விஸ்வரூபம் எடுக்கும் “ரூ.570 கோடி”..

ரூ. 570 கோடி விவகாரத்தில் சிபிஐ புதிய தகவலை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலை மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குத்தான் பெரும் சிக்கல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இவர்தான் ஸ்டேட் வங்கியின் பணம் இது என்று அடித்துக் கூறியுள்ளார். நாட்டின் முதன்மையான வங்கி இவ்வளவு பெரிய பணத்தை போலி பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற செயல் மிகப் பெரிய சந்தேகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ கூறியுள்ள புதிய தகவல்களைப் பார்த்தால் மேலும் மேலும் சந்தேகங்கள் கூடியபடியே உள்ளன.
பதிவெண்ணை பரிசோதிக்காதது ஏன்?


உரிய பாதுகாப்பு இல்லாமல் அனுப்பிய குழப்பமே இன்னும் தீராத நிலையில் அந்த லாரிகளின் பதிவெண்களே போலியானவை என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
கொள்ளையர்கள் எடுத்துச் செல்வது போல கிட்டத்தட்ட கொள்ளையர்கள் பணத்தை வங்கியிலிருந்து திருடிக் கொண்டு சென்றதைப் போல இது நடந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சாதாரணமாக ஒரு வங்கியில் போய் சில ஆயிரம் ரூபாய் பணம் எடுப்பதாக இருந்தால் கூட பலமுறை நம்மை ஏற இறங்க பார்ப்பார்கள். ஆனால் இவ்வளவு பெரிய பணத்தை டுபாக்கூர் லாரிகளில் போட்டு அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஜேட்லி விசாரிக்கப்படுவாரா?
தற்போது சிபிஐயின் பூர்வாங்க விசாரணை மூலம் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பும் எழுந்துள்ளது. மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இந்தப் பணம் ஸ்டேட் வங்கியுடையது என்று கூறியிருப்பதால் அவரையும் சிபிஐ விசாரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த அடிப்படையில் அவர் அவ்வாறு கூறினார் என்றும் விசாரிக்கப்படலாம்.
ரிசர்வ் வங்கி விசாரிக்கப்படுமா?
ரிசர்வ் வங்கியும் இது ஸ்டேட் வங்கிப் பணம்தான் என்று கூறியுள்ளது. எனவே அதுகுறித்தும் சிபிஐ தீவிரமாக விசாரிக்கும். இங்கு யாரேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் சிக்க வாய்ப்புண்டு.
ஸ்டேட் வங்கியில் சிக்கப் போவது யார்?
ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பலரும் கூட இந்த விவகாரத்தில் சிக்க வாய்ப்புண்டு. காரணம், பணம் பிடிபட்ட 24 மணி நேரம் கழித்தே இது எங்க பணம் என்று உரிமை கொண்டாடினர் ஸ்டேட் வங்கி அதிகாரிகள். ஏன் இந்தத் தாமதம் என்பதுதான் சிபிஐயும் முன் வைத்துள்ள மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. இங்கு யார் தவறு செய்திருப்பார்கள் என்பதையும் சிபிஐ கண்டுபிடிக்கும்.
அரசியல்வாதிகள் சிக்குவார்களா?
இந்தப் பணத்தை சில கட்சித் தலைவர்கள் கூறியதைப் போல முக்கியமான அரசியல் கட்சி அனுப்பியதா என்ற கோணத்திலும் சிபிஐ விசாரிக்கலாம். அப்படி நடக்கும்போது அரசியல் வட்டாரத்திலும் யாரேனும் சிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
கரூர் அன்புநாதன் கரூர்
அன்புநாதன் வழக்கையும் கூட சிபிஐ ஆராயலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. காரணம், மிகப் பெரிய அளவில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து கண்டெய்னர்கள் மூலமாக பணம் தமிழகம் முழுவதும் பட்டுவாடா செய்யப்பட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். பல அரசியல் கட்சிகளும் கூட இதுகுறித்து புகார் கூறியுள்ளன. அப்படிப் பணம் பெறப்பட்டவர்களில் அன்புநாதனும் ஒருவராக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் உள்ளது. அதுகுறித்தும் சிபிஐ விசாரிக்கலாம்.
சிறுதாவூர் கண்டெய்னர்களா?
சென்னை அருகே சிறுதாவூரில் அதிகாலையில் கண்டெய்னர் லாரிகள், சிறிய சிறிய லாரிகள் பெருமளவில் நின்றிருந்ததாக முன்பு செய்திகள் வெளியாகின. அந்த கண்டெய்னர் லாரிகளுக்கும், இந்த கண்டெய்னர்களுக்கும் தொடர்பு உண்டா, இவையும் அவையும் ஒன்றுதானா என்ற ரீதியிலும் சிபிஐ விசாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சிபிஐ விசாரணை மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. யாருடைய தலையெல்லாம் உருளப் போகிறது என்ற பரபரப்பும் அதிகரித்துள்ளது.