வட  கொரியா-மலேஷியா: போர் மூளுமா?

(எஸ். ஹமீத்.)
வட கொரியாவுக்கும் மலேசியாவிற்குமிடையில் போர் ஒன்று மூளும் அபாயத்தை அவ்வளவு இலகுவில் மறுதலித்துவிட முடியாத நிலைமைகளே தற்போது காணப்படுகின்றன. வட கொரியாவின் சர்வாதிகார  அதிபர் கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜாங் நம் என்பவர் அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தக் கொலைக்கு உலக நாடுகளினால் தடை செய்யப்பட VX  என்ற இரசாயனம் பயன்படுத்தப்பட்டிருந்தது. சர்வதேசத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இக்கொலையைத் தொடர்ந்து, மலேஷிய போலீசார் சந்தேகத்திற்குரியவர்கள் சிலருடன் மேலும் இரண்டு பெண்களைக் கைது செய்திருந்தனர்.

இவ்விரு பெண்களில் ஒருவர் வியட்நாமைக் சேர்ந்த தேயன் தி ஹூயோங் . மற்றவர் இந்தோனேஷியாவைச் சேர்ந்த சிட்டி அய்ஷ்யா. ஆயினும் தாங்கள் அப்பாவிகள் என்றும் வேடிக்கையான ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் பங்கு கொள்வதாக எண்ணியே வேறு சிலரால் தமக்குத் தரப்பட்ட  குறிப்பிட்ட இரசாயனத்தைத் தாங்கள் கிம் ஜாங் நாமின் மீது பூசியதாகவும் அப்பெண்கள் கூறியுள்ளனர். என்றாலும் கூட, அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைக் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால்  மரண தண்டனையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மலேஷிய அட்டர்னி ஜெனரல் முகமது அபான்டி அலி தெரிவித்திருக்கிறார்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாமுக்குமிடையில்  முரண்பாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இந்த முரண்பாடுகளின் விளைவாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாமென்ற கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், குறிப்பிட்ட  கொலைக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்புகளுமில்லையென்று வட கொரியா அரசாங்கம்  ஆணித்தரமாக மறுத்திருந்தது.
இந்நிலையில் கிம் ஜாங் நாம் கொலை தொடர்பில் மலேஷியாவால் தேடப்படும் குற்றவாளியொருவர் வட கொரியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் ஒரு விமானியென்றும், அந்த விமானியைத் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் மலேஷியா வட கொரியாவைக் கேட்டிருந்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை வட கொரியா நிராகரித்துவிட்டது.
இந்தப் பின்னணியில் தனது நாட்டிலிருந்த வட கொரியத் தூதரை மலேஷியா நாடு கடத்தியது. அதனைத் தொடர்ந்து வட கொரியாவும் அங்கிருந்த மலேஷியத் தூதுவரை நாடு கடத்திப் பழி வாங்கியது.
இதனைத் தொடர்ந்து வட கொரியாவில் இருக்கின்ற மலேசியர்கள் யாரும் நாட்டை விட்டுப் போக முடியாதவாறு வட கொரியா திடீர் அறிவிப்பை வெளியிட்டது. கிட்டத்தட்ட வட கொரியாவுக்குள் மலேசியர்கள் அனைவரையும் சிறைப்பிடித்தது போலான இந்தச் செய்கையால் கோபமுற்ற மலேசியாவும் தற்போது தனது நாட்டினுள்ளே இருக்கும் வட கொரியாவைச் சேர்ந்த எவரும் மலேசியாவை விட்டுச்  செல்லத் தடை விதித்துள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்  போரின் மீது மிகுந்த நாட்டமுள்ளவரென்றும் தனது நாட்டில் ராணுவத்தையும் போராயுதங்களையும் பெருமளவில் குவித்து வைத்திருப்பவரென்றும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அடிக்கடி பயங்கர ஏவுகணைகளை விண்ணில் செலுத்திப் பரிசோதித்துக் கொண்டிருப்பவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்த சங்கதிதான்.  கடந்த தில தினங்களுக்கு முன்பாகக் கூட அவர் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நான்கு ஏவுகணைகளைச் செலுத்த,  அவை ஜப்பானில் போய் விழுந்திருப்பதும் இதனால் ஜப்பானுக்கும் வட கொரியாவுக்கும்  இடையே முறுகல் நிலை தோன்றியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு தென் கொரியாவோடும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வரும் வட கொரியா நியூற்றன் குண்டுகளைத் தம் வசம் வைத்திருப்பதாகவும் உலக அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில், மலேசியாவின் தற்போதைய எதிர்ப்பும் கோபமும் வட கொரியாவை எதுவும் செய்துவிடப் போவதில்லை. மாறாக, போர்ப் பிரியரான வட கொரிய அதிபர் அடுத்த சில தினங்களுக்குள் மலேஷியா மீது போர்ப் பிரகடனம் செய்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!