வன்புணர்வாளர்களுக்காக வக்காலத்து வாங்கும் வடக்கு முதல்வர்!?

விதியே நீ வடபகுதி தமிழரை என்ன செய்யப்போகிறாய் என்ற கேள்வி தொடரும் நிலையில் நாட்டு வழக்கு ஒன்று என் மனதில் எழுகிறது. ‘’ இருந்ததும் அது வந்ததும் அது சிவன் தந்ததும் அது’’ எனும் சொல் வழக்கே அதுவாகும். அதுவே இன்றைய வடக்கின் நிலை. சிவசிவ என நெற்றியில் நீறணியும் கம்பவாருதி உட்பட நீலகண்டனும் உமையிடம் அழுது பால் அருந்திய சம்மந்தரும் கூட்டி வந்து, பட்டு வேட்டி குங்கும பொட்டுடன் குரு வணக்கம் சொல்பவரை அரியணையில் அமர வைத்தனர்.

என்ன மாதவம் செய்தோம் இந்த பெருமகன் எங்கள் இன்னல் தீர்க்க முன்வர, என சுற்றி சுழன்று வாக்குகளை இலட்சத்துக்கு மேல் போட வைத்து, வென்றவருக்கு முடி சூட்டி கையில் வேலும் கொடுத்து, சென்றுவா உரிமைகளை வென்று வா என அனுப்பினர் அப்பாவி மக்கள்.

சாம பேத தான தண்ட வழிமுறைகள், காரியம் சாதிக்க ஏற்புடைய முறைமைகள் என்பதால், முதலமைச்சராக அவர் மகிந்த மாளிகைக்கு சென்றதை நாம் கணக்கில் எடுக்கவில்லை. ஆளுநர் சார்பாக செயல்ப்படும் பிரதம செயலாளரை மாற்ற முயன்றபோதும் ஏற்றுக்கொண்டோம்.

தான் விரும்பியபடி தான் அமைச்சரவை தெரிவு என்றபோதும் தலை ஆட்டினோம். இத்தனைக்கு பின்பும் தன்னை தெரிவு செய்த கட்சிக்கு எதிராக ஒரு அரசியல் அமைப்பு உருவாக ஆசீர்வாதம் வழங்கியபோதும், அது சிறு சிறு சல சலப்புடன் அடங்கிய போதும் அமைதி காத்தோம்.

ஆனால் தேர்தல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களிக்குமாறு சிலேடையா கூறிய செய்திதான் சுமந்திரன் போன்றவரை சீற்றமுற செய்தது. ‘’வீடு’’ – தமிழ் அரசு கட்சி சின்னம். அதை விட்டு வெளியேறி வாக்களிக்க சொன்னது யாருக்கு என்பது வெள்ளிடை மலை.

உங்களை தெரிவு செய்த கட்சிக்கோ அல்லது கூட்டமைப்புக்கோ நீங்கள் விசுவாசம் காட்ட தேவை இல்லை. காரணம் அவர்கள் உங்களை கூட்டி வந்தது கீரிக்கும் பாம்புக்கும் சண்டை என கூவி கல்லா நிறைந்ததும் நாளைக்கு தான் சண்டை என கூறும் வித்தை காட்டுபவன் செயல் போன்றது.

ஆனால் மக்கள் உங்களுக்கு வாக்களித்தது இன்றைக்கு எம்மை நெருக்கும் பிரச்சனைக்கு உங்கள் வரவு நிரந்தர தீர்வு தரும் என்ற ஒரே நம்பிக்கையில் தான். மாகாண நிர்வாகம் சீராக இருந்தால் மத்தியில் இருந்து பகிரப்பட்ட அதிகாரங்களை கொண்டே பல விடயங்களுக்கு தீர்வு காணலாம்.

அதை கூட செய்வதற்கு சில பல தடைகள் வரும் போது நீதிமன்றை நாடலாம். நீண்ட கால நீதி பரிபாலன அனுபவம் கொண்ட நீதி துறையில் உயர் பதவியில் இருந்தவர் நீங்கள் என்பதால் சட்டப்படி பெறக்கூடிய விடயங்களை பெற்றுத்தருவீர்கள் என சாமானிய மக்கள் நம்பினார்கள்.

