யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பொலிசாரினால் கொல்லப்பட்டமை

“யாழ்ப்பாணமும் வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளும் ஒரு நீண்ட போரிலிருந்து இப்போது தான் மீண்டு வருகின்றன. இந்தப் போரின் போது இந்தப் பிராந்தியத்திலே வாழ்ந்த மக்கள் சொல்லொணாத் துயரங்களையும், இழப்புக்களையும் அனுபவித்திருந்தார்கள். தமது வாழ்க்கை, ஆட்சி, அரசியல், எதேச்சாதிகாரம், எல்லாவற்றுக்கும் மேலாக ஆயுதத்தினதும் வன்முறையினதும் ஒடுக்கும் அரசியல் என்பன பற்றி மீள் மதிப்பீடு செய்வதற்கான ஒரு சிறு வெளியினைத் தானும் போருக்குப் பிந்தைய காலம் இந்த மக்களுக்குக் கொடுத்திருந்தது. 2015ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் ஜனநாயக வெளியின் பரப்பு ஒப்பீட்டளவிலே மேலும் அதிகரித்தது. சில உரையாடல்களையும், விவாதங்களையும், எதிர்ப்பு முன்னெடுப்புக்களையும் இந்தச் சூழலிலே மக்கள் மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது.

ஆனாலும் அந்தப் பிரதேசத்தின் கள நிலைமைகளிலே குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கவில்லை என்பதுவே யதார்த்தம். இந்தப் பிராந்திய‌ மக்களினுடைய வாழ்விலே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்லும் அளவுக்கு எந்த விதமான குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய‌ ஆதாரமும் இல்லை. நல்லிணக்கத்தின் பெயரிலும், மீள்கட்டுமாணத்தின் பெயரிலும் நவதாராளவாதக் கொள்கைகள் மக்களின் மீது திணிக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களினைத் தொடர்ந்தும் வறுமை வாட்டி வருகிறது. தான்தோன்றித்தனமான கைதுகளும், தடுத்து வைத்தல்களும் தொடர்கின்றன. மக்களினுடைய அனுபவங்களினை வைத்துப் பார்க்கையிலே போரின் பின்னரும் இந்த‌ மக்கள் வன்முறையினாலும், ஆட்சி செய்வோரினதும், இராணுவத்தினதும் எதேச்சாதிகாரப் போக்குகளினாலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது கண்கூடு.

மோட்டார் சைக்கிளினை வேகமாகச் செலுத்தினார்கள் என்பது தவிர்ந்த வேறு எந்தக் காரணமும் இல்லாமல் இரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பொலிசாரினால் கொல்லப்பட்டமை நாம் ஓர் இராணுவமயமாக்கப்பட்ட ஆட்சிக் கட்டமைப்பின் கீழே தொடர்ந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற பயங்கரமான யதார்த்தத்தினை வெளிக்காட்டுகிறது. யுத்தமற்ற நிலையிலே தமது பிள்ளைகள் படிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறதனை இந்த மாணவர்களின் குடும்பங்கள் ஒரு காலத்திலே வரவேற்றிருந்திருப்பார்கள் என்பதனைத் தற்போது எண்ணிப் பார்க்கையிலே நாம் வேதனை அடைகிறோம்.” – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் அண்மையிலே பொலீசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டமையினைக் கண்டித்து இலங்கையில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர்களினால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையின் ஒரு பகுதியின் தமிழாக்கம்.