ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம்: ஒபாமா எச்சரிக்கை

ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி 20-ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.

ஹிலாரி வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அரசு இ-மெயிலை பயன்படுத்தாமல் தனிப்பட்ட இ-மெயில் சர்வரை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஹிலாரியின் 6.5 லட்சம் இ-மெயில்கள் ஊடகங்களில் வெளியாகின.

ஹிலாரியின் இ-மெயில்களை ரஷ்ய உளவுத் துறை ஹேக்கிங் செய்து விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டிருக்கிறது என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அண்மையில் குற்றம் சாட்டியது. இந்த கருத்தை அமெரிக்காவின் எப்.பி.ஐ. போலீஸாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஹிலாரியை தோற்கடிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ரஷ்ய உளவுத் துறை செயல்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருப்பதாவது:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. ஜனநாயக கட்சியின் முக்கிய இ-மெயில்களை ரஷ்ய உளவுத் துறை திருடியுள்ளது. இதற்குப் பதிலடியாக ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம்.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் அபாயகரமான நடவடிக்கைகளை குடியரசு கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத் துறை திரைமறைவு செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுவதை புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆரம்பம் முதலே மறுத்து வருகிறார்.