மேலதிகமாக உங்கள் சம்மந்தி வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதி மகிந்தவின் மந்திராலோசனை குழுவில் இருப்பதால் அதுவும் உங்கள் முயற்சிக்கு உதவும் என, நீங்கள் முதல்வராக மகிந்த முன் பதவி ஏற்ற படத்தில் உங்கள் சம்மந்தியும் இருந்ததை கண்டு பலரும் ஊகித்தனர்.

அத்தனையும் பகல் கனவாக போகும் என்று சத்தியமாக நாம் நம்பவில்லை. வசித்த ஊர் விட்டு விலகி, வாழ்ந்த வீட்டை இழந்து, காடு கரம்பை எல்லாம் அலைந்து, உறவுகளை கண்முன்னே தொலைத்து, முள் வேலிகளில் முடங்கி இன்று அகதிமுகாம் சகதியில் நாம் வாழும் வாழ்வு மாறும் என்று எண்ணியே, உங்களை பெரு விருப்புடன் மக்கள் தெரிவு செய்தனர். ஆனால் நீங்கள் செய்தது என்ன. பதவி ஏற்க மட்டும் மகிந்த மாளிகை சென்ற நீங்கள் அதிகார பகிர்வு கேட்க என்ன முயற்சி செய்தீர்கள்? உங்கள் சொல்கேளா பிரதம செயலரை மாற்றிவிட்டு இன்றுவரை நீங்கள் சாதித்தது என்ன?

எங்கள் பிள்ளைகள் இன்னமும் விசாரணை இன்றி சிறைகளில் வாடுகிறார்கள். உங்கள் நீண்ட கால நீதி பரிபாலன அனுபவம் கொண்டு அவர்களை விடுவிக்க என்ன முயற்சிகள் செய்தீர்கள்? இராணுவ பின்புலம் கொண்ட ஆளுனரை மாற்றிய நீங்கள் புதிய ஆளுனரிடம் பெற்றது என்ன?

ஆயிரம் கேள்விகள் உண்டு உங்களிடம் கேட்க. ஆனால் பதில் மட்டும் உங்களிடம் இருந்து வராது. உங்கள் பதவி அதிகாரம் படோடாபம் மமதை மட்டுமே உங்கள் பேச்சில் நடையுடை பாவனையில் தெரிகிறது. மாறாக உங்களிடம் கேள்வி கேட்டால் நக்கல் நளின பதில்கள் தான் கிடைக்கிறது.

நல்லவரோ கெட்டவரோ அவரது பழைய வரலாறு அல்லது அவர் சார்ந்திருந்த அண்மைய அமைப்பு என்பனவற்றுக்கு மேலாக தன்னை எதிர்கட்சி தலைவராக மட்டுமே நினைத்துக்கொண்டு ஆதாரங்களுடன் குற்றசாட்டுகளை வைக்கும் எதிர்கட்சி தலைவரையே நீங்கள் தரம் தாழ்ந்து கேவலமாக ஏளனம் செய்கிறீர்கள்.

பாராளுமன்ற சம்பிரதாயத்தில் எதிர்கட்சி தலைவர் பிரதமருக்கு சமமானவராக கருதப்படுவது மரபு. அந்த மரபையே மீறும் செயலை செய்வது எவ்வளவு மடமை. ”கேள்வி கேட்கா மன்னன் கெட்டளிவான்” என்பது வள்ளுவர் வாக்கு. இது கூட தெரியாமலா குருவணக்கம் செய்கிறீர்கள்?

அதிகார பரவலாக்கம், சிறைவாடுவோர் விடுதலை, நில ஆக்கிரமிப்பு விடுவிப்பு, அகதிகள் மீள் குடியேற்றம், திட்டமிட்ட போதை பொருள் விநியோகம், சமூகவிரோத செயல்கள் என பலவாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் மக்கள், முதல்வர் ஏதாவது செய்வார் என்றே நம்பினார்கள்.

ஆனால் பகிரப்பட்ட அதிகாரங்களளையே செயல்படுத்தாத வினைத்திறன் அற்ற உங்கள் செயலால் அவர்கள் இன்னல்கள் தீரவில்லை. வரும் நிதியை பயனுள்ள முதலீடுகளில் செலவிட திட்டம் வகுக்க முடியாத உங்கள் நிலையால் பெரும் நிதி மீண்டும் மத்திக்கே சென்றுவிட்டது.

