வதங்கிடுமே வாழைச்சேனை – பெருகிவரும் ஐஸ் தொழிற்சாலைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தலை நகரம் அமைந்துள்ள மட்டக்களப்பு தொகுதி மற்றும் பட்டிருப்பு தொகுதிகளில் உள்ள நகரங்களை விட ஒரு பெருநகரமாக வளரக்கூடிய வாய்ப்பு கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள வாழைச்சேனைக்கு உண்டு. காரணம் இங்குள்ள மீன்பிடி துறைமுகமும், இலங்கையின் முதற்தரமான பாசிக்குடா உல்லாச கடற்கரையும், அதையண்டிய ஹோட்டல் தொழிற்துறையும், இங்கு இருந்த காகித ஆலை, அதன் பின்னர் உருவான கிழக்கு பல்கலைக்கழகம் அனைத்துமே ஒரு பெரும் சமூக பொருளாதார மையமாக வாழைச்சேனையை வளர்த்தெடுக்கும் வாய்ப்புக்களை தந்துள்ளன.

ஆனால் அபிவிருத்திகளின் மறுபக்கம் அதன் பிரதிகூலங்களும் உண்டு என்கின்ற விடயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. பாசிக்குடாவை நோக்கி வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகளை குறிவைத்து பல்வேறு நட்ஷத்திர விடுதிகளும் மதுச்சாலைகளும் இப்பிரதேசத்தில் பெருகி வருகின்றன. அதேபோல மீன் பதனிடுதல் மற்றும் ஹோட்டல்களின் தேவைகள் போன்ற வியாபாரங்களை ஒட்டி பலவிதமான ஐஸ் உற்பத்தி தொழிற்சாலைகளும் இங்கே உருவாகி வருகின்றன. ஏற்கனவே வாழைச்சேனைக்கு அண்மையிலுள்ள கும்புறுமூலை எதனோல் தொழிற்சாலை (தற்காலிகமாக இதன் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன). வாகரை இல்மனைட் தொழிற்சாலை போன்ற வ ற்றால் சுரண்டப்படப்போகின்ற நில, நீர் வளங்கள் பற்றிய அச்சங்கள் நிறைந்துள்ளன. மேலும் இந்த ஐஸ் உற்பத்தி நிலையங்களால் இப்பிரதேசம் விரைவில் தண்ணீர் பஞ்சத்துக்குள் தள்ளப்படும் ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது.

பொ துவாக அ னைத்து தொழி ற்சாலைகளிலும் மூலப்பொருட்களுடன் இணைந்தே தண்ணீர் பயன்படுத்தப்படும். ஆனால் ஐஸ் தொழிற்சாலைகளின் மூலப்பொருளே தண்ணீர்தான் என்கின்றபோது நீர் அளவு கணக்கின்றி செலவிடப்படுமென்பது உறுதி. இதனால் இத்தொழிற்சாலைகளை சுற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள நிலத்தடி நீரின் மட்டம் அதலபாதாளத்தை நோக்கி செல்லும். இதன்காரணமாக பொதுமக்களின் பாவனையில் உள்ள கிணறுகள் வற்றி வறண்டு போவதும் நிகழும். காலப்போக்கில் கிணறுகள் மட்டுமன்றி சுற்றுவட்டாரங்களில் உள்ள களப்புகள், குளங்கள், தோணாக்கள் போன்ற நீர்நிலைகள் கூட வறட்சியை அடைய நேரிடும். ஓரிரு முதலாளிகளின் வருவாய்களை அதிகரிப்பதற்காக பல்லாயிரம் பொது மக்களின் உயிராதாரமான நீருடன் நாம் விளையாட முடியாது. நீர் என்பது மனிதர்களுக்கு மட்டும் முக்கியமானதல்ல. புல்லோ பூண்டோ, புழுவோ, மரமோ, பல்மிருகமோ, பறவையோ, பாம்போ, அனைத்துக் கும் நீரென்பதே உயிராதாரமானதாகும்.

இதன்காரணமாகவே நிலத்தடி நீரை அடிப்படையாக கொண்டியங்கும் மென்பான தொழிற்சாலைகளையும் தண்ணீரை மாசுபடுத்தும் தொழில் சாலைகளையும் நிறுவனங்களையும் மூடிவிடுமாறு கோரும் விழிப்பு கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வீதி ஊர்வலங்களும் உலகம் தழுவிய வகையில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. உலகிலுள்ள பெருநகரங்கள் அனைத்தும் தமது நகர எல்லைகளுக்குள் வாழும் மக்களேயானாலும் தத்தமது சொந்த நிலங்களில் இருந்துகூட அன்றாட தேவைக்கான நீரை பெற்றுக்கொள்வதற்கு தடை விதித்துள்ளன. பொது நீர் வழங்கல்கள் ஊடாகவே மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றது. அந்த அளவு தூரத்துக்கு நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.

