யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம்

யாழ் மாநகர சபை உறுப்பினர் அமரர் த. சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம் (14.06.2003) இன்றாகும். தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டதில் தனது 24 ஆவது வயதில் இணைந்து கொண்ட சுபத்திரன் 46 வயதில் இறக்கும் வரை அதே குறிக்கோளுடன் உழைத்தவர்.
இன்றைக்கு, இளம் வயதில் தனது சமூகத்தைப்பற்றி தன்னை சூழவுள்ள மனிதர்களின் அவலங்கள் பற்றி பொது விவகாரங்கள் பற்றி ஆழ்ந்தாராய்ந்து சிந்திக்கின்ற இளம் சந்ததியை பெற்றிருக்கின்றோமா? எமது இளைஞர் யுவதிகளின் சமூக ஈடுபாடு குன்றிப்போனதற்கான, திசைவிலகலுக்கான காரணங்கள் என்ன? என்பன நாம் விடை தேடவேண்டிய வினாக்களாகும்.
தோழர் றொபேட்டின் தந்தையார் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர், சாவகச்சேரியைச் சேர்ந்தவர், தாயார் உடுப்பிட்டியை சேர்ந்தவர். இரண்டு பிள்ளைகளில் இளையவரான சுபத்திரன் இறுதியாக யாழ். மத்திய கல்லூhயிpல் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்றார். அவருக்கு மூத்தவரான அவரது சகோதரி ஒரு மிருக வைத்தியர். சுபத்திரனின் குடும்ப சூழல் பேராட்டத்தில் பங்கேற்பதற்கான எந்த நெருக்குதலையும் அவருக்கு வழங்கவில்லை. வீட்டில் செல்லப் பிள்ளையாகவே அவர் வாழ்ந்தார். ஊரிலும் அப்பிடித்தான்.
ஆனால், 1983 ஜுலை இனக் கலவரத்தினால் ஏற்பட்ட கொந்தளிப்பிற்கு முன்னதாகவே போராட்டதில் தன்னை இணைத்துக் கொண்டவர் சுபத்திரன். தன்னைச் சூழவுள்ள சக மனிதர்களின் துன்பங்கள், பிரச்சினைகளில் கொண்ட அக்கறை தான் அவர் ஒரு போராளியாக பரிணமிக்கக் காரணமாயமைந்தது.
அவருக்கிருந்த சமூக ஈடுபாடும், தேடலும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய சாதி ரீதியான அநீதிகள், தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழும் இன ரீதியான பாரபட்சங்கள், மனிதனை மனிதன் சுரண்டும் வர்க்க ரீதியான ஏற்றத் தாழ்வுகள், மக்களின் துயரங்களுக்கான உண்மையான காரணங்களை கண்டுகொள்ள விடாமல் தடுக்கும் மூட நம்பிக்கைகள் என அனைத்துத் தளைகளிலிருந்தும் தமிழ் மக்கள் விடுவிக்கப்படுவதே உண்மையான விடுதலைக்கு வழி என நம்பினார். அதற்காகவே அயராது செயற்பட்டார். எமது போராட்டம் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களுக்கு எதிரானதே தவிர சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என்ற புரிதல் அவருக்கிருந்தது.
இவை அனைத்தும் ஒரு சிறந்த போராளியாக அவர் இனங்காணப்படவும் தலைமை ஸ்தானத்திற்கு தெரிவுசெய்யப்படவும் காரணமாயமைந்தது. அவர் ஈழ மக்கள் புரட்சிர விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட இராணுவ பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தோழர் ரஞ்சன் என எல்லோருக்கும் அறிமுகமானார். யாழ் மாவட்டத்தில் மாத்திரமன்றி வடக்கு கிழக்கு மலையகம் என பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெறவும் அரசியல் ரீதியாக தெளிவான பார்வையுடையவர்களாக மாறவும் காத்திரமான பங்களிப்பை நல்கினார்.
1985 மார்ச் 18 ஆம் திகதி குருநகர் 5 மாடி வீடமைப்பு திட்டத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். யாழ். கோட்டை, ஆனையிறவு போன்ற இராணுவ முகாம்களில் சித்திரவதைகளுக்கு உள்ளாகி பின்னர் வெலிக்கடை மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையில் இருந்தபோதும் கைதிகளின் நலன் காக்க முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களில் சக கைதிகளுடன் அவரும் முன்னணியில் இருந்து செயற்பட்டார். வடக்கு கிழக்கில் இயக்கங்களிடையே உருவான மோதல் நிலை சிறைச்சாலையின் உள்ளேயும் பரவாமல் அதனால் எந்த ஒரு கைதியும் பாதிக்கப்படாமல் நிலைமையை சுமுகமாகப் பேணியதில் சுபத்திரனின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதனை அவரோடு சிறைவைக்கப்பட்டிருந்த சக இயக்கங்களின் போராளிகளே குறிப்பிட்டுள்ளனர்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் சுகு, ஐயா, செல்வன், சீலன், விந்தன், செல்வம், குமார் (திருகோணமலை) குமார் (மலையகம்) கோபன், கனகு,
ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த கீரன், குரு, செட்டி, சேனாதி
தம்பாபிள்ளை மகேஸ்வரனை தலைவராக கொண்டிருந்த தமிழீழ விடுதலை இராணுவத்தை சேர்ந்த ஈசன், வரதன் (அப்புச்சி), சுதா
புளொட் இயக்கத்தை சேர்ந்த மீரான் மாஸ்டர், மாறன், துளசி, சத்தியசீலன், தவராஜா
ஈரோஸ் இயக்கத்தை சேர்ந்த அன்புநாதன், தங்கவடிவேல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ரவி, முரளி ஆகியோர்
தமது இளமைக் காலத்தை சிறையில் தொலைத்ததுடன் தமிழ் அரசியல் கைதிகளின் நலன்களை பேண சிறையில் இணைந்து செயற்பட்டவர்களில் அடங்குவர்.
இவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. உயிருடன் இருப்பவர்களும் தமிழர் அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளாக இல்லை. கியூபாவின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடிய சேகுவேரா தான் விடுதலை பெற்ற கியூபாவின் விவசாயதுறையின் அமைச்சர் தமிழர் அரசியலில் இது தாறுமாறாகிவிட்டது. ஆனாலும், தமிழர் போராட்ட வரலாற்றில் இந்த இளைஞர்கள் வகித்த பாத்திரம், தியாகம் அளப்பரியது மறக்கப்பட முடியாதது.
1987 ஜுலை 29 இல் கைச்சாத்தான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட பல்வேறு போராளி இயக்கங்களையும் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களில் ஒருவராக விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட இளைஞர்கள் உடனடியாக சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அவர்களின் தங்குமிடம், உணவு, போக்குவரத்து போன்றவற்றை ஏற்பாடு செய்வதிலும் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் இதர இயக்கங்களை சோந்தவர்களுடன் இணைந்து முன்நின்று செயற்பட்டார். அன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வழக்குகளில் ஆஜரான திரு. குமார்பொன்னம்பலம், ஜோய் ஜெயரட்ணம் ஆகியோர் இதற்கு பெரிதும் உதவினர்.
பல்வேறு ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியத்துறை சார்ந்தவர்கள் இதர அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், நட்பும் கொண்டிருந்த சுபத்திரன் அவர்களின் அன்புக்குரியவராகவும் விளங்கினார்.
வடக்கு கிழக்கு மாகாணசபையில் பிரதிநிதித்துவம் வகிக்காத போதும் மாகாணசபையை பாதுகாப்பதற்கும், ஒரு கருத்தின், கொள்கையின் அடிப்படையில் அமைப்பாகச் செயற்படுவதற்கிருந்த தடைக்கு எதிராக குறித்த அடிப்படை ஜனநாயக உரிமையை நிலை நிறுத்துவதற்காகவும் விட்டுக்கொடுப்பின்றி போராடினார். ஆனாலும், அந்தக் காலத்தில் சாதாரண மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அக்கறை கொண்டிருந்ததோடு கட்சிக்கு உள்ளேயும் அதற்காகக் குரல்கொடுத்தார்.
1998 இல் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட சுபத்திரன் தனது பதவிக்காலம் முடியும் வரை மாநகர சபையின் பணிகளில் காத்திரமான பங்கை வகித்தவர்.
யாழ் மாநகர சபையின் ஆளுந்தரப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி பொறுப்பேற்றிருந்த நிலையில் சரோஜினி யோகேஸ்வரன், பொன்னுத்துரை சிவபாலன், நடராஜா இரவிராஜ், செல்லன் கந்தையா ஆகிய நான்கு மாநகர முதல்வர்களினதும் செயற்பாடுகளுக்கு பக்கபலமாயிருந்தார்.
இரண்டு வித்தியாசமான கொள்கைகளுடன் பயணித்த போதும் நண்பர்களாகவும் இருந்தவர்கள் என தோழர் றெபேட் – ரவிராஜ் ஆகிய இருவர் பற்றியும் அண்மையில் ஒரு முன்னாள் ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார். அந்த நட்பு யாழ் மாநகர சபையின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் ஊடாக மலர்ந்ததாகும்.
1995 இடப்பெயர்வுக்கு பின்னர் யுத்தத்தில் அழிவடைந்திருந்த யாழ் மாநகர சபை பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்த மக்களின் இயல்பு வாழ்வுக்கு தேவையான மீள் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கு புளொட், ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் சார்பில் பிரதிநிதித்துவம் வகித்த மாநகர சபை உறுப்பினர்களுடன் இணைந்து முன்மொழிவுகளை செய்ததுடன் யாழ் மாநகர சபையின் மேற்படி வேலைத்திட்டங்களுக்கு அவர் வழங்கிய ஆதரவு குறித்து ஆளுங்கட்சி மாநகர சபை உறுப்பினர்களே நினைவுபடுத்தியுள்ளனர்.
யாழ் நூலகம் மீண்டும் புனரமைக்கப்படுவதற்கும், மீண்டும் திறந்து வைக்கப்படுவற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத் தகுந்ததாகும். யாழ் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மத்தியிலும் அவர் கண்ணியமும், கடமை உணர்வும் மிக்க ஒருவராக மதிக்கப்பட்டார். நேசிக்கப்பட்டார்.
ஈபிஆர்எல்எவ் இல் இணைந்ததிலிருந்து 14.06.2003 அன்று யாழ் நகரிலிருந்த கட்சி அலுவலகத்தில் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகும் வரை தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்துவதற்காகவும் ஆயுதந் தாங்கியும், ஜனநாயக வழிமுறைகளுக்கூடாகவும் போராடியதுடன் கட்சியின் வளர்ச்சிக்கும், தோழர்களின் நலன்பேணவும் இடையறாது செயற்பட்டவர். இவை அனைத்துமே காலங்களை வென்று எம் சமூகத்தில் சுபத்திரனின் (தோழர் றொபேட்) பெயர் நிலைத்திருக்கவும் நினைவு கூரப்படவும் காரணங்களாகும்.

கே. எஸ். மோகன்