வெட்கம் இல்லையா?

1974 இல் சிவகுமாரன் தற்கொலைசெய்தார்.1975 இல் துரையப்பா தமிழ் துரோகி என சுடப்பட்டார்.2009 இல் புலிகள் அழிக்கப்பட்டனர்.தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி 35 வருடங்கள் போராடி இருக்கிறார்கள்.

ஒரு போராட்டம்தொடங்கும்போது ஏன் போராடுகிறோம்? எதற்காக போராடுகிறோம்? யாரை எதிர்த்து போராடுகிறோம் ? என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.அதேபோல யார்எதிரி? யார் நண்பன் ? என்பதிலும் தெளிவு வேண்டும்.ஆனால் இந்த ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் இளைஞர்கள் எத்தனை பேருக்கு இது பற்றிய அறிவு இருந்தது?

தமிழ் ஈழக்கோரிக்கையை முன் வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 இல் தேர்தலில் நின்றது.அப்போது ஒரு பத்திரிகையாளர் பேட்டியில் அமிர்தலிங்கத்தை நோக்கிய கேள்வியில் உங்களுக்கு எந்த நாடு உதவும் எனகேட்கப்படுகிறது.அப்போது அவர் பிரித்தானியாவே உதவ முன்வரும் என்றார்.

அந்த அமிர்தலிங்கத்துக்கே எந்த நாடு உதவும்? அல்லது எந்த நாட்டை உதவி கோரலாம் என்பது தெரியவில்லை.உள்நாட்டின் அரசியலும் தெரியவில்லை.சர்வதேச அரசியல் நிலைப்பாடுகளும் தெரியவில்லை.இந்த நிலையில் அமிர்தலிங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பிரபாகரன் போன்றவர்களுக்கு அரசியல்பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்.

தமிழ் இளைஞர்கள் ஓரளவு சிறு ஆயுதக் குழுக்கள் ஆனபின்பும் சந்ததியார்,சுந்தரம்,பத்மநாபா ,வரதராஜபெருமாள்,மனோ மாஸ்ரர் போன்றவர்களைத் தவிர ஏனையோரின் அரசியல் அறிவு என்பது சூனியமாகவே இருந்தது.

தன்னை ஒரு மாக்சிசவாதி,இடதுசாரி என அறிமுகப்படுத்தி புலிகளின் ஆலோசகராக பிரபாகர்னின் நம்பிக்கைக்கு உகந்தவரான பாலசிங்கம் புலிகளை சரியான வழியில் நடத்தவில்லை.எம்.ஜி.ஆரை நம்பினால் ஆதரவு இருந்தால் போராட்டம் வெல்லலாம் என்ற மாயையை புலிகளுக்குக் கொடுத்தார்.

ஒரு இடதுசாரிக்கு உள்நாட்டு அரசியலை எப்படி கட்டி எழுப்புவது என்பது தெரியவில்லை.ஒரு போராட்டத்துக்கு எந்த சக்தியை நம்புவது என்பதும் தெரியவில்லை.எந்தவொரு முதலாளித்துவ நாடாவது ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கு நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவுமா? அப்படி ஒரு வரலாறு இல்லை.

அன்றைய நாட்களில் சோவியத் யூனியன் அல்லது அதன் ஆதரவு நாடுகள் ஆதரவு தந்தால் மட்டுமே போராட்டம் வெற்றிபெறும்.ஆனால் அன்று இந்தியா சோவியத் யூனியனுக்கு வேண்டிய நாடாக இருந்தது.எனவே இந்தியாவை மீறி சோவியத் யூனியன் ஆதரவு தராது.அதுவே யதார்த்தநிலை.இதை புரியாமல் புலிகளுக்கு ஆலோசனை வழங்கிய புத்திசாலி அன்ரன் பாலசிங்கம்.

இலங்கையில் சந்திரிகா சமாதான தீர்வை முன்வைத்தபோது என்ன மாதிரியான தீர்வு தமிழ் மக்களுக்கு நல்லது என புலிகளுக்கு தெரியவில்லை.எப்படியான தீர்வு நன்றாக இருக்கும் என ஆராய அய்ரோப்பிய நாடுகளுக்கு அன்ரன் பாலசிங்கம்,தமிழ்செல்வன்,கருணா எல்லோரும் பறந்தார்கள்

முப்பது வருடம் போராட்டத்தை நடத்தியவர்களுக்கு தமிழ் மக்களுக்கு எப்படியான தீர்வு வேண்டும் என்று தெரியவில்லை.நோர்வேக்கும் சுவிசுக்கும் ஓடுகிறார்கள்.அதுவும் நேட்டோ நாடுகளில் ஒன்றான நோர்வேயை நம்பி.கொஞ்சமாவது அறிவில்லை.

ஒரு விடுதலைப் போராட்ட அமைப்புக்கு சர்வதேச அரசியல் தெரியவில்லை.அமெரிக்க நேட்டோ நாடுகள் பற்றிய அறிவு இல்லை.அவர்களை உள்ளே புகவிட்டால் என்ன நடக்கும் என்பதும் தெரியவில்லை.நோர்வேயோடு கொஞ்சிக் குலாவினார்கள்.எப்படி இவர்கள் அரசியல் அறிவு.

இப்படியான ஒரு புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களே கருணாநிதியின் மரணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.கருணாநிதி ஒரு முதலாளித்துவ சார்புடையவர்.அவரால் ஒரே மொழி,ஒரே இனம் என்ற வகையில் தார்மீக ஆதரவையே வழங்கமுடியும்.அதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது.

கருணாநிதியை குற்றம் கூறுபவர்கள் அரசியல் அறிவு அற்றவர்களே.இன்னும் சிலரால் புலிகளின் வீழ்ச்சியை தாங்க முடியவில்லை.எனவே பழியை யார் மீதாவது போட முனைகிறார்கள்.

(Vijaya Baskaran)