வில்லியம் பிளம்: உண்மைகளின் குரல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மிகவும் சவாலான பணிகளில் ஒன்று உண்மைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பது. அதை வாழ்நாள் முழுவதும் செய்பவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். குறிப்பாக, உலகில் மிகப் பெரும் சக்திகளுக்கு எதிராகப் பல்வேறு இடர்களையும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி, தொடர்ச்சியாகச் செயற்படுவதென்பது மிகக்கடினமான பணி. அதேநேரம், அவ்வாறானவர்கள் தான், வரலாறு தவறுதலாக எழுதப்படாமல் இருக்கப் பங்களிக்கிறார்கள். எமக்குச் சொல்லப்படும் வரலாறுகளின் பொய்களைத் தோலுரிக்கிறார்கள். வரலாறு என்றும், அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.இன்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முதல், Rogue State: A Guide to the World’s Only Superpower (அயோக்கிய தேசம்: உலகின் ஒரேயொரு வல்லரசுக்கான வழிகாட்டி) என்கிற புத்தகம் என் கைகளுக்குக் கிடைத்தது. பாடசாலை முடித்த பின்னர், சர்வதேச அரசியல் நகர்வுகளை அவதானிக்கத் தொடங்கியிருந்த காலப்பகுதி அது. எனது அக்கறையை உணர்ந்த ஒருவர், இப்புத்தகம் அண்மையில் வெளிவந்ததாகவும் அதைத் தான், வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்ததாகவும் சொல்லிக் கையளித்தார்.

உலக அரசியல் பற்றிய, எனது சிந்தனைகளைப் புரட்டிய புத்தகங்களில் இப்புத்தகத்துக்கு முக்கிய இடமுண்டு. அமெரிக்கா பற்றி, பாடசாலைக் காலங்களில் கட்டியெழுப்பப்பட்டிருந்த பிம்பம், அமெரிக்கா என்ற ‘உலகப் பாதுகாவலன்’ என்ற கருத்துருவாக்கம் ஆகியன, பாடசாலைக்குப் பின்ைனய காலங்களில் மெதுமெதுவாகக் கலையத் தொடங்கின. அதற்கு அச்சாணியாக இருந்தது, பேராசிரியரும் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவருமாகிய நோம் சோம்ஸ்கியினுடைய நூல்கள். அமெரிக்கா பற்றிய பிம்பங்களை உடைத்தெறிந்தது, வில்லியம் பிளம்மின் ‘அயோக்கிய தேசம்’ என்ற புத்தகமாகும்.

இந்தப் புத்தகத்தை எழுதிய வில்லியம் பிளம், தனது 85ஆவது வயதில், அண்மையில் காலமானார். தமிழ் மொழியில் அவரது படைப்புகள், அதிகளவில் மொழிபெயர்க்கப்படவில்லை. தமிழ்ச்சூழலில் பெரிதும் அறியப்படாத பெயர், வில்லியம் பிளம்பினுடையது.

ஓர் ஊடகவியலாளராக, வரலாற்றியல் அறிஞராக, செயற்பாட்டாளராக அவரது பங்களிப்புகள் நினைவுகூரப்பட வேண்டியவை. உலகின் ஒற்றைப் பேரரசுக்கெதிராகவும் அதன் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராகவும் ஓங்கி ஒலித்த குரல் பிளம்மினுடையது.

1933ஆம் ஆண்டு, அமெரிக்காவில் பிறந்த பிளம், அமெரிக்காவின் வெளியுறவுத் துறைசார் அலுவலராக வேண்டும் என்ற கனவோடு இருந்தவர், தனது கணிப்பொறித் துறைசார் திறமையைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் வௌியுறவு அமைச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

‘கொம்யூனிசத்துக்கு எதிரான புனிதப் போரில் பங்கேற்க வேண்டும்’ என்ற அவாவே, இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ள பிளம், வியட்னாம் போரில் அமெரிக்காவின் பங்கேற்பும் அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்டிருந்த மனிதகுல விரோதங்களையும் கண்ணுற்றார். 1967ஆம் ஆண்டு, வௌியுறவு அமைச்சகத்தில் இருந்து பதவி விலகினார். அதைத் தொடர்ந்து 1969இல், ‘Washington Free Press’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். மாற்றுச் சிந்தனைகளை மய்யப்படுத்தி, அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பத்திரிகையாக இது இருந்தது.

இதைத் தொடர்ந்து, 1970களின் தொடக்கத்தில் சிலியில் சோசலிசச் சிந்தனையுள்ள ஜனாதிபதி சல்வடோர் அயண்டே பதவிக்கு வந்தது முதல், அங்கு இடம்பெற்ற சோசலிச மாற்றங்களை, சிலியில் இருந்து அறிக்கைப்படுத்தினார். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஜ.ஏயின் துணையுடன் சிலியில் நடந்த இராணுவச் சதியையும் அதைத் தொடர்ந்த இராணுவச் சர்வாதிகாரத்தையும் கண்டார்.
இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை தொடர்பான முக்கியமான விமர்சகராக உருவெடுத்தார். பல முக்கியமான நூல்களை எழுத ஆரம்பித்தார். இறுதிவரை அவரது மாதாந்த வெளியீடான ‘ Anti-Empire Report ’ (வல்லரசுக்கெதிரான அறிக்கை) மிகவும் முக்கியமான வௌியீடுகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.

ஊடகங்களில் சொல்லப்படாத, தணிக்கை செய்யப்பட்ட, பல செய்திகளைத் தொடர்ந்தும் அறிக்கைகளின் ஊடாக, பிளம் வெளியுலகத்துக்கு வழங்கினார்.

சதாம் ஹூசைனுக்கு இரசாயன ஆயுதங்களை, அமெரிக்கா வழங்கியதையும் அதைப் பயன்படுத்தியே குர்திஷ்கள் மீது சதாம் தாக்குதல் நடத்தியதையும் அமெரிக்காவுக்கும் சதாமுக்கும் இடையிலான நெருக்கமான உறவையும் அம்பலப்படுத்தியவர் வில்லியம் பிளம். இதற்காக, சிறந்த ஊடகவியலாளருக்கான விருதை 1998ஆம் ஆண்டு பெற்றார்.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில், பிளம்மின் பங்களிப்பு முக்கியமானதாகும். எமக்குத் தெரியாத, சொல்லப்படாத அமெரிக்காவின் இன்னொரு முகத்தை, எமக்குக் காட்டிய பெருமை வில்லியம் பிளம்மைச் சாரும். பிளம்பின் நூல்கள் சொல்லிச் சென்றிருக்கின்ற தகவல்களுக்குச் செல்லமுதல், அமெரிக்கா குறித்த சில விடயங்களை முதற்குறிப்புகளாய்ச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவின் கதை

சுதந்திரத்தின் புகலிடம், உலகளாவிய மனித உரிமைக் காவலன், கருத்துச் சுதந்திரத்தின் முன்னோடி, போராளி என்றெல்லாம் அமெரிக்காவின் புகழ், உலகெங்கும் பரவியிருக்கிறது. ஆனால் அடிமைகளின் உதவியுடன், கறுப்பர்களுக்கு எதிரான மிகக்கடுமையான ஒடுக்குமுறையின் ஊடே, அமெரிக்காவின் பொருளாதார மேன்மை எட்டப்பட்டது. இந்தக் கதை எமக்குச் சொல்லப்படுவதில்லை.

இருபதாம் நூற்றாண்டில், உலகப் பொருளாதாரத்தில், நாடுகளின் செல்வத்தைத் தீர்மானிக்கும் வளமாக, எண்ணெய் எவ்வகை முக்கியத்துவம் பெற்றதாக இருந்ததோ, அதேயிடத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பருத்தி இருந்தது. அமெரிக்காவின் ஏற்றுமதிகளில் 50 சதவிகித இடத்தைப் பருத்தி பிடித்திருந்தது.

இதன் மூலம், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம் அடிமைகளால் கட்டமைக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, அடிமைகளுக்குக் கடன்பட்டிருக்கிறது. முதலாளித்துவமும் அடிமைமுறையும் அடிப்படையிலேயே பிணைந்துள்ளன.

முதலாளித்துவம் இலவச உழைப்பு அடிப்படையிலானது; அடிமைமுறை கட்டாய உழைப்பு அடிப்படையிலானது. ஆயினும், நடைமுறையில், அடிமைத்தனம் இல்லாமல் முதலாளித்துவம் சாத்தியமாகி இருந்திருக்காது.

அதைத் தொடர்ந்த காலகட்டத்தில், அமெரிக்கா உலகெங்கும் ஆக்கிரமிப்புகளையும் தாக்குதல்களையும் சதிகளையும் கலகங்களையும் முன்னெடுத்து, உலக நாடுகளைத் தனக்குச் சார்பாகவும் தனது வளச்சுரண்டலுக்கு வாய்ப்பாகவும் பாவித்தது. இன்று உலகம் முழுவதும் 138 நாடுகளில், கிட்டத்தட்ட 800 இடங்களில் அமெரிக்காவுக்கு இராணுவத் தளங்கள் இருக்கின்றன. அதாவது, உலகில் கிட்டத்தட்ட 75 சதவீதமான நாடுகளை, அமெரிக்காவின் கொடுங்கரங்கள் சூழ்ந்துள்ளன.

எஞ்சிய நாடுகள் பலவற்றில், நேரடியாக இராணுவத்தளம் இல்லையென்றாலும் இராணுவக் கூட்டுப்பயிற்சி, பொருளாதாரப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அந்நாடுகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் அமெரிக்கா வைத்துள்ளது.

இது எப்படிச் சாத்தியமானது, இதை எவ்வாறு அமெரிக்கா தக்கவைக்கிறது, இந்த நிலையை அமெரிக்கா எவ்வாறு உருவாக்கியது என்பதை வில்லியம் பிளம் விளக்குகிறார்.

அயோக்கிய தேசம்: உலகின் ஒரேயொரு வல்லரசுக்கான வழிகாட்டி

வில்லியம் பிளம்மினுடைய இந்தப் புத்தகம், இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்த 50 ஆண்டுகளில், உலக அலுவல்களில் அமெரிக்கா எவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பதை அறிவதற்கான, முக்கிய வழிகாட்டியாகும்.

மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் முதலாவது பகுதி Ours and Theirs: Washington’s Love/Hate Relationship with Terrorists and Human-Rights Violators (எங்களதும் அவர்களதும்: பயங்கரவாதிகளுடனும் மனித உரிமையை மீறுபவர்களுடனான வொஷிங்டனின் கூடலும் ஊடலும்) என்பதாகும். இதன் கீழ், அமெரிக்கா எவ்வாறு பயங்கரவாதிகளை உருவாக்கி, வளர்த்துத் தனது தேவைகளுக்குப் பயன்படுத்துகிறது. பின்னர், எவ்வாறு அவர்களுடன் முரண்பட்டு, அவர்களை அழிக்கிறது என்பது உள்ளிட்ட தரவுகள் ஆதாரங்களுடன் குறிக்கப்பட்டுள்ளன.

உலகத்தை ‘அமெரிக்க முறைப்பட்ட உலகாக’ (Pax Americana) மாற்ற வேண்டும் என்ற மேலாதிக்கவாத சிந்தனை, 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே அமெரிக்க ஆளும் வர்க்கத்திடம் தோன்றிவிட்டது.

19ஆம் நூற்றாண்டில் மட்டும், அமெரிக்கா 114 போர்களை நடத்தியுள்ளது. முதல் உலகப் போர் தொடங்கும் முன்பே, உலகத்தை மறுபங்கீடு செய்து கொள்வதற்கான யுத்தத்தை, ஸ்பெய்ன் நாட்டுடன் அமெரிக்கா நடத்தியது.

ஸ்பெய்னின் கொலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடி, 1821இலேயே விடுதலை பெற்ற மெக்ஸிகோ மீது போர் தொடுத்து, அதன் நிலங்களை அமெரிக்கா ஆக்கிரமித்தது. இன்று அமெரிக்காவின் மாநிலங்களான கலிபோர்னியாவும் நியூமெக்ஸிகோவும் சென்ற நூற்றாண்டில் மெக்ஸிகோவின் பகுதிகளாக இருந்தவை ஆகும்.

இந்த யுத்தத்தின் போது, இரண்டுகோடி மெக்ஸிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். இதைத் ‘தவிர்க்க இயலாத இயற்கை விதி’ என அமெரிக்கா சொன்னது. இதேபோலவே பிலிப்பைன்ஸையும் போர்ட்டோ ரிகோவையும், ஹவாய் தீவுகளையும் அமெரிக்கா ஆக்கிரமித்தது.

இதேபோலவே, இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டுகள் தான், இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக, ஒரு பொய் தொடர்ந்தும் சொல்லப்பட்டு வருகிறது.

ஹிட்லரின் படைகளைப் பல முனைகளில் சோவியத் ஒன்றியத்தின் செம்படை தோற்கடிக்கத் தொடங்கிய உடனேயே ஜேர்மனியின் முடிவு உறுதிசெய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் செம்படைகள் மஞ்சூரியாவில் நுழைந்தவுடனேயே ‘சரணடையத் தயார்’ என்று ஜப்பான், சோவியத் ஒன்றியத்திடம் சொல்லத் தொடங்கியது. இதை அனுமதிக்க, அமெரிக்கா விரும்பவில்லை. இது நிகழுமாயின் போருக்குப் பிந்தைய உலக அமைப்பில், சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு அதிகரிக்கும். மேலும், சோவியத்தின் செல்வாக்குக்குள் ஜப்பான் உட்படும். எனவே, இதைத் தடுக்க அமெரிக்கா யோசித்தது.

உலகின் பிரதான சக்தியாகத் தன்னை வெளிக்காட்ட வேண்டும். அதேவேளை, தனது அணுசக்தி வல்லமையைச் சோதிக்க வேண்டும் என அமெரிக்கா முடிவெடுத்தது. அதற்கு விலையாக இரண்டு இலட்சம் அப்பாவிப் பொதுமக்கள் பலிக்கடா ஆக்கப்பட்டார்கள். இவையெல்லாம், இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு முந்திய நிகழ்வுகள். பிளம், இவற்றை ஒரு முன்கதைச் சுருக்கமாக முன்வைக்கிறார். இதைத் தொடர்ந்து, இந்த முதலாவது பகுதி, உலகின் சர்வாதிகாரிகளுக்கும் கொலைகாரர்களுக்கும் அமெரிக்கா எவ்வாறு துணைபோனது என்பதைச் சான்றுகளுடன் விளக்குகிறது.

அதேவேளை, ‘ஆப்கான் பயங்கரவாதிகள்: அமெரிக்கா உலகுக்கு அளித்த பரிசு’ என்ற கட்டுரை, எவ்வாறு முஜாகிதீன்கள் முதல் அல்கைடா வரை, இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களின் உருவாக்கம் முதல் வளர்ச்சி வரை அனைத்தையும் ஆதாரங்களுடன் முன்வைக்கிறது.

இப்புத்தகத்தின் இரண்டாவது பகுதி, பேரிழிவு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்திய சந்தர்ப்பங்களையும் அதற்கான காரணிகளையும் ஆராய்கிறது. கொத்துக் குண்டுகள் முதல், இரசாயன ஆயுதங்கள் வரை அனைத்தையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எவ்வாறு அமெரிக்கா பயன்படுத்தியது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

1999ஆம் ஆண்டு யுகொஸ்லாவியா மீது 1,100 கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன. அதில் ஒவ்வொன்றிலும் 202 குண்டுகள் இருந்தன. ஆக 222,200 குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஐந்து சதவீதமானவை விழுந்தும் வெடிக்காமல் நிலக்கண்ணிவெடி போல, நிலத்தில் புதையுண்டன.

இதேபோல, 1965-73 வரையான காலப்பகுதியில் வியட்னாம் யுத்தத்தின் போது, லாவோஸ் மீது இரண்டு மில்லியன் தொன் குண்டுகள் வீசப்பட்டன. இது நிலவிரிப்புக் குண்டுத்தாக்குதல் (Carpet bombing) என அழைக்கப்பட்டது. அதாவது எந்த மிச்சமுமின்றி அனைத்தையும் இல்லாமல் செய்யும் குண்டு வீச்சு முறையாகும்.

இதேபோலவே, கரீபியன் தீவுகளின் பகாமாத் தீவுகள், கனடா, சீனா, கொரியா, வியட்னாம், லாவோஸ், பனாமா, கியூபா ஆகிய நாடுகள் மீது இராசாயன ஆயுதத்தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொண்டுள்ள தகவல்களையும் இந்நூல் தருகிறது.

