யாழ் மாநகர சபை குப்பைகள்

ஒவ்வொரு பிரதேச சபைக்கும் நகர சபைக்கும் மாநகர சபைக்குமான கடமை என்பது அந்தந்த சபைகளுக்குரிய அதிகாரத்தின் கீழுள்ள தமது கடமைகளை செய்வது என்பதே. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் தமிழர்களே. உள்ளூர் யுத்தம் என்பது உயிர் உடமைகளை வரையறை இன்றி காவு கொண்டு ஒரு அழிவில் இருந்து மீண்டு ஒன்பது ஆண்டுகள் எமது சமூகத்தின் கடமைகளை செய்கின்ற சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தியை மேற்கொள்ளுகின்ற நிர்வாகமும் நிதியும் எமது கையில் வந்த பின்னரும் இன்னும் சுற்றுச்சூழல் மாசடைவதை பார்த்தும் பாராமல் குப்பைகூளங்கள் சபைகளினால் குறிப்பாக யாழ் மாநகர சபையினால் அகற்றப்படாமல் இருப்பது என்பது தமிழ் நிர்வாகத்தின் கையாலாகா தனத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

கரையோர கடற் பகுதிகள் குப்பைகளால் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் மாசு படுவதை பாராமுகமாக அவற்றை அகற்ற முடியாத அக்கறை அற்ற அல்லது செயற் திறனற்ற சபைகளாகவே இவைகள் இருக்கின்றன. எனது ஊரின் குருநகர் பகுதியின் கரையோரம் மிக மோசமாக குப்பைகளால் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைவதோடு கடல் வளம் உயிர்கள் என்பன மிக மோசமாக பாதிக்கப்படுகின்றன. வீட்டு கழிவுகள் குப்பைகள் நகர சபையினால் கிராமமாக எடுத்து செல்லப்படாததால் வீட்டு மற்றும் வீதிக்குப்பைகள் கடலுக்குள் கொட்டப்படுகின்றன. கேட்டால் நகர சபை வண்டிகள் கிராமமாக வருவதில்லை வந்தாலும் கடைக்காரர்கள் குப்பைகளை மட்டும் எடுத்து செல்கிறார்கள் அதனால் குப்பைகள் வீட்டிலும் வீதிகளிலும் அதிகரிக்கும் நிலைமை ஏற்படுவதன் காரணமாக தமக்கு வேறு வழியின்றி காட்டுவதாக சொல்லுகிறார்கள்.

குப்பைகளை கடலுக்குள் கொட்டுவதால் தாங்கள் வாழும் சுற்று சூழல் சுகாதாரம் பாதிக்கப்படுவதை அவர்கள் உணரும்படியான எந்த செயற் திட்டமும் இல்லாத சபைகளாகவே தமிழர் சபைகள் இயங்குகின்றன. எதற்கெடுத்தாலும் சிங்களவன் தருகிறானில்லை விடுகிறானில்லை என்ற மந்திரத்தை சொல்பவர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

இதில் நான்காவதாக உள்ள படம் குருநகர் Jetty ஆகும். சுமார் 25 , 30 வருடங்களுக்கு முன்னர் பாலை தீவு கச்ச தீவு என்று கோயில் பெருநாள் காலத்தில் படகுகள் இங்கிருந்தே செல்லும். நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் ஓர் நண்பர்கள் எல்லோரும் இங்கே jetty இன் உச்சியில் இருந்த பாய்ந்து நீச்சலடிப்போம். அப்போதெல்லாம் ஆழமும் பளிங்கு நீருமாக கடற் தண்ணீர் இருக்கும். தற்பொழுது மிக மோசமான கஞ்சல் கழிவுகள் சூழ்ந்த நீராக அழுக்காக இருப்பது வேதனைக்குரியது.

(Paul Prahalathan)