ஆனால் நாமோ நிலத்தடி நீரை வர்த்தக மயப்படுத்தும் உரிமையை மிக இலகுவாக அனுமதித்துக்கொண்டிருக்கின்றோம். வாழைச்சேனை பி ரதேச சபை அமைந்துள்ள இடத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தூரத்துக்குள்ளாகவே இரண்டு ஐஸ்உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. லங்கா ஐஸ் பெக்டரி,ஈஸ்டர்ன் ஐஸ் பெக்டரி என்னும் இந்த தொழிற்சாலைகள் வாழைச்சேனை இந்து மயானம் முன்பாக அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கம் முன்பாக நிலத்தடி நீரை உறுஞ்சி போத்தல்களில் அடைத்து விற்பனை செய்கின்ற நிலையம் ஒன்றும் செயற்பட்டு வருகின்றது.

சுங்கான்கேணி மதுபான நிலையம் முன்பாக கூல் மேன் ஐஸ் பெக்டரி என்னும் பெயரில் ஒரு தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் இதற்கு 400 மீற்றர் இடைவெளிக்குள்ளேயே இன்னுமொரு ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வயற்காணிகளாக இருந்த இந்த நிலங்கள் நீரை வர்த்தக பொருளாக மற்றும் தொழிற்சாலைகளாக மாறிவருவது வேதனைக்குரியதாகும். வாழைச்சேனை பிரதேச சபையினர் இவற்றுக்கான அனுமதிகளை எந்த அடிப்படையில் எவ்வித மறுப்புகளுமின்றி வழங்கி வருகின்றார்கள்?

இவ்வாறான வழிகளில் உறிஞ்சப்படும் நிலத்தடி நீரை மீள பதிலீடு செய்வதற்கான சுழற்சிமுறை நீர் முகாமைத்துவம் பற்றி பிரதேச சபையினர் எவ்வளவுதூரம் கரிசனை கொண்டுள்ளனர்? மழை காலங்களில் பள்ளம் படுகுழிகளில் நிரம்பி ஆவியாகி போகின்ற நீரை நிலத்தடி நீராக சேமிக்கும் எத்தனை வழிமுறைகள் இந்த பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன? இவற்றையெல்லாம் செய்யாமல் மக்களின் உயிராதாரமான நீரை வெறும் வர்த்தக முயற்சிகளுக்கு வாரி வழங்கிவிட்டு வாழாதிருத்தல் கூடாது. பிரதேச சபையின் ஆட்புல எல்லைக்குள்ளான நீர் முகாமைத்துவம்(water management) என்பது மக்களுக்கான நீராதாரத்தை உறுதி செய்வதும் நிலத்தடி நீரை பாதுகாக்கின்ற வகையிலான நீர் நிலைகளை பேணுதலும் போஷித்தலுமேயன்றி நீரை வர்த்தகம் செய்வதற்கான உரிமைச் சீட்டுக்களை வழங்குவதல்ல என்பதனை எமது பிரதேச சபையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போதே வரட்சியற்ற காலங்களின்கூட வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள சில கிணறுகளின் நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் சில கிணறுகளில் நீர் வெண்ணிறமானதாக மாறி வருவதாகவும் அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். எனவே வாழைச்சேனையில் பெருகி வரும் ஐஸ் உற்பத்தி நிலையங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அனுமதிகளை படிப்படியாக இரத்து செய்வதும் பற்றி பிரதேச சபையினர் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
“மாறாக செயற்பட்டோமானால் காலப்போக்கில் எமது பிரதேசங்கள் பாலைவனங்களாக மாறிவிடும் என்கின்ற எச்சரிக்கைகளை யாரும் இலகுவானதாக கடந்து செல்ல முடியாது. ஏனெனில் மூன்றாம் உலக போரென்பது தண்ணீருக்கானதாகவே இருக்கும் என்கின்ற எதிர்வு கூரல் பொய்யானதல்ல.
மனிதனது இயற்கையை அரவணைத்து செல்லமுடியாத கண்முடித்தனமான செயற்பாடுகளால் இந்தியாவின் புண்ணிய நதிகள் என்றும் தீரா நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்ட மருத்துவ தன்மை வாய்ந்தவை என்றும் போற்றப்பட்ட கங்கை, ஜமுனை, காவேரி அனைத்துமே இன்று இறந்த நதிகளாகி விட்டன. உலக புகழ் கொண்ட லண்டன் நகரில் ஓடும் ஜேம்ஸ் நதி இறந்த நதியாகவே அறிவிக்கப்பட்டாகிவிட்டது. பாரத மாதாவின் தெய்வீக நதியென புகழப்பட்ட சரஸ்வதி நதி இருந்த தடயங்களே இன்று இல்லை. அப்படியொரு நிலைமை களப்புகளால் நிறைந்த எமது மீன்பாடும் தேனாட்டுக்கும் வந்துவிடக்கூடாது.”