நீங்கள் தெரிவு செய்த அமைச்சர்களே ஊழல் செய்தார்கள் என நீங்களே கமிசன் வைத்து கண்டு பிடித்தும் நடவடிக்கை எடுக்க தாமதித்தீர்கள். இது பற்றி பேசுவோரை எள்ளி நகையாடிநீர்கள். உங்களுக்கு பிடித்தமானவரை நியமிக்கும்படி ஐ நா பிரதிநிதிக்கு சிபாரிசு செய்கிறீர்கள்.

இத்தனைக்கும் மேலாக நீங்கள் சத்தம் போடாமல் செய்த கேவலம் கேட்ட செயல் ஒன்று இன்று அம்பலத்துக்கு வந்துள்ளது. உங்கள் ஆதர்சன குருவும் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை குற்ற சாட்டில் நீதிமன்றங்களின் தீர்ப்பின்படி சிறை சென்றவருக்காக வக்காலத்து வாங்கியதே அது.

அன்று அவ்வாறான உங்கள் செயல் உங்களின் தனிப்பட்ட விருப்பு என கொண்டாலும் அதற்கு மேலாக இந்திய பிரதமர் எம் நாட்டுக்கு வந்த போது நீங்கள் வைத்த கோரிக்கை தான் மிக கீழ்த்தரமானது. காரணம் இப்போது நீங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர். தனி நபர் அல்ல.

எங்கள் உறவுகள் சிறையில் வாடுகிறார்கள் அவர்களை விடுவிக்க உதவுங்கள் என்றோ, எங்கள் மக்களின் வாழ்விடங்களை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தாருங்கள் என்றோ, அகதிகளாக அல்லலுறும் மக்களுக்கு நிவாரண உதவிகள் தாருங்கள் என்றோ கேட்கவில்லை.

நீங்கள் கேட்டது ஒன்றே ஒன்று தான். உங்கள் குருநாதர் ஆன செக்ஸ் சாமியார் என அறியப்பட்ட பிரேமானந்தாவுக்கு ஒத்தாசை புரிந்து அந்த பாதக செயலில் உதவியதாக இந்திய நீதிமன்ற தீர்ப்பின்படி தண்டிக்கப்பட்ட நால்வரின் விடுதலையில் தலையிடுமாறு கோரிக்கை வைத்தீர்கள்.

உங்கள் இளைப்பாறிய தின பேச்சு என் ஞாபகத்தில் வருகிறது. உங்கள் நீதிபரிபாலன கடமை காலத்தில் நீதி சேவையில் அரசியல் தலையீடு இருந்தது பற்றி குறைபட்டு கொண்டீர்கள். சிராணி பண்டாரநாயக்கவின் மீது மகிந்த அரசு எடுத்த அந்த நடவடிக்கை பற்றியும் விமர்சித்தீர்கள்.

அந்த இடத்தில் நீதி சேவை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை பதிவு செய்தீர்கள். அந்த நிலைப்பாடும் உங்களை வடக்கு முதல்வராக தெரிவு செய்வதற்கான ஒரு காரணம் என்பதை மக்கள் அறிவர். அந்த நிலைப்பாட்டை மாற்றி எப்படி இவ்வாறு இந்திய பிரதமரிடம் கேட்டீர்கள்.

”தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என அடிக்கும்” என்பது ஆச்சிமார் சொல்லாடல். அது போலவே உங்கள் குருசாமியுடன் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டிக்கப்பட்டவரை விடுவிக்க இந்திய பிரதமரை நீதி துறையின் தீர்ப்பில் தலையிட சொன்னீர்கள்.

தன்னை பெத்த தாய் கிண்ணி பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் பண்ணியது போலவே வெலிக்கடை களுத்துறை பூசா அனுராதபுரம் வவுனியா என இருக்கிற சிறைகளில் எல்லாம் விசாரணை இன்றி, தீர்ப்பு இன்றி வாடும் எம்மவரை விடுவிக்க நீங்கள் முயலவில்லை.

அந்த பாலியல் வன்புணர்வு குற்றவாளிகள் என இந்திய நீதிமன்றில் இரட்டை ஆயுள் மற்றும் ஒற்றை ஆயுள் தண்டனை பெற்றவரும் உங்கள் மாகாணத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களை விடுவிக்க உறவுகள் உங்களிடம் கேட்டது உண்மை. இருந்தும் உங்கள் செயல் ஏற்புடையது அல்ல.

