலோ அல்லது சர்வதேசத் தீர்ப்பாயமொன்றிலோ கொண்டுசெல்ல வேண்டுமெனவும் வலியுறுத்தி, மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்பாக, வடக்கிலும் கிழக்கிலும் கையெழுத்து வேட்டையை நடத்த, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது என அறிவிக்கப்படுகிறது.

இத்திட்டம், ஆரம்பத்திலிருந்தே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஏனென்றால், இத்தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் இலங்கை தவறிவிட்டது என்பது, சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாக இருந்தாலும், கடந்தாண்டு மார்ச்சில் தான், இலங்கைக்கு 2 ஆண்டுகளுக்கான காலநீடிப்பு வழங்கப்பட்டது. ஆகவே, 2019ஆம் ஆண்டு மார்ச் வரை, இலங்கை பாதுகாப்பாகவே இருக்கிறது. இருக்கின்ற ஓராண்டுக்குள், எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு அழுத்தங்களை வழங்குவது தான், தேவையானதாக இருக்கிறது.

ஆகவே, நடக்கப் போகாத ஒன்றைச் செய்வதாக வாக்குறுதியளித்து, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, அது தோல்வியடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் (அல்லது, அவர்களது பிரதான இலக்காக மாறியிருக்கின்ற சுமந்திரன் தான்) அதைத் தடுத்துவிட்டது என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரசாரத்தை மேற்கொள்வதற்கான முயற்சியென்றே கருதப்படுகிறது. குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல்கள், இவ்வாண்டு இடம்பெறலாம் என்ற நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கான யுத்தியாக, இது அமையக்கூடும். மறுபக்கமாக, அவர்களின் முயற்சி, அதிசயிக்கத்தக்க விதமாக வெற்றிபெற்றது என்றாலும் கூட, ஐ.நா பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் செல்லுமாயின், அது தமிழர் தரப்புக்கு எந்தளவுக்குச் சாதகமானது என்ற கேள்வியும் எழுப்பப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு முன்னர், போர் முடிவடையும் காலப்பகுதியில், 2009ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி, பாதுகாப்புச் சபையால், அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதே பிரதானமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அது, எதிர்பார்க்கக்கூடியது தான் என்றாலும், இலங்கை மீதான விமர்சனங்களை முன்வைப்பது போல் முன்வைத்துவிட்டு, இடம்பெயர்ந்துள்ளோர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, தனது திருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.

போரின் இறுதிக் கட்டத்திலேயே அவ்வாறென்றால், போர் முடிவடைந்து 9 ஆண்டுகளின் பின்னர், பாதுகாப்புச் சபையால் ஏதாவது செய்துவிட முடியுமா? மியான்மாரின் ராக்கைனில், றோகிஞ்சா மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கூட, இச்சபையால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே, இலங்கை மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும், இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும் சீனாவும் ரஷ்யாவும், “வீற்றோ” அதிகாரத்தைக் கொண்டிருக்கும் நிலையில், அவ்விரு நாடுகளையும் திருப்திப்படுத்தத்தக்க வகையில், இலங்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட முடியும்? தமிழ் மக்களைப் பொறுத்தவரை, இலங்கை மீதான உச்சபட்ச அழுத்தத்தை வழங்குவதற்கு, தற்போதுள்ள சிறந்த வாய்ப்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவை தான் காணப்படுகிறது. இது தொடர்பாகக் காணப்படும் சந்தேகங்களை, முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், இப்பத்தியாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வினவியிருந்த போதிலும், இதுவரை அதற்கான பதில்கள் வழங்கப்படாமை, இவ்விடயத்தில் போதிய திட்டங்களின்றி அவர்கள் காணப்படுகிறார்கள் என்றே எடுக்க வேண்டியிருக்கிறது.

எனவே, மக்களைத் தவறாக வழிநடத்தும் அரசியலை மேற்கொண்டு, யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்டு, அதன் பின்னர் பொய்களைப் பரப்புவதை நிறுத்த வேண்டிய தேவை, முன்னணிக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், இதுவரை காலமும் மேற்கொண்டுவந்த எதிர்ப்பு, குழப்ப அரசியல், அவர்களுக்குப் பயனளித்திருக்கலாம். ஆனால் இப்போது, வடக்கு மக்களின் குறிப்பாக யாழ்ப்பாண மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்ற கட்சியாக அவர்கள் மாறியிருக்கும் நிலையில், பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியமாகிறது.