வாங்கிக் கட்டும் ட்ரம்ப்

நியூசிலாந்து வழிகாட்டுகிறது

ஒரு மக்கள் நல அரசு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது நியூசிலாந்து. நியூசிலாந்து அரசு அசுர வேகத்தில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நாடு ரூ.5.4 ஆயிரம் கோடி நிவாரணம் அறிவித்திருக்கிறது. கரோனா தொற்றியிருக்கலாம் என்ற ஐயத்தின் கீழ் தங்களைத் தனிமைப்படுத்தியிருப்பவர்கள், வீட்டிலிருந்து வேலை செய்ய இயலாத, ஆனால் தனிமைப்படுத்திக்கொள்வதால் வீட்டில் இருக்க நேரிட்டவர்கள், கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களைப் பார்த்துக்கொள்ளும் அவர்களின் உறவினர்கள் போன்றோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும். இந்தத் தொகை நியூசிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4% ஆகும். இது மற்ற நாடுகள் கொடுப்பதாகக் கூறியிருக்கும் நிவாரண உதவியை விட பல மடங்கு அதிகம். பணக்காரர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளானால் அவர்களால் பொருளாதாரரீதியில் சமாளிக்க முடியும். ஆனால், கூலித் தொழிலாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? அதுவும் ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நபருக்கு ஏற்பட்டால் அவர்களின் நிலை என்னவாகும்? ஆகவே, இந்தியாவும் இதுபோன்ற திட்டத்தை அவசியம் முன்னெடுக்க வேண்டும்.

வாங்கிக் கட்டும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எல்லாவற்றிலும் தடாலடிதான். கரோனா வைரஸை ‘சீன வைரஸ்’ என்று குறிப்பிட்டு, தற்போது சீனர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறார். “சீன வைரஸால் பாதிக்கப்பட்ட விமானத் துறை உள்ளிட்ட துறைகளை அமெரிக்கா வலுவாக ஆதரிக்கும். முன்பைவிட பலமானவர்களாக நாம் இருப்போம்” என்று தனது ட்விட்டரில் அவர் பதிவிட்ட பிறகு சீன அரசும் மக்களும் பொங்கியெழுந்திருக்கிறார்கள். “பழியை அடுத்தவர் மீது போடும் செயல்” என்று இதை சீனா கண்டித்திருக்கிறது. பொதுவாக, இதுபோன்ற கொள்ளைநோய்கள் பரவும்போது அதற்குப் பெயர் வைப்பதில் அறிவியலாளர்கள் கவனமாக இருப்பார்கள். ஒரு நாடு, இனம், மொழியினர் என்று எவருமே அவமதிப்புக்குள்ளாகக் கூடாது என்ற எச்சரிக்கையுடனே பெயரிடுவார்கள். இப்படித்தான் 1918-ல் பிரான்ஸில் தோன்றி உலகமெங்கும் பரவிய கொள்ளைநோயை பிரெஞ்சுக்காரர்கள் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என்று தவறாக அழைத்து, ஸ்பானியர்களின் கோபத்துக்குள்ளானார்கள். ஆகவேதான், அந்த ஃப்ளூவை ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என்று அழைப்பது ஸ்பெயினில் சட்டப்படி குற்றமாகும். ‘நாளை அமெரிக்காவில் ஒரு வைரஸ் தோன்றி உலகமெங்கும் பரவி, அதை ‘அமெரிக்க வைரஸ்’ என்று சொன்னால் அமெரிக்கர்கள் ஏற்றுக்கொள்வார்களா?’ என்று பதிலுக்குக் கேட்கிறார்கள் சீனர்கள்.