இந்நூலின் இறுதிப்பகுதி, ‘உலகும் அதற்கெதிரான அயோக்கிய தேசமும்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் மூன்று கட்டுரைகள் பிரதானமானவை.

முதலாவது, அமெரிக்கா எவ்வாறு தேர்தல்களில் தலையிடுகிறது என்பது. அக்கட்டுரை, 1950 தொடக்கம் 1998 வரையான காலப்பகுதியில் 34 நாடுகளின் தேர்தல்களில் அமெரிக்கா தலையிட்டுள்ளது என்பதையும் அத்தலையீடு எங்கே, எவ்வாறு, எதற்காகச் செய்கிறது என்பதையும் ஆதாரங்களுடன் விளக்குகிறது.

இரண்டாவது கட்டுரை, நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டு, 28 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்பட்டதன் பின்னணியில் இயங்கிய அமெரிக்காவின் கரம் பற்றியது. எந்த அமெரிக்கா அவரைச் சிறைக்கு அனுப்பியதோ, அதையே தனது நெருங்கிய தோழனாக அவர் பார்த்தது துரதிர்ஷ்டமே.

மூன்றாவது கட்டுரை, உலகளாவிய போதைப் பொருள் வியாபாரத்துக்கும் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஜ.ஏக்கும் உள்ள தொடர்பு. இக்கட்டுரை தரும் ஆதாரங்கள், உலகின் பிரதான போதைப்பொருள் விற்பனையாளராக சி.ஜ.ஏ செயற்படுகிறது என்ற அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறுகின்‌றது.

2006ஆம் ஆண்டு, ஒசாமா பின்லாடன் தனது அறிக்கையில், “அமெரிக்கா என்ன செய்கிறது என்பதைத் தெரிய வேண்டுமாயின், முதலில் அமெரிக்கர்கள் பிளம்பின் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் இரண்டு நூல்கள்

வில்லியம் பிளம் எழுதிய Killing Hope: U.S. Military and CIA Interventions Since World War II (நம்பிக்கையைக் கொலை செய்தல்: இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க இராணுவம் உளவுத்துறைத் தலையீடுகள்) என்ற புத்தகம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொடங்கி, 1995ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் அமெரிக்கா தலையிட்டுள்ள 55 நாடுகளில் நடந்த விடயங்களை முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளது.

அமெரிக்கத் தலையீடுகள் தொடர்பில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நூல் என்று இதற்குத் தனது அங்கிகாரத்தை நோம் சோம்ஸ்கி வழங்கியுள்ளார்.

இவரது அண்மைய நூலான, America’s Deadliest Export: Democracy – The Truth About US Foreign Policy and Everything Else (அமெரிக்காவின் பயங்கரமான ஏற்றுமதி: ஜனநாயகம் – அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, பல தொடர்பிலான உண்மைகள்) ஜனநாயகம் எவ்வாறு அமெரிக்க நலன்களைக் காக்கும் கொள்கையாக மாறியது.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதன் பேரால், அமெரிக்கா எவ்வாறு நாடுகளின் உள்நாட்டு அலுவல்களில் தலையிடுகிறது? அதேவேளை, உள்நாட்டில் ஜனநாயக மறுப்பு என்பது எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.

உண்மைகளை உரத்துச் சொல்வது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் வில்லியம் பிளம். ஓர் ஊடகவியலாளன் செய்ய வேண்டிய பணி என்ன என்பதைச் சரியாக உணர்ந்தவர் பிளம். அவரது ‘அமெரிக்காவின் பயங்கரமான ஏற்றுமதி’ என்ற புத்தகத்தை பிளம் பின்வருமாறு நிறைவு செய்கிறார்:

‘தோழர்களே பலர் என்னிடம் ‘நாம் என்ன செய்யவியலும்?’ என்று கேட்கிறார்கள். நாம் முதலில் கற்போம், தொடர்ச்சியாகக் கற்போம், நாம் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்லுவோம், அவர்களுக்குக் கற்பிப்போம். எம்போன்ற மாற்றுக் கருத்துள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து திரளாகும்போது மாற்றம் நிகழும்; நிகழ்ந்தே தீரும். அதற்கான விதையை நாம் தூவ வேண்டும். நாம் தூவுகிற விதையே நாளைய மாற்றத்துக்கான முதற்படி’.