யார் வேட்பாளர்? சூடுபிடிக்கும் போட்டி

(கே. சஞ்சயன்)

இந்த ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தான், கொழும்பு அரசியல் களத்தில், சூடான விவாதப்பொருளாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்கப் போகிறவர்கள் யார், யாருக்கும் யாருக்கும் நேரடிப் போட்டி? என்பதை மய்யப்படுத்தியே இப்போது, அதிக செய்திகள் வெளிவருகின்றன.இப்போதைய அரசியல் களத்தில், மூன்று பிரதான தரப்புகள் இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகியவையே அவை.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ ஆகியோரில் ஒருவர் போட்டியில் இறங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், இந்த மூவருக்குப் பின்னாலும், கட்சிக்குள் பிரிவுகள் இருக்கின்றன. அங்கேயும் போட்டிகள் பூசல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் போட்டிக்களத்தில் நிற்கக்கூடிய ஒரே ஆள். அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களே, அவரை விட்டால் வேறு தகுதியானவர்கள் எவரும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த அவருக்கு, இப்போது மீண்டும் போட்டியிடும் ஆசை வந்திருக்கிறது. அதுதான், அவர் குழப்பமான முடிவுகளைக் கடந்த ஆண்டின் இறுதியில் எடுக்கவும் காரணமாகியது. மஹிந்தவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களின் வாக்குகளால் மீண்டும் ஜனாதிபதியாகி விடலாம் என்ற கணக்குப் போட்டிருந்தார் சிறிசேன. ஆனால், சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு, மஹிந்த அணிக்குள் காணப்படுகின்ற வலுவான எதிர்ப்பு, அவர் போட்டிக் களத்தில் இறங்குவதில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த அணி முழுமையாக இறங்கி வேலை செய்யாமல் போனால், மைத்திரிபால சிறிசேனவால் வெற்றியைப் பற்றிச் சிந்திக்கவே முடியாமல் போகும். அது அவருக்கு அவமானத்தையே ஏற்படுத்தும்.

எவ்வாறாயினும், சிறிசேனவை போட்டியில் நிறுத்துவது குறித்து, தீர்மானிக்கப் போவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாக இருக்காது; அதை மஹிந்த ராஜபக்‌ஷவே தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார். வெற்றிபெற முடியாத வேட்பாளரைத் தனது கட்சியின் வேட்பாளராக நிறுத்தி, பெயரைக் கெடுத்துக் கொள்ள மஹிந்த ராஜபக்‌ஷவும் தயாராக இருப்பார் என்று கருத முடியாது.

இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தப்போகும் வேட்பாளருக்கு எதிராக, போட்டியில் களமிறங்கப் போவது, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவராகத் தான் இருப்பார் என்று தெரிகிறது.

இன்னும் வெளிப்படையாகச் சொல்வதாயின், ராஜபக்‌ஷ சகோதரர்களில் ஒருவரே போட்டியாளராக இருக்கப் போகிறார். யார் அவர் என்பது தான் இன்றைய நிலையில் மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது.

ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான், களமிறங்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ராஜபக்‌ஷ விசுவாசிகள் பலரும், இருக்கிறார்கள். யாரைக் களமிறங்குவது என்பது தான் ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு உள்ள பிரச்சினை.

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கிடையில் முரண்பாடுகள் நிலவுவதாக நீண்டகாலமாக செய்திகள் வெளியாகிய போதும், அதனை அவர்கள் மறுத்தே வந்திருக்கிறார்கள்.
அதைவிட, ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் வேட்பாளராக களமிறங்குவார் என்பதை உறுதியாகச் சொல்வதையும் அவர்கள் தவிர்த்து வந்தனர்.

யார் வேட்பாளர் என்பதைப் பொருத்தமான நேரத்தில் முடிவு செய்வோம்; சரியான நேரத்தில் அறிவிப்போம் என்பதே, மஹிந்த, கோட்டா, பசில், சமல், நாமல் போன்றவர்களின் பதிலாக இருந்து வந்தது.

“நீங்களா வேட்பாளர்” என்று கேட்டால், “அது இன்னும் முடிவாகவில்லை. மஹிந்தவே அதைத் தீர்மானிப்பார்” என்றும் அவர்கள் நழுவினர்.

இப்போது, நிலைமை மாறியிருக்கிறது. மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிடலாம் என்ற ஊகங்கள் வலுவடைந்த நிலையில், அவருக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், எங்களில் ஒருவர் தான் வேட்பாளர் என்றும், நாங்களும் போட்டியில் இருக்கிறோம் என்றும் ராஜபக்‌ஷவினர் நெஞ்சை நிமிர்த்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வேட்பாளர் என்றும், அவர் யார் என்பதைச் சரியான நேரத்தில் வெளியிடுவோம் என்றும் முதலில் இரகசியத்தை உடைத்தவர் சமல் ராஜபக்‌ஷ தான். அதற்குப் பின்னர், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஒருவரைத் தான், வேட்பாளராக நிறுத்துவோம் என்று மைத்திரிபால சிறிசேனவுக்குக் ‘கட்டை’ போட்டார் பசில் ராஜபக்‌ஷ.

அதையடுத்து, “மக்கள் தயார் என்றால், நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகவே இருக்கிறேன்” என்று, ‘வியத்மக’ கூட்டத்தில் அறிவித்தார் கோட்டாபய ராஜபக்‌ஷ.

