வாவ் கண்ணம்மா

டிசம்பர் 5 ம் தேதி மாலை, முதல்வர் தன் இறுதி மூச்சுகளில் வாழ்ந்து கொண்டிருந்த தருணம், பிரளயத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட பறவைகள் போல மொத்த மக்களும் தத்தம் கூடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். என் கூட்டை நோக்கி விரையும் முன், என் கூட்டு பறவைகளுக்கான அடுத்தநாள் அத்தியாவசிய உணவை வாங்க கே.கே.நகர் அய்யப்பன் கோயில் அருகில் கிரேஸ் பல்பொருள் அங்காடியில் நுழைந்தேன். ஆனால் உள்ளே நிற்கக்கூட இடமில்லாமல் கலவரமும் கவலையும் ஒரு சேர அங்காடியின் ஒவ்வொரு அங்குலமும் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்தது. நானும் சில உணவு பொருட்களை தேடி அதில் நீந்த தொடங்கினேன். தீடிரென ஒரு குரல் அயர்ச்சியும் அன்புமாக என்னை நோக்கி ஒலித்தது.

“அண்ணே, இது உங்களுதா ?” என கையில் ஒரு தங்க பிரேஸ்லெட் சகிதம் பணியாளர் சீருடையில் ஒரு பெண்.
“ஐயயோ, இவன் என் ஓனர் இல்லை, கொடுத்திறாதே” என அவள் கையில் கத்தி கதறிய ப்ரேஸ்லெட்டை பார்த்தேன், கண்டிப்பாக மூன்று பவுனுக்கு குறையாமல் இருக்கும்.
“இல்லைம்மா, என்னுது இல்லை ! ஏன் என்ன ஆச்சு ?”
“யாரோ இதை கீழ போட்டாங்கன்னே, யார்னே தெரில!!” என தங்கம் தொலைத்து விட்ட அதன் உரிமையாளரை தேடி அந்த கூட்டத்தில் தானும் தொலைந்து போனாள். எட்டி பார்த்தேன், இன்னொரு அண்ணனிடம் விசாரித்து கொண்டிருந்தாள் , இப்படியே பல அம்மாக்கள், தம்பிகள் என அவைவரிடமும் விசாரணை நடந்தேறியது, ஆனால் அடுத்தவர் தங்கத்தை தத்தெடுக்க யாரும் தயாராய் இல்லை.

‘இதென்னடா எனக்கு வந்த சோதனை என தங்கம் இவளை பார்க்க, கண்டுபிடிச்சிடலாஞ்சாமி, கவலைப்படாத’ என இவளும் ஒன்றாக தங்க வேட்டையை தொடர்ந்தனர். அப்போதுதான் ‘முதல்வர் இறந்துவிட்டார்’ என்ற தந்தி டிவியின் வதந்தி பலபேருக்கு பயத்தில் வாந்தி பேதியை வர வைத்தது. வாங்கியதை அப்படியே போட்டுவிட்டு மக்கள் வீட்டுக்கு விரைய தொடங்கினர், தொலைதொடர்பு நெருக்கடியால் ‘பில்லிங்’ நிறுத்தப்பட்டு கடையின் ஷட்டர் பாதி சாத்தப்பட்டது. அப்போதும் விடா முயற்சியாய் தக்காளி மூட்டைக்கு பக்கத்தில் நின்று தங்கம் யாருதுங்க என கேட்பவளை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியுமாய் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது, “என்னுதுங்க.. ஏங்க அது என்னுதுங்க” என்ற ஒரு மெல்லிய குரலுடன் நன்றியும், நாணமுமாய் அதன் உரிமையாளர் தங்கத்தை நோக்கி விரைந்தார். சிறு விசாரணைக்கு பின் அவரிடம் ப்ரேஸ்லெட்டை கொடுத்துவிட்டு அவரைவிட அளவற்ற மகிழ்ச்சியுடன் திரும்பிய பெண்ணிடம் சில கேள்விகள் கேட்டேன்.
“இவ்வளவு களேபரத்திலும் அந்த தங்கத்தை கொடுத்தே ஆகணும்னு எப்படிம்மா உனக்கு தோணுச்சு ?”

“இல்லைண்ணே, ஒரு குண்டுமணி தங்கம் வாங்கிறது எவ்வளவு கஷ்டம்னு யாருக்கு தெரியுமோ இல்லையோ, எனக்கு நல்லா தெரியும்” என தன் வெறும் கைகளை ஆட்டி சொன்னபோது கண்களில் கண்ணீர் பனிக்க ஒன்றை உணர்ந்தேன், வறுமையில் நேர்மை என்பது தங்கத்தை விட விலைமதிப்பற்றது, பிரகாசமானது, பரிசுத்தமானதும் கூட..
“சரி தவற விட்ட தங்கத்தை இவ்வளவு நேர்மையா, சாதாரணமா திருப்பி கொடுத்திருக்கியே! உன் பேரு என்னம்மா ? ”

“செல்வகுமாரி’ ண்ணே”.

– ஹரி