விக்னேஸ்வரனின் தடுமாற்றம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த பத்து நாட்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உட்பட மூன்று ஊடக அறிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். இப்போதெல்லாம் ஊடகவியலாளர்களால் எழுப்பப்படும் சிக்கலான கேள்விகளுக்கு உடனடியாக (நேரடியாக) பதிலளிப்பதைக் குறிப்பிட்டளவில் தவிர்த்து வருகின்ற முதலமைச்சர், அந்தக் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாராந்தம் பதிலளித்து வருகின்றார். அது, கேள்வி- பதில் அறிக்கையாக வெளியாகி வருகின்றது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கேள்வி- பதில் அறிக்கைகள் மிகவும் பிரபலமானவை. முதுமை காரணமாகக் கருணாநிதி செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர், அவரின் கேள்வி- பதில் அறிக்கைகள் நின்று போனது.

அந்த இடத்தை இப்போது முதலைமைச்சர் விக்னேஸ்வரன் பிடித்துக் கொண்டிருக்கின்றார். ஊடகவியலாளர்களின் கேள்விகளை நேரடியாக எதிர்கொண்டு உடனே பதிலளிப்பதற்கு சமயோசிதம் அவசியமானது. குறிப்பாக, அரசியலில் சமயோசிதம் தவறும் இடங்கள் சிக்கல்களை ஏற்படுத்திச் சிக்க வைப்பன. விக்னேஸ்வரன், இவ்வாறான சிக்கல்களைப் பல தடவைகள் எதிர்கொண்டிருக்கின்றார்.

அதிலும் குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த பங்காளிக் கட்சிகளை ‘இரத்தக்கறை தோய்ந்தவர்கள்’ என்று அழைத்தது முதல், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ‘போர்ப்பயிற்சி பெற்றவர்களால் குற்றச்செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன’என்று கூறியது வரை, அவர் தடுமாற்றமான பதில்களை வழங்கிச் சிக்கலுக்குள் மாட்டியிருக்கின்றார்.

அதன் பின்னர், தான் கூறியதிலிருந்து பின்வாங்கி, விளக்கமளிக்கும் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றார். இவ்வாறான நிலைமைகளை அடுத்தே அவர், கேள்வி- பதில் அறிக்கைகளை வெளியிடுவதற்கு தீர்மானித்திருக்கலாம்.

கடந்த 31ஆம் திகதி, தனது அரசியல் பிரவேசத்துக்கான அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், ஊடகங்களைக் கண்டால் பயமாக இருக்கின்றது என்றார். “…சடுதியாக ஒலிவாங்கிகளை முன்னால் நீட்டி கேள்விகளைக் கேட்கிறார்கள். அந்தக் கேள்விகளுக்கு உடனடியான பதிலளிக்க முடியவில்லை. உடனடியாக ஏதாவது கூறினாலும், அதை வைத்து விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதனாலேயே, பதில் கூறுவதில்லை…” எனும் தொனியில் பேசியிருந்தார்.

ரஜினிகாந்தின் இந்த நிலையை ஒத்த பதில்களைப் பல தருணங்களில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஊடகவியலாளர்களிடம் கூறியிருக்கின்றார். நிலைமைகளைச் சமாளிப்பதற்காக கேள்வி- பதில் அறிக்கை வடிவத்தை அவர் தெரிவு செய்த போதிலும், அவரின் ஒவ்வோர் அறிக்கைகளும் ஒன்றோடு ஒன்று முட்டியும் மோதியும் முரண்பட்டும் கொண்டுமிருக்கின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை அமைக்க நினைத்த தேர்தல் கூட்டணி, விக்னேஸ்வரனின் பின்வாங்கலால் சாத்தியமில்லாமல் போனது. அது தொடர்பில், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்த புளொட் தவிர்ந்த கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் பெரும் ஆதங்கம் உண்டு. அதையடுத்து, பேரவையில் அங்கம் வகித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை அமைத்து ‘சூரியன்’ சின்னத்துக்குள் சென்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, தமிழ்த் தேசியப் பேரவை என்கிற புதிய பெயரோடு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்துக்குள் கலந்தது. ஆனால், புதிய தேர்தல் கூட்டணிக்கான முயற்சிகள் தோல்வியடைந்ததும், தமிழ் மக்கள் பேரவையிடமிருந்து எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிக்கைகளும் வெளியாகியிருக்கவில்லை. கிட்டத்தட்ட உறங்குநிலை அமைதியொன்றை பேரவைக்காரர்கள் பேணிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில், பேரவையின் ‘எழுக தமிழ்’ அடையாளத்தையும் தீர்வுத் திட்ட யோசனைகளையும் யார் வைத்துக் கொள்வது என்கிற பிடுங்குப்பாடு, ‘சூரியன்’ சின்னத்தில் வரும் சுரேஷூக்கும் ‘சைக்கிள்’ சின்னத்தில் வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணிக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

இன்னொரு பக்கம், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆதரவு யாருக்கானது என்கிற விடயத்தைப் பங்கிடுவது சார்ந்தும் இந்த இரண்டு தரப்புகளுக்குள் மறைமுகமாக முட்டல் மோதல் நீடிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளையினரும் விக்னேஸ்வரனின் படத்தைப் பிரச்சாரங்களுக்கு பாவித்து வந்தார்கள்.

இந்த இடத்தில், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் என்கிற அடையாளத்தை நேரடியாகப் பாவிப்பதிலிருந்து தவிர்த்து, புத்திசாதுரியமாகப் பேரவையின் தீர்வுத் திட்டமே எமது தேர்தல்கால முன்வைப்பு என்கிற கட்டத்துக்குள் நகர்ந்துவிட்டார்கள். இது, தமிழ் மக்கள் பேரவை என்கிற அடையாளத்தை ஒட்டுமொத்தமாகச் சுமப்பதற்கான யுத்தி.

ஆனால், சுரேஷ் அணியோ எப்போதும் அவசரப்படுவது போலவே, இப்போதும் விக்னேஸ்வரன் என்கிற நபரின் அடையாளத்தைத் தம்மோடு பொருத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து தேர்தல் பிரசாரங்களில் பேசி வந்தது.

குறிப்பாக, அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், சூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என்று தெரிவித்து, விடயங்களைக் கோட்டை விட்டிருக்கின்றது. அதனால், சூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுவதற்கான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அறிவிப்பதற்காகவும் முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டி வந்திருக்கின்றது.

கடந்த நத்தார் தினத்துக்கு மறுநாள், முதலமைச்சர் வெளியிட்ட கேள்வி- பதில் அறிக்கையில், தமிழரசுக் கட்சியையும் அதன் முடிவெடுக்கும் தலைமைகளையும் பெருமளவு விமர்சித்திருந்தார். அத்தோடு, தனது அரசியல்- தேர்தல் கால நிலைப்பாடு என்பது தமிழ் மக்கள் பேரவையின் கருத்துகளை- நிலைப்பாட்டை ஒத்தது என்றும் கூறியிருந்தார்.

குறித்த அறிக்கைக்கும், 2015 பொதுத் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கைக்கும் பெருமளவு இணக்கம் உண்டு. ஆனால், அந்த அறிக்கையைச் சமூக ஊடகங்களும் புலம்பெயர் ஊடகங்களும் கருத்தில் எடுத்துக்கொண்ட அளவுக்குத் தாயக மக்கள் கருத்தில் எடுக்கவில்லை. அதனாலேயே, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவர் தன்னுடைய நிலைப்பாடுகளிலிருந்து குறிப்பிட்டளவு பின்வாங்கும் நிலையும் ஏற்பட்டது. ஆனால், இம்முறை வெளியான அந்தக் கேள்வி- பதில் அறிக்கையை சமூக ஊடகங்களும் பெரிதாகக் கொண்டு சுமக்கவில்லை.

ஆனால், அந்த அறிக்கையைக் கொண்டு விக்னேஸ்வரனின் கடந்த கால நிலைப்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதைத் தமிழரசுக் கட்சி மிகத்திறம்படச் செய்திருக்கின்றது. கடந்த இரண்டு வருட தமிழ்த் தேசிய அரசியலில், எம்.ஏ.சுமந்திரன் எதிர் சுரேஷ்; சுமந்திரன் எதிர் கஜேந்திரகுமார்; சுமந்திரன் எதிர் விக்னேஸ்வரன் என்கிற நிலைப்பாடே நீடித்து வந்தது.