இதற்குப் பின்னர், “நானும் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவன் தான், அந்தப் பதவிக்கான போட்டியாளராக நானும் இருக்கிறேன்” என்று, வெட்கத்தை விட்டுக் கூறிவிட்டார், ராஜபக்‌ஷ சகோதரர்களில் மூத்தவரான சமல் ராஜபக்‌ஷ.

இவர்கள் ஒருபுறம் மோதிக் கொண்டிருக்க, ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ வேட்புமனுவை சமர்ப்பித்தால், தேர்தல் ஆணைக்குழுவால் அதை நிராகரிக்க முடியாது, அவர் மீண்டும் போட்டியிடலாம் என்று, குமார வெல்கம புதியதொரு குண்டையும் தூக்கிப் போட்டிருக்கிறார்.

ஆக, இப்போது, ஐ.தே.கவுக்கு எதிரான பிரதான வேட்பாளரை நிறுத்தப் போவது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியா, பொதுஜன பெரமுனவா என்ற பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் யார் வேட்பாளர் என்ற பிரச்சினையே முதன்மைபெற ஆரம்பித்திருக்கிறது.

தேர்தல் காலம் நெருங்க நெருங்க, ராஜபக்‌ஷ சகோதரர்கள் மத்தியில், ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றுவதற்கான உள்மோதல் தீவிரமடையக் கூடிய அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன.

19ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் போட்டியிட முடியாத நிலை உருவாக்கப்பட்ட பின்னர், கோட்டாபய ராஜபக்‌ஷவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்றோர் ஊகம் நிலவி வந்தது.

அதை உறுதி செய்யும் வகையில், கோட்டாபய ராஜபக்‌ஷ, ‘வியத்மக’, ‘எலிய’ போன்ற அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் ஊடாக, தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தார்.

போரை வெற்றி கொள்வதற்கு காரணமானவர் என்ற தகுதி, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்பதும் உண்மை.

ஆனால், இவர் தேர்தலில் களமிறங்குவதற்கு இரண்டு பிரதான தடைகள் உள்ளன. முதலாவது அமெரிக்க குடியுரிமை; இரண்டாவது, ராஜபக்‌ஷ சகோதரர்கள் மத்தியில் உள்ள அச்சம்.

அண்மையில், அமெரிக்காவுக்குச் சென்று விட்டுத் திரும்பிய பின்னரே, கோட்டாபய ராஜபக்‌ஷ, தேர்தலில் போட்டியிடுவதற்கான தடைகள் நீங்கி விட்டதாகவும் தான் போட்டியிடத் தயார் என்றும் கூறியிருந்தார்.

இதனால் அவர், அமெரிக்க குடியுரிமையைக் கைவிடும் ஆவணங்களைக் கையளித்திருக்கலாம் என்ற ஊகங்கள் உள்ளன. ஆனால், அதை அவரது தரப்போ, அமெரிக்காவோ வெளியிடவில்லை.

அமெரிக்கக் குடியுரிமையை கைவிடும் செயற்பாடு சுமுகமாக முடிந்தால், அவர் களமிறங்குவதில் சிக்கல்கள் நேராது,

ஆனால், கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரத்துக்கு வந்தால், எல்லைமீறிச் செயற்படக் கூடியவர் என்ற கருத்து ராஜபக்‌ஷவினர் மத்தியில் உள்ளது. ஏற்கெனவே பாதுகாப்புச் செயலாளராக அவர் பதவியில் இருந்த காலத்தில், அவர் செயற்பட்ட விதமே, இந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது தமதும், தமது பிள்ளைகளினதும் எதிர்காலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அச்சம் உள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷ வேட்பாளர் ஆக்கப்படுவதை வாசுதேவ நாணயக்கார, குமார வெல்கம போன்ற மஹிந்த ஆதரவாளர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள். கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியில் நிறுத்தப்பட்டால் இனவாதம் கூர்ப்படையும் என்றும், சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து தோல்வியடையும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

அதேவேளை, சமல் ராஜபக்‌ஷவும் போட்டிக் களத்தில் இறங்கத் தயார் என்று கூறியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவு கொடுக்கும் நிலையிலும் பொதுஜன பெரமுனவினர் பலர் உள்ளனர்.

அமெரிக்கக் குடியுரிமையையும் கொண்டுள்ள பசில் ராஜபக்‌ஷவுக்கும், ஜனாதிபதி பதவி மீது ஒரு கண் உள்ளதை மறுக்க முடியாது, அவருக்கு ஆதரவான ஒரு கூட்டமும் இருக்கிறது. அவர் அமெரிக்க குடியுரிமையை இழக்கத் தயாராக இல்லை. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவு இவருக்கே கூடுதலாக இருந்தாலும், இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளும், வழக்குகளும், பாதகமான விளைவை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷவும் கூட பல்வேறு வழக்குகளையும் விசாரணைகளையும் எதிர்கொண்டிருப்பவர் தான். தீர்ப்பு அளிக்கப்படாத வரையில் குற்றவாளிகள் இல்லை, என்ற நிலையில் இருந்தே இவர்கள் ஜனாதிபதி ஆசனத்தின் மீது குறிவைத்திருக்கிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்று மஹிந்த ராஜபக்‌ஷ இன்னமும் முடிவு எடுக்கவில்லையா அல்லது, முடிவெடுக்க முடியாமல் குழம்பியுள்ளதாக காட்டிக் கொள்ள முற்படுகிறாரா என்று தெரியவில்லை.

மஹிந்த தரப்பின் வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது தீர்மானிப்படும் சூழலும் காணப்படுவதால், குட்டையைக் குழப்ப ராஜபக்‌ஷவினர் முற்பட்டாலும் ஆச்சரியமில்லை.