காரணம் இன்று நீங்கள் முதல்வராக இருப்பது இரத்தமும் சதையுமாய் உறவுகளை கண்முன்னே பறிகொடுத்த, அகதிகளாக பல்வேறு இடப்பெயர்வுகளுக்கு முகம் கொடுத்த, இன்றுவரை எங்கே எம் உறவுகள் என தேடுகின்ற, சிறை வாசலில் காவல் இருக்கின்ற மக்களின் மண்ணில்.

அவர்களின் துயர் பற்றி எதுவுமே இந்திய பிரதமரிடம் பேசாத, கோரிக்கை வைக்காத நீங்கள் இரத்தம் சூடேறி கொழுப்பெடுத்து, வன்புணர்வு குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் பல சாட்சிகளுடன் ஆதாரங்களுடன் நிரூபிக்கபட்டு, தீர்ப்பு வழங்கப்பட்ட விடயத்தில் அரசியல் தலையீடு கேட்டீர்கள்.
வடக்கு முதல்வராக உங்களை விமர்சிக்க என்றுமே நான் தயங்கியதில்லை. காரணம் உங்களது வினைத் திறன் அற்ற நிர்வாகம். அன்று அத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் ஒன்றரை வருடங்கள் மட்டும் இயங்கிய வடக்கு கிழக்கு மாகாண சபை அனுபவத்தில் இது என் உறுதியான முடிவு.

ஆனால் உங்கள் நீதி துறை சேவை பற்றிய விமர்சனம் இதுவரை இல்லாத எனக்கு உங்கள் செயல் அது பற்றிய சந்தேகத்தை எழுப்புகிறது. நீதிமான்கள் நாகலிங்கம், தம்பையா, ஸ்ரீஸ்கந்தராஜா என எம் மண்ணின் மைந்தர்கள் பலர் பற்றி அறிந்த எனக்கு உங்கள் மீதான மதிப்பு மாற்றம் பெறுகிறது.

சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு கொண்டவர் நீங்கள் என எண்ணத்தோன்றுகிறது. காரணம் பிரதம நீதி அரசராக இருந்த சிராணி பண்டாரநாயக்க தன் நியாயமான தீர்ப்பால் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானார். அதே பதவிக்கு வந்த நளின் டி சில்வா அதற்கு விலை போனார்.

ஒருவர் மாகாண அதிகாரங்களை பறிப்பதை எதிர்த்தார் அதனால் பதவி இழந்தார். அடுத்தவர் இணைந்த வடக்கு கிழக்கை பிரித்தார். அதனால் பலன் அடைந்தார். நீங்களும் உங்கள் நீதவான் பணி காலத்தில் நிமிர்ந்து நின்றீர்களா? அல்லது வளைந்து கொடுத்தீர்களா? இதுவே என் கேள்வி.

காரணம் உங்கள் செயல். நீதி துறையில் அரசியல் தலையீடு என்று இளைப்பாறிய அன்று சீற்றம் கொண்ட நீங்களே இன்று இந்திய பிரதமரை உங்கள் விருப்பு தேர்வுகளின் விடுதலை வேண்டி தலையிடுமாறு வேண்டுகிறீர்கள். ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி செல்லாச்சி என்பது இது தானா?

நாளை புங்குடுதீவு வித்தியா வன்புணர்வு கொலையாளிகள் விடுதலை உட்பட செம்மணியில் வன்புணர்வின் பின் புதையுண்ட கிரிசாந்தி மற்றும் எங்கள் தாய்மார், அக்காமார், தங்கைகள் அத்தனை பேரையும் வேட்டையாடிய மனித மிருகங்களையும் விடுவிக்க முயலுங்கள் செக்ஸ் சாமியார் சீடனே.

அன்று பாவிகளை இரட்சிக்க சிலுவை சுமந்த இயேசு பிரானை உங்கள் குருவும் காம வெறியனும் கொலைகாரனுமான பிரேமானந்தாவுடன் ஒப்பிட்ட வேளையிலேயே நீங்கள் அகிலத்தின் முன் அம்மணமாய் நின்ற காட்சி தெரிந்தது. கூடவே ‘’தேரா மன்னா’’ என்று கையில் சிலம்புடன் கண்ணகியும் காட்சி தந்தாள்.

‘இறுதியாக ஒன்றை மட்டும் உறுதியாக கூறுவேன் ”அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”.

(ராம்)