ஆனால், இம்முறை விக்னேஸ்வரனின் அறிக்கைக்குத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்தைக் கொண்டு, பதிலளிக்க வைத்திருக்கின்றார்கள். அது, தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிக்கையாக மாத்திரமல்லாமல், சுமந்திரன் எதிர் விக்னேஸ்வரன் என்கிற அரசியல் அடையாளத்தைத் தவிர்ப்பதற்குமாகும்.

ஏனெனில், சுமந்திரன் எதிர் விக்னேஸ்வரன் என்கிற நிலையைப் பேணுவது என்பது, வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் விக்னேஸ்வரனை அரசியல் அரங்கில் மேல் நிலையில் வைத்துக் கொண்டிருக்கும். அதைத் தவிர்க்க வேண்டிய தேவை, தமிழரசுக் கட்சிக்கு உண்டு. அதன்போக்கிலேயே, குறித்த அறிக்கையில் சுமந்திரனின் பெயரைக் குறிப்பிட்டு விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியிருந்த போதிலும், சுமந்திரன் பதிலளிக்கவில்லை என்று தோன்றுகிறது.

அதிக தருணங்களில், தன்னுடைய கருத்துகள் விமர்சனங்களே இறுதியானது என்கிற தோரணையில் முதலமைச்சர் இருந்து வந்திருக்கின்றார். ஆனால், தன்னுடைய கருத்துகளுக்கான எதிர்வினையை எதிர்கொள்வது சார்ந்து அவர் அதிக பதற்றமான மனநிலையில் இருக்கின்றார்.

இதனாலேயே, அவருடைய நிலைப்பாடுகள் சார்ந்து உறுதியான நிலையொன்று உருவாகியிருக்கவில்லை. அதனை, மக்கள் நன்றாக உணர்ந்து வைத்திருக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில், தன்னுடைய விமர்சனங்களுக்குத் தமிழரசுக் கட்சி பெரியளவில் பதிலளிக்கும் என்று விக்னேஸ்வரன் நினைத்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதுவும் துரைராஜசிங்கத்தை வைத்து, நிகழ்ந்தவைகள் என்ன என்று கடந்த காலத்துக் காட்சிகளைக் கிளறுவார்கள் என்றும் அவர் நினைத்திருக்க மாட்டார்.

எனினும், அவரின் எதிர்பார்ப்புப் பொய்த்துப்போன நிலையில், நிலைமைகளைச் சமாளிப்பதற்காக, புத்தாண்டு வாழ்த்துச் செய்தி தொடர்பிலான அறிக்கையில், ‘….எமது அரசியல் தலைமைகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு, தமது வேறுபட்ட கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்ப்பார்க்களாக. எமது மக்களின் சுகவாழ்வுக்கும் நிலைபேறான அரசியல் அந்தஸ்துக்குமாக, யாவரும் ஒன்றிணைந்து பாடுபட இப்புதிய புத்தாண்டு வழிவகுப்பதாக’ என்கிற விடயத்தை உள்ளடக்கியிருக்கின்றார்.

தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கும் ‘ஒரு கட்சி, ஓர் இயக்க அல்லது ஒரு கூட்டணி’ என்கிற ‘ஏக நிலை அரசியல்’ என்பது சில தருணங்களில் நன்மைகளைக் கொண்டு வந்து சேர்ந்தாலும் அதிக தருணங்களில் அதிகளவான பாதிப்புகளையும் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது.

அப்படியான நிலையில், குறிப்பாகப் பெரும் அனுபவங்களையெல்லாம் பெற்றுக்கொண்டு விட்ட 2009க்குப் பின்னரான அரசியல் என்பது, இரு பலமான அணிகளின் அரசியலாக மாற வேண்டும். அதுதான், ஆரோக்கியமான அரசியலுக்கு வலுச்சேர்க்கும். கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியொன்றுக்கான வாய்ப்புகளைக் கடந்த காலத்தில் பலரும் தோற்கடித்திருக்கின்றார்கள்.

அவ்வாறான வகிபாகத்தைத் தன்னுடைய தடுமாற்றங்களினால் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் எடுத்துக்கொள்ளும் போதுதான், அவர் மீதான விமர்சனமும் அதிகளவில் எழுகின்றது. கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியொன்று பலமாக உருவாகும் போது, தமிழ்த் தேசிய அரசியல் பலப்படும். அது, கூட்டமைப்பையும் பலப்படுத்தும்.